நடப்பு
Published:Updated:

ஹோம் பட்ஜெட்: சொத்து சேர்க்கும் சூட்சுமங்கள்!

இரா.ரூபாவதி

சொத்து என்பது இன்றைய நிலையில் அனைவருக்கும் தேவையான ஒன்று. இதைச் சேர்ப்பதற்காகத்தான் பலரும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆண், பெண் என எந்த வித்தியாசமும் இல்லாமல் பொதுவானதாக இருக்கிறது சொத்து. இதில் பெண்கள்தான் சொத்துச் சேர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

“அவங்க வீடு வாங்கிட்டாங்க, நாம இன்னும் வாங்கல” என்று கணவனுக்கு பல நெருக்கடிகளைக் கொடுத்து சொத்து சேர்க்க வைக்கும் பெண்கள், தங்களின் பெயரில் எந்தச் சொத்தும் இல்லை என்பது பற்றி கவலைகொள்வதே இல்லை. சில பெண்கள் தங்கள் பெயரில் சொத்து இருந்தாலும் அது அந்தப் பெண்ணின் குடும்பத்தில் பரிசாகக் கொடுத்ததாக இருக்கும். அல்லது மனைவியின் பெயரில் இருந்தால், பிரச்னை வராமல் இருப்பதற்காக கணவர் எழுதிவைத்த சொத்தாக இருக்கும்.

பெண்களின் பெயரில் ஏன் சொத்து இருக்க வேண்டும், சொத்தை உருவாக்கு வதில் பெண்களின் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து விளக்குகிறார் நிதி ஆலோசகர் சித்ரா நாகப்பன்.

‘‘இன்றைய சூழ்நிலையில் சேமிப்புப் பழக்கம் என்பது நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருகிறது. ஏனெனில், இருந்த இடத்தில் தேவையான பொருட்களை வாங்கும் வசதிகள் வந்துவிட்டன. அதோடு, வாங்க நினைத்த பொருட்களை உடனே வாங்க வேண்டும் என்ற மனநிலையில் பலரும் இருக்கிறார்கள். எனவே, கையில் பணம் கிடைத்தவுடனே அதை எப்படிச் செலவழிக்கலாம் என்று தான் யோசிக்கிறார்கள். அதற்கேற்ப மார்க்கெட்டிலும்  ஏதாவது ஒரு ஆஃபர் தினமும் வந்து கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் தெரிந்த நண்பர்கள் வீட்டுக்கு புது துணிகளை அணிந்து செல்ல வேண்டும் என நினைக்கிறார்கள். இப்படி தேவைகளை நாளுக்குநாள் அதிகமாக்கி, செலவையும் அதிகமாக்கிக் கொண்டே போகிறார்கள்.

ஹோம் பட்ஜெட்: சொத்து சேர்க்கும் சூட்சுமங்கள்!

செலவு அதிகமாக இருந்தாலும் சேமிப்பு என்பது பெண்களிடம் கட்டாயம் இருக்கும். அந்தச் சேமிப்பை எப்படி முதலீடாக மாற்றி சொத்தைப் பெருக்குவது என்று தெரியாமல்தான் பல பெண்கள் இருக்கிறார்கள்.

சேமிக்கும் பணத்தை முதலீடாக மாற்றும் பழக்கம் ஒரேநாளில் வந்து விடாது. அதற்கு மனக்கட்டுப்பாடு மிகவும் முக்கியம். சிறுவயதிலிருந்தே இதற்காகத் தயார்படுத்திக் கொண்டால் தான், இந்தப் பழக்கம் வரும். மேலும், சூழ்நிலைகளும் அதற்கேற்ப அமைய வேண்டும். பெண்களிடம் இயற்கை யாகவே சேமிக்கும் பழக்கம் இருக்கிறது. ஆனால், அதை முதலீடு செய்வதில்தான் சிக்கல் அதிகமாக உள்ளது. அவர்கள் அதிகம் விரும்பும் முதலீடு என்ன என்பது குறித்துப் பார்ப்போம்.

 தங்கம் சிறந்த சொத்தா?

பெண்களுக்கு அதிகம் தெரிந்த முதலீடு என்றால் அது சீட்டுதான். அதே போல, சிறந்த முதலீடு என நினைப்பது தங்கத்தைத்தான். இந்த இரண்டுமே தவறு. சீட்டுத் திட்டங்களில் பாதுகாப்பு என்பது இல்லை. அதேபோல, தங்கமும் வருமானம் தரக்கூடிய முதலீடு கிடையாது. தங்கம் வாங்குவது தவறு இல்லை. அதாவது, தேவைக்கு மட்டும் தங்கத்தை வாங்குவது நல்லது.

பெண்கள் தங்கத்தை விரும்புவதற்கு முக்கியக் காரணம், அதன்மூலமாகக் கிடைக்கும் அடமான கடன். தங்கத்தின் மீதான அடமான கடனுக்கான விதிமுறைகள் மிகவும் குறைவு என்பதால் எளிதாகக் கிடைக்கும். ஆனால், அதற்கான வட்டி விகிதம் சற்று அதிகமாக இருக்கும்.

ஹோம் பட்ஜெட்: சொத்து சேர்க்கும் சூட்சுமங்கள்!

முதலீடுகள் என்பது வருமானம் தரக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனால், தங்கத்தின் மூலமாக வருமானம் கிடைக்காது. வாங்கிய தங்கத்தை விற்பனை செய்தால் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், கடந்த ஒரு வருடமாக தங்கத்தின் விலையில் தொடர்ந்து மந்தநிலை இருப்பதால், தங்கத்தில் முதலீடு செய்வதைத் தவிர்த்து வருகிறார்கள்.

சொத்து சேர்க்கும் வழிகள்!

சொத்து வாங்குவதற்குத் திட்டமிடல்  எப்போதுமே அவசியம்.. அப்போதுதான் அதை உருவாக்க முடியும். சொந்த வீடு, நிலம் போன்ற சொத்துக்களை உருவாக்குவது நல்லது. ஏனெனில், சொந்த வீடு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. எனவே, அதுகுறித்து திட்டமிட்டு செயல்படுவது நல்லது. அதாவது, என்ன விலையில் சொத்து வாங்கப்போகிறீர்கள், அதற்கான பணத்தைச் சேர்க்க எதில் முதலீடு செய்ய வேண்டும் என்பதையெல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது நல்லது.

சொத்து சேர்ப்பதில் பெண்கள் எப்போதுமே ஆண்களையோ அல்லது பிறரையோ  சார்ந்தே இருக்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம், ரிஸ்க் எடுக்கத் தயங்குவதுதான். தவறு நடந்து விடுமோ என்று நினைத்து பலரும் அஞ்சுகிறார்கள். தவறு செய்வது அல்லது நடப்பது என்பது எல்லோருக் கும் பொதுவானதுதான். எனவே, அதைக்கண்டு பயப்படாமல்,  தவறு நிகழாதபடிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்க வேண்டும்.

பெரும்பாலான பெண்கள் படித்து முடித்தவுடன் வேலைக்குப் போக ஆரம்பித்துவிடுகிறார்கள். நல்ல சம்பளத்தில் வேலைக்குப் போகிறவர்கள், வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி அதன் மூலம் வீடு வாங்க முடியும். ஆனால், திருமணத்துக்குப் பிறகு வேலைக்குப் போக முடியுமா, இதேபோல் கணவரும் வீடு வாங்கியிருந்தால் என்ன செய்வது என நினைத்து வீடு வாங்காமலே இருந்து விடுகிறார்கள்.
வீடு வாங்க முடியவில்லை எனில், குறைந்தபட்சம் நிலமாவது வாங்கி வைக்கலாம். நிலம் வாங்குவதற்கு வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்புக் குறைவு. எனவே, இதற்குத் தேவையான பணத்தை முதலீடு செய்து வாங்குவது நல்லது. இதற்கான மொத்த பணமும் ஒரேநாளில் கிடைத்துவிடாது. எனவே, சிறுக சிறுக சேமித்து வாங்க முடியும். சொத்து வாங்க வேண்டும் என முடிவு செய்த பிறகு மாதம் குறிப்பிட்ட தொகையை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யலாம். முதலீடு போக மீதி உள்ள பணத்தைத்தான் சம்பளம் என நினைத்துக்கொள்ள வேண்டும். மேலும், செலவுகளையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்.

எந்த வகையான முதலீடு?

இப்படி சொத்து சேர்ப்பதற்கான பணத்தை சிலர் வங்கிகளில் எஃப்டி மூலம் சேர்க்கின்றனர். இது ரிஸ்க் இல்லாதச் சேமிப்பு என்றாலும், பண வீக்கத்தைத் தாண்டிய வருமானம் இதில் கிடைக்காது. கொஞ்சம் ரிஸ்க் எடுக்கத் தயார் எனில், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். பங்குச் சந்தை என்றால், புளூசிப் நிறுவனத்தின் பங்குகளை ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவில் வாங்கலாம். முதலீடு நீண்ட காலத்துக்கு இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது. இந்த முதலீடுகளில் குறிப்பிட்ட அளவு வருமானம் கிடைத் ததும், அதை எடுத்து நீங்கள் வாங்க நினைத்த சொத்தை வாங்கலாம்.

ஹோம் பட்ஜெட்: சொத்து சேர்க்கும் சூட்சுமங்கள்!

சேமிப்பு மூலமாக!

வருமானம் இல்லாத பெண்களும் சொத்து சேர்ப்பதற்கு உதவ முடியும். அதாவது, மாத பட்ஜெட்டில் குறிப்பிட்ட அளவு பணத்தை மிச்சம் பிடிக்கலாம். அதாவது, வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கும்போது விலை குறைவாகக் கிடைக்கும் கடைகளுக்குச் சென்று வாங்கலாம். மொத்தமாகப் பொருட்கள் வாங்கும்போது அக்கம் பக்கத்தில் உள்ள பெண்களுடன் சேர்ந்து வாங்கலாம். இப்படி வாங்கும்போது அதிகமான பணத்தை மிச்சம் பிடிக்க முடியும். மிச்சமாகும் பணத்தையெல்லாம் முதலீடாக மாற்றுவது நல்லது.

கூடுதல் பணம்.

சம்பளம் தவிர்த்துக் கூடுதலாகக் கிடைக்கும் போனஸ், பரிசுத் தொகை, சம்பள உயர்வு, நிலுவைத் தொகை என எந்தவகையில் கூடுதலாகப் பணம் கிடைத்தாலும், அதை உடனடியாக முதலீடாக மாற்றுவது முக்கியம். கையில்தான் பணம் இருக்கிறதே என நினைத்து செலவு செய்யக் கூடாது. மனதைக் கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது முக்கியம். மேலும், முதலீட்டின் மூலமாகக் கிடைக்கும் வருமானத்தை மீண்டும் முதலீடாக மாற்ற வேண்டும். பங்கு முதலீட்டின் மூலமாகக் கிடைக்கும் டிவிடெண்ட், ஏற்கெனவே உள்ள சொத்திலிருந்து கிடைக்கும் வாடகை ஆகியவற்றை முதலீடாக மாற்றுவது சிறப்பாக இருக்கும்.

ஹோம் பட்ஜெட்: சொத்து சேர்க்கும் சூட்சுமங்கள்!

நீங்கள் வாங்க நினைத்த சொத்தை வாங்கும் தருணம் வரும் போது பணப் பற்றாக்குறை ஏற்பட்டால், அதைச் சரிசெய்ய ஏற்கெனவே உள்ள சொத்தை விற்கத் தயாராக இருக்க வேண்டும். அதாவது, குறைந்த விலையில் ஏதாவது நிலம் வாங்கி வைத்திருக்கிறீர்கள் எனில், பற்றாக்குறையாக இருக்கும் தொகைக்கு அந்த இடத்தை விற்று நிலைமையை சரிசெய்ய லாம். இதேபோலத்தான் தங்க நகைகளும், பிற முதலீடுகளும்.

சொத்துக்களை உருவாக்குவது என்பது குறுகிய காலத்தில் எப்போதுமே நடக்காது. அது நீண்ட காலத்தின் அடிப்படையில் தான் இருக்கும். எனவே, பொறுமையாக இருப்பது முக்கியம். மேலும், நீண்ட காலத்தில் மட்டும்தான் சொத்துக்களை உருவாக்க முடியும்'' என்றார் சித்ரா நாகப்பன்.

இவர் சொல்வதை இன்றைய பெண்கள் பின்பற்றலாமே!

படங்கள்:  ஜெ.வேங்கடராஜ்,  தி.ஹரிகரன், தே.தீட்ஷித்