நடப்பு
Published:Updated:

அக்ரி கமாடிட்டி!

செ.கார்த்திகேயன்

மஞ்சள் (Turmeric)

தேவை அதிகரிப்பின் காரணமாகச் சென்ற வாரத்தில் மஞ்சள் விலை அதிகரித்து வர்த்தகமானது. மஞ்சள் விலையும் ஏரியாக்களில் பருவநிலை பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி யுள்ளதால் பயிர் சேதம் உண்டாகி இருக்கிறது. அதனால் வரும் வாரங்களிலும் மஞ்சள் விலை அதிகரித்து வர்த்தகமாகும்.

 மற்ற நாடுகளில் இருந்து ஏற்றுமதி தேவை அதிகரித்துக் காணப்படுவதாலும், தீபாவளி பண்டிகை என்பதால் மஞ்சள் தேவை உள்நாட்டில் அதிகரித்து இருப்பதாலும் விலை அதிகரித்தே காணப்படும்.

ஈரோடு வர்த்தகர்களுக்கு ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைத்திருப்பதால், அவர்கள் சிறந்த மஞ்சள் பயிர்களை வாங்க ஆர்வம் காட்டினர். இதனால் சென்ற வாரம் செவ்வாய்க்கிழமையில் சந்தைக்கு வந்த 1,800 பைகள் (ஒரு பை என்பது 75 கிலோ) விற்பனை ஆகின.  சென்ற வாரம் புதன் கிழமை அன்று விரலி மஞ்சள் ரூ.3,399 - 6,669-க்கு  இடையில் வர்த்தகமானது. ரூட் மஞ்சள் ரூ.3,219 - 6,039  வரை வர்த்தக மானது. நிஜாமாபாத் சந்தையில் வரத்துக் குறைவு மற்றும் தேவை அதிகரிப்புக் காரண மாக விலை உயர்ந்து காணப்பட்டது.

அக்ரி கமாடிட்டி!

சென்னா (Chana)

விழாக்காலத் தேவை மற்றும் ஏற்றுமதி தேவை அதிகரித்ததன் காரணமாகக் கடந்த வாரத்தில் சென்னாவின் விலை அதிகரித்து வர்த்தகமானது.

வேளாண்மை அமைச்சகத்தின் தகவல்படி, காரீஃப் பருவ பருப்பு வகைகளின் உற்பத்தியானது 6.2% குறைந்துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் 10.91 மில்லியன் ஹெக்டேர் களாக இருந்த பயிர் விதைப்பானது, 10.23 மில்லியன் ஹெக்டேர்களாக உள்ளது. துவரம்பருப்பு, உளுந்து மற்றும் பாசிப்பருப்பு வகைகளின் பயிர் விளைச்சல் முறையே 3.6 மில்லியன், 2.53 மில்லியன் மற்றும் 2.16 மில்லியன் ஹெக்டேராக உள்ளது.

நான்காவது அட்வான்ஸ்டு கணக்கீட்டின்படி, 2013-14-ம் ஆண்டின் மொத்த பருப்பு வகைகளின் உற்பத்தி 19.27 மில்லியன் டன்களாக அதிகரித்துள் ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 18.34 மில்லியன் ஹெக்டேராக இருந்தது.

சென்னா பயிர் விதைப்பானது கடந்த ஆண்டில் 9.51 மில்லியன் ஹெக்டேராக இருந்தது. இது, தற்போது 10.21 மில்லியன் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.

அக்ரி கமாடிட்டி!

ஜீரகம் (Jeera)

ஜீரகத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதன் வர்த்தகம் முக்கியமான ஸ்பாட் சந்தைகளில் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதனால் வரும் நாட்களில் ஜீரகத்தின் விலையும் அதிகரிக்கும் என்று விவசாயிகளும், வியாபாரிகளும் எதிர்பார்க்கிறார்கள்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற அக்டோபர் 21-29 வரை  உஞ்ஹா சந்தையானது மூடப்படுகிறது. வழக்கம்போல, சிரியா துருக்கியில் நிலவிவரும் அரசியம் பதற்றம் காரணமாக இந்திய ஜீரகத்துக்கு ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரித்து வருகின்றன. இது, இந்திய ஜீரகத்தின் விலை அதிகரிப்புக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.

ஏலக்காய் (Cardamom)

முக்கியச் சந்தைகளில் போதுமான அளவு வரத்து காணப்பட்டதாலும், ஏற்றுமதி தேவை குறைவாக இருந்த தாலும் ஏலக்காய் விலை குறைந்து வர்த்தகமானது. கடந்த வாரத்தில் வியாழக்கிழமை அன்று சந்தைக்கு 114 டன் வரத்து இருந்தது. அன்றைய தினத்தில் ஒரு கிலோ ஏலக்காய் விலை 741 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 1,004 ரூபாய்க்கும் விற்பனையானது.
 
ஸ்பைசஸ் போர்டு ஆஃப் இந்தியா சமீபத்தில் வெளியிட்ட ஏப்ரல்-ஜூலை 2014க்கான அறிக்கையின்படி, சிறிய மற்றும் பெரிய ரக ஏலக்காய் ஏற்றுமதி அளவு குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. சிறிய ரக ஏலக்காய் 5% குறைந்து 755 டன்னாகவும், பெரிய ரக ஏலக்காய் 17% குறைந்து 115 டன்னாக இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

அக்ரி கமாடிட்டி!

சோயாபீன் (Soybean)

சோயாமீல் ஏற்றுமதி தேவை மிகவும் குறைந்த காரணத்தால் கடந்தவாரமும் சோயாபீன் விலை குறைந்தது. இருப்பினும் வரத்து குறைவாக இருந்ததால், மேலும் விலை குறையாமல் தடுக்கப்பட்டது. அக்டோபர் 9-ம் தேதி நிலவரப்படி, 11.02 மில்லியன் ஹெக்டேர் அளவுக்கு சோயாபீன் பயிரிடப்பட்டுள்ளது எனவும், இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 12.22 மில்லியன் ஹெக்டேராக இருந்தது எனவும் வேளாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒன்றாவது அட்வான்ஸ்டு கணக்கீட்டின்படி, 2014-15-ம் ஆண்டுக்கான சோயாபீன் உற்பத்தி 11.82 மில்லியன் டன்னாக இருக்கும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, சோயாமீல் ஏற்றுமதியின் அளவு  868 டன்னாகக் குறைந்துள்ளது. இது ஆகஸ்ட்  2013-ல் 1,73,381 டன்னாக இருந்தது  குறிப்பிடத்தக்கது.