Published:Updated:

20 லட்சம் கோடி ரூபாய்; நான்காம் கட்ட ஊரடங்கு; என்ன செய்யப்போகிறது மத்திய அரசு? #VikatanExplainer

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி கொரோனா நிவாரண நிதியாக 20 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்குவதாகத் தெரிவித்துள்ளார். இது, இந்திய நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம் ஆகும்.

"தொழில்துறையை மேம்படுத்தவும், நடுத்தர மக்களுக்காகவும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்காகவும், 2020-ம் ஆண்டில் 'ஆத்ம நிர்பார் பாரத் அபியான் (Atma Nirbhar Bharat Abhiyaan)' என்ற திட்டத்தின் கீழ் 20 லட்சம் கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக ஒதுக்கப்படுகிறது."
பிரதமர் நரேந்திர மோடி

கடந்த டிசம்பர் மாதத்தில் ஆரம்பித்த கொரோனா பிரச்னை, இன்னமும் ஓயவில்லை. தொடக்கத்தில் நாடு நாடாகப் பரவி, இப்போது மாநிலம், மாவட்டம், கிராமம், மக்கள் அதிகம் நடமாடும் தெருக்கள் என நெருங்கி வந்து, மக்களுக்கு மாபெரும் அச்சத்தையும் உயிர் பயத்தையும் காட்டிக்கொண்டிருக்கிறது கொரோனா. 

உலகம் முழுவதும் இன்றைய நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 43,41,720. இந்தத் தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,92,829.

ஏற்றம் காணுமா இந்தியப் பொருளாதாரம்? - கொரோனாவுக்குப் பிறகு..!

இந்த நேரத்தில் இந்திய நாட்டின் தலைவராக, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நம்பிக்கை தரும் உரையை நிகழ்த்தியிருக்கிறார்.

உள்நாட்டு உற்பத்தியில் 10%

"கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்கா, தன் நாட்டு மக்களுக்காக 2.2 டிரில்லியன் டாலர் நிவாரண நிதியை ஒதுக்கியது. அதேபோல கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்ற உலக நாடுகளும் ஏராளமான நிதியை ஒதுக்கி வந்தன. ஆனால், இந்திய அரசாங்கம் 1.76 லட்சம் கோடி ரூபாயை மட்டும் ஒதுக்கிவிட்டு, சும்மா இருக்கிறது. இந்த நிவாரண நிதி எள் அளவுக்குக்கூட போதாது. வீழ்ந்துகொண்டிருக்கும் இந்திய பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் சீர் செய்யக் கொஞ்சம்கூட உதவாது. குறைந்தபட்சம் இந்திய உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவிகிதம் பணத்தையாவது நிவாரண நிதியாக ஒதுக்க வேண்டும்" எனப் பொருளாதார நிபுணர்கள் சொல்லிவந்தார்கள். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி இப்போது ஒதுக்கி இருப்பது, நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம்!

'ரூ.20 லட்சம் கோடி'
இந்தியா ஒதுக்கியிருக்கும் கொரோனா நிவாரண நிதி!

பிரதமர் நரேந்திர மோடியின் உரையிலிருந்து...

``உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு 3 லட்சம் பேர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. ஒரு வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தைச் சின்னாபின்னமாக்கியிருக்கிறது. கொரோனாவுக்கு எதிராக நான்கு மாதங்களாக ஒட்டுமொத்த உலகமே போராடி வருகிறது. உலகம் முழுவதும் இந்த வைரஸ் பெரும் நாசத்தை ஏற்படுத்திவிட்டது. இந்த வைரஸ் தொற்றினால் உலகம் முழுவதும் 42 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மனித இனத்தால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத மிகப் பெரிய பாதிப்புகளை இந்த வைரஸ் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. நாம் இதற்கு முன்னர் இப்படியான ஒரு பேரிடரைக் கேள்விப்பட்டதும் இல்லை; பார்த்ததும் இல்லை. 

மோடி
மோடி

கொரோனாவுக்குப் பிந்தைய உலகை இந்தியா வழிநடத்த வேண்டும் என நான் நினைக்கிறேன். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் முக்கியக் கட்டத்தில் இருக்கிறோம். இந்தப் போரை நாம் இதோடு விட்டுவிட முடியாது. தொடர்ந்து போர் செய்ய வேண்டும். அதில் நிச்சயமாக நாம் வெற்றி காண வேண்டும். 

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ரூ.20 லட்சம் கோடிக்கு பொருளாதார சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. இந்தத் திட்டங்கள் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் கிடைக்கும். உலக நாடுகளுக்குப் பொருள்கள் மற்றும் சேவைகளை அளிப்பதில் இந்தியா இடம் பெற வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.

இந்த வைரஸ் பாதிப்பு ஆரம்பித்தபோது, இந்தியாவிலிருந்து ஒரு பி.பி.இ கிட்களைக்கூட உற்பத்தி செய்யவில்லை. அப்போது நம்மிடம் N95 மாஸ்குகளும் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் இருந்தன. ஆனால், இன்று ஒரு நாளைக்கு 2 லட்சம் பி.பி.இ கிட்களையும் மற்றும் 2 லட்சம் N95 மாஸ்குகளையும் உருவாக்குகிறோம்.
பிரதமர் நரேந்திர மோடி
முறுக்கிய முதல்வர்கள்... முடங்கிய நிதித்துறை - 20 லட்சம் கோடி மோடி மேஜிக் பலிக்குமா?

தற்போது வரை கொரோனா பாதிப்பைச் சமாளிக்க உள்நாட்டு தொழில்துறையே உதவி செய்தது. இன்று நம்மிடம் வளங்கள் உள்ளன. நம்மிடம் சக்தி உள்ளது. உலகின் மிகச்சிறந்த திறமையாளர்கள் நம்மிடம் உள்ளனர். நாம் சிறந்த தயாரிப்புகளை உருவாக்குகிறோம். நம்முடைய தரத்தை மேம்படுத்துகிறோம். நம்மால் முடியும் என்பதைச் செய்வோம். நம்மால் முடியாது என்பதையும் இந்த உலகுக்கு முடித்துக் காட்டுவோம். நம்மிடம் வலுவான தீர்வு இருந்தால் எந்தப் பாதையும் கடினம் இல்லை" என அச்சத்தைப் போக்கும் விதமாகவும் மக்களுக்கு நம்பிக்கை தரும் விதமாகவும் பேசியிருக்கிறார் மோடி.

இன்ப அதிர்ச்சி!

இந்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து, பொருளாதார நிபுணர் வ.நாகப்பனிடம் பேசினோம். "இந்திய அரசின் இந்த அறிவிப்பைத்தான், கடந்த ஒன்றரை மாதமாக நாம் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறோம். சில தினங்களுக்கு முன்பு, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில சலுகைகளையும், நிதி திட்டங்களையும் அறிவித்தார்கள். அதன் பிறகு ஆர்.பி.ஐ கவர்னர் சில நிதிச் சலுகைகளை வழங்கினார். இதெல்லாம் தற்காலிகமான உதவியாக இருந்தன.

ஆனால், இப்போது அறிவித்திருக்கும் 20 லட்சம் கோடி ரூபாய் (இதுவரை அறிவித்த அனைத்து திட்ட நிதிகளும் சேர்த்து) திட்டமானது, நிலைமையை ஆழமாக உற்று நோக்கி, நாட்டின் பிரச்னைகளை சரி செய்வதற்காக எடுக்கப்பட்ட முடிவு என்றுதான் நான் இதைப் பார்க்கிறேன். 

நாகப்பன்
நாகப்பன்
பொருளாதார நிபுணர்

ஓராண்டுக்கு நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது 2 கோடியே கோடி ரூபாய். இதில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திலிருந்து ஒன்றரை மாதத்திற்கான உற்பத்தியை தற்போது இழந்திருக்கிறோம். அதன் மதிப்பீடுதான் இந்த 20 லட்சம் கோடி ரூபாய். உற்பத்தி நிறுவனங்கள் இழந்திருக்கும் தொகையின் மதிப்பீடு அளவுக்கு, கொரோனா நிவாரண நிதியை மத்திய அரசாங்கம் இப்போது ஒதுக்கியிருக்கிறது. இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்குவார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அதனால் இது உண்மையாகவே வரவேற்கத்தக்க அதிர்ச்சிதான்.

சரியானவர்களுக்குப் போய்ச் சேர வேண்டும்!

நிதி ஒதுக்கியிருப்பது சந்தோஷம்தான். ஆனால், அதை மீண்டும் மீண்டும் பெருமுதலாளிகளுக்குக் கொடுப்பதாலோ, கொரோனாவால் பதிப்பைச் சந்திக்காதவர்களுக்குக் கொடுப்பதாலோ எந்தவொரு பலனும் கிடைக்காது. வைரஸ் தொற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் தினசரி கூலித் தொழிலாளர்கள், சிறு, குறு தொழிலாளர்கள், நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்கள் ஆகிய மூன்று பிரிவினர்களுக்கும் இந்த நிவாரண நிதி நேரடியாகப் போய்ச் சேர வேண்டும். ஏனெனில், இவர்களுக்குத்தான் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை அதிகமாக இருக்கிறது. 

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்

இந்த நிதியைக் கொண்டு சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு மிக மிகக் குறைவான வட்டியில் கடன்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். நியாயப்படி மக்களுக்கும் வங்கிக்கும் இடையில்தான் டெபாசிட், கடன் வழங்குவது எனக் கொடுக்கல் வாங்கல் நடைபெற வேண்டும். ஆனால், அது இப்போது வங்கிக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையில்தான் நடந்துகொண்டிருக்கிறது. வங்கிகள் மூலம் மக்களுக்குப் பணம் போய்ச் சேருவதற்கு, நாட்டில் பணப்புழக்கம் அதிகரிப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை அரசாங்கம் இனி செய்தே ஆக வேண்டும்.  

மக்களும், சிறு குறு நிறுவனங்களும் கடன் கேட்கும்போது, நிபந்தனைகள் எதுவுமில்லாமல் அவர்களுக்குக் கடன்களை கொடுத்தால்தான், அவர்களின் பிரச்னை ஓரளவுக்குத் தீரும். அதற்காகக் கடன் கொடுக்கும் தொகைக்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லாமல் கொடுங்கள் என நான் சொல்லவில்லை. கடன் கேட்டு வருபவர்களுக்கு நெருக்கடி தராதீர்கள் என்று சொல்கிறேன்" என்றார் தெளிவாக. 

பொருளாதாரச் சரிவிலிருந்து மீள  கூடுதல் பணத்தை அச்சடிக்கலாமா? - சாதக பாதகங்கள் என்னென்ன? #LongForm

நேற்றைய உரையில் நான்காம்கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று சொல்லியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், கடந்த மூன்று ஊரடங்கைவிட முற்றிலும் மாறுபட்டதாக அது இருக்கும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் தொழில் நிறுவனங்கள் இயங்குவதிலும், போக்குவரத்து விஷயங்களிலும் வரவேற்கத்தக்கத் தளர்வுகள் இருக்கும் என நம்புவோம். அத்துடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்... இந்த நிதியை எந்தப் பிரிவினர்களுக்கு எத்தனை சதவிகிதம் ஒதுக்கப் போகிறார் என்பதில் இருக்கிறது நாட்டின் எதிர்காலம்.

அடுத்த கட்டுரைக்கு