நடப்பு
Published:Updated:

இனி லார்ஜ் கேப் பங்குகள் அதிக லாபம் தரும்...!

சி.சரவணன்நிமேஷ் ஷா, நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட்

சிறப்புப் பேட்டி

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி நிமேஷ் ஷா அண்மையில் சென்னைக்கு வந்திருந்தார். அப்போது அவர் நாணயம் விகடன் இதழுக்கு சிறப்புப் பேட்டி அளித்தார்.

?முடிந்த செப்டம்பர் காலாண்டில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையில் ரூ.16,193 கோடி முதலீடு செய்திருக்கின்றன. இது, கடந்த 14 வருடங்களில் மிக அதிகம். இந்த நிலை தொடருமா?

‘‘மே 15-க்குப் பிறகு நம் நாட்டில் நிலைமை மாறி இருக்கிறது. பங்குகளில் அந்நிய நிதி நிறுவனங்களை (எஃப்ஐஐகள்) விட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், அதிக முதலீட்டை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கின்றன. இந்தியாவின் வளர்ச்சி என்பது நிச்சயமானதாக இருப்பதால் பங்குச் சந்தையில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் முதலீடு தொடரவே அதிக வாய்ப்பு இருக்கிறது.

இந்தியாவில் 2007-ல் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் தொகை ரூ.2 லட்சம் கோடியாக இருந்தது. இது 2014ல் ரூ.3 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், அடுத்த மூன்றாண்டு களில் இந்தத் தொகை ரூ.6 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும்.

தற்போதைய நிலையில் இந்தியர்களில் 2 சதவிகிதத்தினருக்கும் குறைவானவர் களே பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கிறார்கள். அதுவும் போதிய தொகையை பங்குச் சந்தை மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யவில்லை. இதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.”

இனி லார்ஜ் கேப் பங்குகள் அதிக லாபம் தரும்...!

?அடுத்த 3 - 5 ஆண்டுகளில் அதிகம் வளர்ச்சி காணும் துறை எதுவாக இருக்கும்?

‘‘வங்கித் துறையைக் குறிப்பிடலாம். இனி நிஃப்டி குறியீட்டைவிட பேங்க் நிஃப்டி குறியீடு அதிக வருமானம் தருவதாக இருக்கும். வங்கிகளின் நிகர வாராக் கடன் (என்பிஏ) குறைந்து வருகிறது. 2015 மார்ச்சுக்குப் பிறகு கடனுக்கான வட்டியை ஆர்பிஐ குறைக்க ஆரம்பிக்கும். அப்போது வங்கிகளின் செயல்பாடு மேம்பட்டு, அவற்றின் பங்குகளின் விலை புதிய உச்சத்தை அடையும்.’’

?கடந்த ஓராண்டில் மிட் கேப் பங்குகள் அதிக வருமானத்தைத் தந்திருக்கின்றன. இது தொடருமா?

‘‘பல மிட் கேப் பங்குகளின் விலை கடந்த ஓராண்டு காலத்தில் ஏறக்குறைய 75 முதல் 100 சதவிகிதத்துக்குமேல் வருமானம் அளித்துள்ளன. இந்தக் காலகட்டத்தில் டாப் 10  மிட் அண்ட் ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளின் வருமானம் 105 முதல் 130 சதவிகிதமாக உள்ளது என்பது கவனத்துக்குரியது. பொதுவாக, லார்ஜ் கேப் பங்குகளைவிட மிட் கேப் பங்குகளின் பிஇ விகிதம் குறைவாக இருக்கும். தற்போதைய நிலையில் மிட் கேப் பங்குகளின் விலை மிகவும் அதிகரித்துவிட்டதால், லார்ஜ் கேப் மற்றும் மிட் கேப் பங்குகளுக்கு இடையேயான பிஇ விகித வித்தியாசம் மிகவும் குறைந்துவிட்டது.

அந்த வகையில் இனி மிட் கேப் பங்குகளைவிட லார்ஜ் கேப் பங்குகள்தான் அதிக லாபம் தர வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, அடுத்த மூன்றாண்டு காலத்தில், மிட் கேப் பங்குகளைவிட லார்ஜ் கேப் பங்குகள் அதிக லாபம் தரும், இதுதான் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிலும். லார்ஜ் கேப் டைவர்ஸிஃபைடு ஃபண்டுகள் நல்ல வருமானத்தைத் தரும்.

கடந்த இரு ஆண்டுகளில் தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடுகள் லாபம் எதையும் தரவில்லை. இவற்றில் செய்யப்பட்ட முதலீட்டின் மதிப்புக் குறைந்திருக்கிறது. அதேநேரத்தில், பங்குச் சந்தை முதலீடு லாபகரமானதாக மாறி இருக்கிறது. பல பங்குகள் கணிசமான வருமானத்தைத் தந்திருக்கின்றன. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்று எடுத்துக் கொண்டால், கடந்த 3, 5, 10 ஆண்டுகளில் பல ஃபண்டு கள் ஆண்டுக் கூட்டு வளர்ச்சியாக (சிஏஜிஆர்) 20 சதவிகிதத்துக்குமேல் வருமானம் தந்திருக்கின்றன. இதற்கு சிறந்த உதாரணமாக, ஐசிஐசிஐ புரூ. வேல்யூ டிஸ்கவரி ஃபண்டை குறிப்பிடலாம்.’’

?ஒரு மியூச்சுவல் ஃபண்டின் செயல்பாடு, ஃபண்ட் மேனேஜரை மட்டுமே பொறுத்து இருக்கிறதா?

‘‘அப்படிச் சொல்ல முடியாது. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் திரட்டப்பட்ட நிதியை, எந்தப் பங்குகளில் முதலீடு செய்வது, எப்போது, எவ்வளவு தொகையை முதலீடு செய்வது எனத் தொடங்கி பல நடைமுறைகள் மற்றும் ஒழுங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இது, அனைத்து ஃபண்டுகளுக்கும் ஒன்றுபோல்தான் இருக்கும். இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கு என எங்கள் நிறுவனத்தில் 70-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் இருக்கிறார்கள். ஃபண்ட் மேனேஜர் மாறினாலும் இந்த நடைமுறை மற்றும் ஒழுங்குமுறை மாறாது.

ஐசிஐசிஐ புரூ. மியூச்சுவல் ஃபண்ட் ரூ.50,000 கோடி மதிப்புள்ள ஈக்விட்டி ஃண்டுகளை நிர்வகித்து வருகிறது. எந்த ஒரு ஃபண்ட் மேனேஜரும் ரூ.12,000 கோடிக்குமேல் நிர்வகிக்கமாட்டார். பொதுவாக, ஒரு ஃபண்ட் அதன் பெஞ்ச்மார்க்கைவிட அதிக வருமானம் தந்தால், அது நல்ல வருமானம். எங்களின் அனைத்து ஃபண்டுகளும் அப்படித்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.’’

?கடந்த கால வருமானத்தின் அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்டை தேர்வு செய்யலாமா?

‘‘கடந்த காலத்தில் ஒரு ஃபண்ட் என்ன வருமானம் கொடுத்திருக்கிறது என்பதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். ஆனால், அது 6 மாதம், ஓராண்டு என்பதுபோல் குறுகிய காலமாக இருக்கக்கூடாது. பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு் வளர கால அவகாசம் அளிக்க வேண்டும். முதலீடு செய்துவிட்டு உடனடியாக வருமானத்தை எதிர்பார்க்கக் கூடாது. அந்தக் கால அவகாசம் குறைந்தது மூன்றாண்டுகளாக இருக்க வேண்டும்.

பங்குச் சந்தை மற்றும் ஃபண்ட் முதலீட்டை மூன்றாண்டு கால விளையாட்டு என்று குறிப்பிடலாம். குறிப்பிட்ட ஃபண்டின் செயல்பாட்டைக் கவனிக்கும் அதேநேரத்தில், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் கவனிப்பது அவசியம். அதாவது, அதன் பிராண்ட், நிர்வாகத் திறமை, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுச் செயல்படும் நியாயத்தன்மை ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும்.’’

?சிறு முதலீட்டாளர்களுக்கு உங்களின் ஆலோசனை?

‘‘நிறுவனப் பங்குகள் மற்றும் கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யும் பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். அப்படி தேர்வு செய்யும் போது, அதன் போர்ட்ஃபோலியோவில் பங்குகளின் அளவு 65%க்கு மேல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் ஈக்விட்டி ஃபண்ட் என்கிற அடிப்படையில் ஓராண்டுக்கு மேற்பட்ட வருமானத்துக்கு வரி எதுவும் கட்ட வேண்டி இருக்காது.'' நல்ல யோசனைதான்!