Published:Updated:

2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பது வதந்தியா, உண்மையா? நிபுணர் அலசல்

ஏற்கெனவே 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டபோது அவற்றை வங்கிகளில் மாற்ற மிகவும் சிரமப்பட்ட அனுபவம் இருப்பதால் வணிக நிறுவனங்களும் மிகுந்த முன்னெச்சரிக்கையாக இருக்கின்றன.

இரண்டாயிரம் ரூபாய் நோட்டு
இரண்டாயிரம் ரூபாய் நோட்டு

2000 ரூபாய் நோட்டுகளை பிரின்ட் செய்வதை ரிசர்வ் வங்கி நிறுத்திய தகவல் வெளிவந்ததிலிருந்தே அவற்றைப் பயன்படுத்த பொதுமக்கள் தயக்கம் காட்டுகிறார்கள். இந்த ஆண்டு இறுதியில் 2000 ரூபாய் நோட்டுக்களைச் செல்லாததாக அறிவித்துவிட்டு 1000 ரூபாய் நோட்டுக்களை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக வதந்திகளும் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியுள்ளன.

2000 ரூபாய் நோட்டு
2000 ரூபாய் நோட்டு
vikatan
`பட்ஜெட்டுக்காக காத்திருங்கள்..!'- தனிநபர் வருமானவரி குறித்து நிர்மலா சீதாராமன் சூசகம்

ஏற்கெனவே 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டபோது அவற்றை வங்கிகளில் மாற்ற மிகவும் சிரமப்பட்ட அனுபவம் இருப்பதால் வணிக நிறுவனங்களும் மிகுந்த முன்னெச்சரிக்கையாக இருக்கின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் 2000 ரூபாய் நோட்டுக்களை வாங்க மறுத்து வருகின்றன. அதேபோல, தங்கள் வசமுள்ள 2000 ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் வங்கிக்கணக்கில் செலுத்தும்படி அக்கவுன்டன்டுகளுக்கு அறிவுறுத்துகின்றன.

பெங்களூருவிலுள்ள லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் ஒன்று, தங்களின் அலுவலர்களுக்கு, வாடிக்கையாளர்களிடமிருந்து 2000 ரூபாய் நோட்டுக்களை வாங்க வேண்டாமென்றும், கைவசமுள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்யும்படியும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஏற்கெனவே, 10 ரூபாய் நாணயத்தை வங்கிகள் வாங்க மறுத்ததிலிருந்து இன்று வரை பல இடங்களில் அதை ஏற்க மறுக்கும் சூழல் தொடர்கிறது. இதேபோல தற்போது 2000 ரூபாய் நோட்டுகளுக்கும் ஏற்பட்டுள்ளது.

சுற்றறிக்கை
சுற்றறிக்கை

இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், இதுகுறித்த அச்சம் தற்போது நிலவுவதாகத் தெரிகிறது. அப்படியெல்லாம் கவலைப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார். அவரது பதிலால், பணமதிப்பிழப்பு என்பது வதந்தி என்று உறுதியாகிறது. எனினும், பணமதிப்பிழப்பை சொல்லி வைத்தெல்லாம் செய்யமாட்டார்களே என்ற கேள்வியும் எழாமல் இல்லை. சமூக வலைதளங்களில் வதந்தி கிளப்பப்பட்டாலும், அதை மக்கள் நம்புவதற்கு என்ன காரணம்? மக்களிடையே ஏற்பட்டுள்ள பீதியைப்போக்க மத்திய அரசு சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் தாமஸ் பிராங்கோவிடம் கேட்டோம்.

"மக்களிடம் பீதி கிளம்புவதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. ஏற்கெனவே 2016-ம் ஆண்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டுவந்தபோது 2000 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்துகிறார்கள். அப்போது குருமூர்த்தி ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் பேசும்போது, `2000 ரூபாய் நோட்டை மீண்டும் கொஞ்ச நாள்களில் ரிசர்வ் வங்கி திரும்பப்பெறும்' என்று கூறினார். அப்போதே மக்கள் மத்தியில் இதுகுறித்த சந்தேகப்பேச்சு தொடங்கிவிட்டது. தற்போது இவர் ரிசர்வ் வங்கியின் இயக்குநர்களில் ஒருவராகவும் இருக்கிறார். அவர் நினைத்தால் அந்த முடிவை எடுக்க நிர்பந்திக்கலாம். எனவே, அந்தச் சந்தேகம் வலுப்பது இயல்புதான்.

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் தாமஸ் பிராங்கோ
அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் தாமஸ் பிராங்கோ
vikatan

இரண்டாவது, தற்போது 2000 ரூபாய் நோட்டுக்களை பிரின்ட் செய்வதை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது. ஏன் நிறுத்திவிட்டார்கள், இதைத் திரும்பப்பெற நினைக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுவதற்கு இதுவும் காரணமாகிறது.

மூன்றாவதாக, இவர்கள் வெளியிட்ட 2000 ரூபாய் நோட்டுக்களில் பெரும்பாலான நோட்டுக்கள் திரும்பவும் வங்கிக்கு வரவில்லை. அவற்றைப் பதுக்கியிருக்க வாய்ப்புள்ளது என ரிசர்வ் வங்கி கருதினால், மீண்டும் பணமதிப்பிழப்பு கொண்டுவருவார்களோ என்ற அச்சம் உள்ளது.

ஏற்கெனவே கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மத்திய அரசுக்கு எதிர்பார்த்த எதுவும் பெரிதாக நடக்கவில்லை. எனவே, இம்முறை மீண்டும் முயற்சி செய்து சாதிக்க நினைப்பார்களோ என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுகிறது. மத்திய அரசுதான் இந்த விஷயத்தில் மக்களிடையே கிளம்பியுள்ள பீதியைப் போக்க வேண்டும். ரிசர்வ் வங்கியில் கூடுதலாக உள்ள பணத்தை ஏற்கெனவே மத்திய அரசு வாங்கிவிட்டது.

தற்போது பி.எம்.சி வங்கியின் வாராக்கடன் பிரச்னையால் அதன் வாடிக்கையாளர்கள் பல மாதங்களாகத் தங்களது டெபாசிட்டை எடுக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய தீர்வை ரிசர்வ் வங்கியால் இன்னமும் வழங்க முடியவில்லை. ரிசர்வ் வங்கிமீதும் மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவருகிறது. எனவே, ரிசர்வ் வங்கி தரப்பிலும் இந்த 2000 ரூபாய் நோட்டு பிரச்னை குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் தரப்பட வேண்டும். இல்லையென்றால் பணப்புழக்கத்தில் மேலும் மேலும் சிக்கல்கள் அதிகரித்துக்கொண்டே போகும்" என்றார்.

``நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் தெரியவில்லை!’’ - சுப்பிரமணியன் சுவாமி

பணமதிப்பிழப்பின் மூலம் மக்களின் நம்பிக்கையை இழந்த ரிசர்வ் வங்கி, தனது நம்பிக்கையை மீட்டெடுக்குமா எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.