நடப்பு
Published:Updated:

நிறைவுச் சான்றிதழ் தரமறுக்கும் பில்டர்... வழக்குத் தொடுக்கலாமா?

நிறைவுச் சான்றிதழ் தரமறுக்கும் பில்டர்... வழக்குத் தொடுக்கலாமா?


?சமீபத்தில் வங்கிக் கடன் மூலமாக அடுக்குமாடி வீடு வாங்கியிருந்தேன். அந்த வீட்டுக்கான நிறைவுச் சான்றிதழை (completion certificate) பில்டர் வாங்கித்தர மறுக்கிறார். இதைப் பெற வழி இருக்கிறதா?

நந்தகுமார், பெங்களூரு. அழகுராமன், வழக்கறிஞர்.

“வீட்டுக்கான முழுத் தொகையையும் கட்டுமான நிறைவுச் சான்றிதழை பெற்ற பின்புதான் கொடுத்திருக்க வேண்டும். இதைப் பெறாமல் மீதித் தொகையைக் கொடுத்தது தவறு. இந்த நிலையில் வீடு வாங்கியவர்கள் அதிக விழிப்பு உணர்வுடன் இருப்பது அவசியம். பில்டரிடம் நிறைவுச் சான்றிதழை பெற்றுத் தருமாறு கேட்கலாம். அப்படியும் சான்றிதழ் கிடைக்கவில்லையெனில், நுகர்வோர் நீதிமன்றம் அல்லது சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.”

?என் வயது 30. சொத்து விற்றதன் மூலம் என் பங்காகக் கிடைத்த 1 கோடி ரூபாயை 9% வட்டி வரும் ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்ய உள்ளேன். இந்த வருமானத்துக்கு வரிச் செலுத்த வேண்டுமா?

தமிழ்ச்செல்வன், காஞ்சிபுரம்.காந்த், ஆடிட்டர்.

“ஃபிக்ஸட் டெபாசிட் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு கட்டாயம் வரி கட்ட வேண்டும். வேறு எந்தவிதமான வருமானமும் இல்லை என்கிறபட்சத்தில், வட்டி வருமான தொகைக்கு வருமான வரம்புக்கு ஏற்ப வரிச் செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, வட்டி வருமானத்தில் 2.5 லட்சம் ரூபாய் வரை எந்தவிதமான வரியும் செலுத்த தேவையில்லை. 2.5 முதல் - 5 லட்சம் ரூபாய் வரை 10 சதவிகிதமும், 5 - 10 லட்சம் ரூபாய்க்கு 20 சதவிகித வரியும் செலுத்த வேண்டியிருக்கும். இதனுடன் கல்வி வரி 3 சதவிகிதம் சேர்த்து செலுத்த வேண்டியிருக்கும். ஒரு கோடி ரூபாய்க்கு 9 சதவிகித வட்டி எனில், உங்களுக்கு ஆண்டுக்கு 9 லட்சம் ரூபாய் வட்டி கிடைக்கும். இதற்கு கல்வி வரியும் சேர்த்து சுமார் 1,08,150 ரூபாய் வரிச் செலுத்த வேண்டியிருக்கும்.”

நிறைவுச் சான்றிதழ் தரமறுக்கும் பில்டர்... வழக்குத் தொடுக்கலாமா?

?மாதம் 2 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய முடியும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அந்தப் பணம் தேவையில்லை. எனக்கேற்ற ஃபண்டுகளைக் கூறவும்.

-@& பாலாஜி, என்.காந்த், நிதி ஆலோசகர்.

“பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம். அதாவது, பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட் மற்றும் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட் ஆகியவற்றில் தொடர்ந்து ஐந்து வருடம் முதலீடு செய்யலாம்.”


?கடந்த 2005-ல் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மனை வாங்கினேன். அதை 2014 வருடத்தில் 20 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தேன். லாபத்துக்கு வரிச் செலுத்த வேண்டுமா?

 செல்வம், மதுரை. சத்திய நாராணயணன்.

‘‘மனை வாங்கி மூன்றாண்டு கழித்து விற்பதன் மூலமாகக் கிடைக்கும் லாபத்துக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரிச் செலுத்த வேண்டும். அதாவது, நீங்கள் மனை வாங்கும்போது இருந்த பணவீக்க விகித புள்ளி என்ன, மனையை விற்கும்போது இருக்கும் பணவீக்க விகித புள்ளி என்ன என்பதைப் பார்க்க வேண்டும்.

(மனை வாங்கிய விலை / வாங்கும்போது இருந்த பணவீக்க விகித புள்ளி ) X மனையை விற்பனை செய்யும்போது உள்ள பணவீக்க விகிதப் புள்ளி என்கிற ஃபார்முலா மூலம் பணவீக்க விகித சரிக்கட்டல் (இண்டக்சேஷன்) கணக்கிட வேண்டும். இதில் கிடைக்கும் மதிப்பை மனையை விற்பனை செய்த தொகையிலிருந்து  கழித்தால் வருவதுதான் நீண்டகால ஆதாயம் ஆகும். இதற்கு 20% நீண்ட கால மூலதன ஆதாய வரிச் செலுத்த வேண்டும்.

நிறைவுச் சான்றிதழ் தரமறுக்கும் பில்டர்... வழக்குத் தொடுக்கலாமா?

 மனையை விற்பனை செய்த பணத்தில் புதிதாக வீடு வாங்கலாம். குறிப்பிட்ட காலம் கழித்து வீடு வாங்க போகிறீர்கள் என்றால் வங்கியில் கேப்பிடல் கெயின் ஃபிக்ஸட் டெபாசிட்டில் மூலதன ஆதாயத் தொகையை முதலீடு செய்யலாம். இதில் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளுக்குதான் வைத்திருக்க முடியும். அதற்குமேல் பணத்தை வைத்திருந்தால் மூலதன ஆதாயத் தொகை  மற்றும்  வட்டி வருமானத்துக்கும் சேர்த்து வரி செலுத்த வேண்டும்.

வீடு வாங்கப்போவதில்லை என்றால் ஆர்இசி பாண்டுகளில் முதலீடு செய்யலாம். இதற்கு மூன்று ஆண்டுகள் லாக் இன் பீரிட் இருக்கும். சுமார் 6.5 சதவிகிதம் வட்டி கிடைக்கும். இந்த வட்டி வருமானத்தை உங்களின் வருமானத்துடன் சேர்த்து வரி செலுத்த வேண்டும். மூன்று ஆண்டுகள் கழித்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.’’

?பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளேன். என் மனைவியை நாமினியாக நியமித்துள்ளேன். இதை டீமேட் கணக்கில் மட்டும் பதிவு செய்தால் போதுமா?

 ஜெயராமன், திண்டுக்கல். ஏ.ஆர்.வாசுதேவன், மேலாளர், சிடிஎஸ்எல்.

நிறைவுச் சான்றிதழ் தரமறுக்கும் பில்டர்... வழக்குத் தொடுக்கலாமா?

“நீங்கள் முதலீடு செய்திருக்கும் அனைத்து பங்குகளும் டீமேட் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தால், டீமேட் கணக்கில் மட்டும் நாமினியைக் குறிப்பிட்டால் போதும். ஏனெனில், டீமேட் கணக்கு வைத்திருக்கும் ஒருவருக்கு திடீரென ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், நாமினிக்கு டீமேட் கணக்கில் இருக்கும் பங்குகளை விற்று பணமாக்க இது மிகவும் உதவியாக இருக்கும்.”

?உரிமைப் பங்குகள் வெளியிடும் விவரத்தை நிறுவனங்கள் முதலீட்டா ளர்களுக்கு எப்படி தெரிவிக்கும், அந்த விவரம் கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

 உமா, சென்னை. வெங்கடேஸ்வரன், இயக்குநர், மெக்கனோசி அண்ட் கோ.

“உரிமைப் பங்குகளை வெளியிடும் நிறுவனங்கள் அந்த விவரத்தை பத்திரிகைகளில் விளம்பரம் செய்யும். அந்த நிறுவனத்தின் இணையதளத்தில், என்எஸ்சி, பிஎஸ்சி எக்ஸ்சேஞ்சுகளின் இணையதளத்திலும் தகவலை வெளியிடும். இதைத் தவிர்த்து முதலீட்டாளர்களின் முகவரிக்கு கடிதம் மற்றும் மெயில் மூலமாகத் தெரிவிப்பார்கள்.  இந்தத் தகவல் கிடைக்காத முதலீட்டாளர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

அதாவது, நிறுவனப் பங்குகளை மாற்றித்தரும் ஏஜென்சிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த ஏஜென்சி குறித்த விவரம் நிறுவனத்தின் இணையதளத்திலே இருக்கும். உங்களின் ஐடி மற்றும் டீமேட் எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு மெயில் அல்லது கடிதம் எழுதினால் போதும். இதற்கான விண்ணப்பங்கள் உங்களுக்குக் கிடைக்கும்.  மேலும், ஒரு முதலீட்டாளர் எவ்வளவு பங்குகளை வாங்க முடியும் என்ற விவரமும் அதில் இருக்கும். அதாவது, முதலீட்டாளர்கள் ஏற்கெனவே வைத்திருக்கும் பங்குகளின் எண்ணிக்கையில் அது அமையும்.”

நிறைவுச் சான்றிதழ் தரமறுக்கும் பில்டர்... வழக்குத் தொடுக்கலாமா?

?தங்கத்தின் விலை கடந்த ஒரு வருடமாக பெரிய ஏற்றம் இல்லாமல் உள்ளது. இந்த நிலையில் நீண்ட கால நோக்கில் கோல்டு இடிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யலாமா?

-கோபால், சென்னை. ஜெ.ஜெயக்குமார், நிதி ஆலோசகர்.

“உங்களின் மொத்த முதலீட்டில் 5 - 10 சதவிகிதத் தொகையை தங்கத்தில் முதலீடு செய்யலாம். முதலீடு முழுவதையும் கோல்டு இடிஎஃப் திட்டத்தில் வைத்திருப்பது தவறு. ஏனெனில், நீண்ட காலத்தில் தங்கத்தின் வருமானமானது பணவீக்க விகித அளவுக்கே இருக்க அதிக வாய்ப்புள்ளது. மேலும், தங்கத்தின் மூலமாக எந்தவிதமான சொத்தும் உருவாகாது. எனவே, தேவைக்கேற்ப கோல்டு இடிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஆனால், இடிஎஃப் திட்டங்களைவிட எஸ்ஐபி முறையில் கோல்டு ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது.”