Published:Updated:

கிரெடிட் கார்டை இப்படிப் படுத்தினால் பிரச்னையே இல்லை! - பணம் பண்ணலாம் வாங்க - 42

நமக்கு பாதிப்பு அளிக்கக்கூடிய மூன்று கெடுக்கும் கடன்களைப் பற்றி இனி பார்த்துவிடுவோம். இந்தப் பட்டியலில் முதலில் வருவது கிரெடிட் கார்டுதான். இதில் ஆழம் தெரியாமல் காலை விட்டது ஒரு காலம். இன்று ஆழம் தெரிந்தே வேறு வழியில்லாமல் இவற்றை உபயோகிக்கிறோம்.

பாம்பென்றால் படையும் நடுங்கும். ஆனால், பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்களைவிட, கெடுக்கும் கடன்களால் பாதிக்கப்பட்டவர்கள்தாம் அதிகம். செல்வம் சேர்க்க உதவும் வீட்டுக் கடன், கல்விக் கடன், சிறுதொழில் கடன் ஆகிய மூன்று நல்ல கடன்களைப் பற்றி கடந்த எபிசோடில் பார்த்தோம். நமக்கு பாதிப்பு அளிக்கக்கூடிய மூன்று கெடுக்கும் கடன்களைப் பற்றி இனி பார்த்துவிடுவோம். இந்தப் பட்டியலில் முதலில் வருவது கிரெடிட் கார்ட்.

Credit Card
Credit Card
Pixabay
நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா..? உங்களுக்கான 5 தங்க விதிமுறைகள்..!

கிரெடிட் கார்ட் என்ற இன்றியமையாத போதை

இதில் ஆழம் தெரியாமல் காலை விட்டது ஒரு காலம். இன்று ஆழம் தெரிந்தே வேறு வழியில்லாமல் இவற்றை உபயோகிக்கிறோம். நாம் வேலைக்குச் சேர்ந்த உடனேயே கிரெடிட் கார்ட் கம்பெனிகள் ஒரு கார்டை நம் தலையில் கட்டி விடுகின்றன. கிரெடிட் கார்ட் தரும் இலவசக்கடன், சேர்வதற்கு போனஸ், கேஷ் பேக் ஆஃபர்ஸ், நிறைய பொருள்களுக்குத் தள்ளுபடி, ஃப்ரீ பாய்ன்ட்ஸ் போன்ற வசதிகளைப் பார்த்து மயங்கிப் போகிறோம்!

வீட்டுக்கடன் வட்டி விகிதம் 8.5% என்றால், 8%-க்கு கிடைக்குமா என்று தேடும் நாம், கிரெடிட் கார்ட் வட்டி விகிதம் 36% - 41% என்று கவனிப்பதில்லை. கார்ட் கம்பெனிகளும் அதை நாசூக்காக 3.35% மாத வட்டி என்றே குறிப்பிடுகின்றன. நாம் தப்பித் தவறி கிரெடிட் கார்டில் பணம் எடுத்துவிட்டால், அடுத்த நிமிடத்தில் இருந்து விதிக்கப்படும் வட்டி 45 சதவிகிதம். அது தவிர, பணம் கையாளும் கட்டணம் வேறு.

Credit Card
Credit Card
Photo by Ales Nesetril on Unsplash
நீங்கள் வாங்குவது நல்ல கடனா, கெட்ட கடனா? இவற்றை வைத்து முடிவு செய்யுங்கள்!

கிரெடிட் கார்ட் லீலைகள்

ஒரு ஸ்வீட் வாய்ஸ் செல்பேசியில் வந்து, ``இனி உங்கள் லிமிட் ஒன்றரை லட்சம்!” என்று ஏதோ லாட்டரி பரிசு தருவது போல இன்பத் தேனை ஊற்றும். ஒன்றரை லட்சத்துக்கு என்னவெல்லாம் வாங்கலாம் என்றுதான் எண்ணம் ஓடுமே தவிர, அந்த ஒன்றரை லட்சத்தை எப்படித் திருப்பிக் கட்டப்போகிறோம் என்ற கவலை அப்போது தோன்றாது.

கிரெடிட் கார்டை நாம் உபயோகிக்கும்போது முதல் 20 - 50 தினங்கள் வரை வட்டி விதிக்கப்பட மாட்டாது. ஒவ்வொரு முறையும் கெடு தேதிக்குள் பணத்தைக் கட்டி விடும் பட்சத்தில் வட்டியே இருக்காது. கிரெடிட் கார்டின் முக்கியக் கவர்ச்சி அம்சமே இந்த ஃப்ரீ கிரெடிட்தான். ஆனால், 8,000 ரூபாய்க்கு ஏதாவது வாங்கிவிட்டால் உடனே, ``ஐயோ, பாவம்! தவணைமுறையில் கட்டுங்களேன்!” என்று ஒரு குறுஞ்செய்தி பரிவு காட்டுகிறது. நாம் தவணைமுறையைத் தேர்ந்தெடுத்தவுடன் ஃப்ரீ கிரெடிட் ரத்தாகிவிடும். நம் கிரெடிட் ஸ்கோரும் குறைந்துவிடும். நமது கிரெடிட் கார்ட் லிமிட்டில் 30%-க்கு அதிகமாக நாம் செலவழித்தால் நம்மிடம் சரியான அளவு பண வரவு இல்லை என்று கிரெடிட் பீரோக்கள் முடிவு செய்து அப்போதும் ஸ்கோரைக் குறைக்கும். இதனால் பிற்காலத்தில் தேவைப்படும் வீட்டுக்கடன், வாகனக்கடன் போன்றவற்றைப் பெறுவதில் பாதிப்பு ஏற்படுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் கிரெடிட் கார்ட் நமது செலவுகளை அதிகரிக்கிறது. 24 இன்ச் டிவிக்கு பதில் 49 இன்ச் டிவி வாங்கியது, ஒரு டிரெஸ் வாங்கப்போய் மூன்றாக வாங்கிவந்தது - எல்லாமே கிரெடிட் கார்ட் தந்த தைரியம்தானே?

கிரெடிட் கார்டைத் தவிர்க்க வேண்டுமா?

இன்றைய சூழ்நிலையில் கிரெடிட் கார்ட் இன்றி வாழ்க்கை இல்லை. வருங்காலத்தில் நல்ல கடன்களைப் பெறுவதற்குத் தேவையான கிரெடிட் ஸ்கோரைப் பெறுவதற்கும் கிரெடிட் கார்டுகள் உதவும். ஏனெனில், கடன் வாங்காமலேயே இருப்பது கிரெடிட் ஸ்கோரைக் குறைக்கும். குறுகிய காலக் கடன்கள், நீண்ட காலக் கடன்கள், கிரெடிட் கார்ட் கடன்கள் போன்ற பலதரப்பட்ட கடன்களை வாங்குவதும், அவற்றை முறையாகத் திருப்பி செலுத்துவதுமே ஸ்கோரை அதிகரிக்கும் வழி.

Credit Card (Representational Image)
Credit Card (Representational Image)
Photo by Tima Miroshnichenko from Pexels
கிரெடிட் கார்டு பயன்படுத்துவதில் நீங்கள் செய்யக்கூடாத 7 தவறுகள் இவைதாம்!

கிரெடிட் கார்டை எப்படி சரியாக உபயோகிப்பது?

1. பணம் கட்டவேண்டிய தேதிக்குள் முழுப் பணத்தையும் கட்டிவிடுங்கள்; தவணைமுறையைத் தேர்வு செய்யாதீர்கள்.

2. கிரெடிட் கார்டில் பணம் எடுக்காதீர்கள்.

3. பல கார்டுகள் வைத்திருக்காதீர்கள். ஒவ்வொன்றுக்கும் கட்டணம் என்பதோடு ஒவ்வொன்றின் பணம் கட்டும் தேதியும் வேறு வேறாகிக் குழப்பும். அதிகபட்சம் ஒரு ஆட்ஆன் (add-on) கார்ட் வைத்துக்கொள்ளுங்கள். அதற்குக் கட்டணம் கிடையாது.

4. . கஸ்டமர் சர்வீஸுக்கு ஒரு போன் கால் செய்வதன் மூலம் உங்கள் லிமிட்டை நீங்களே நிர்ணயம் செய்யுங்கள். உங்கள் மாத வருமானத்தில் 50%-க்கு அதிகமாக லிமிட் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

5. கூடிய வரை பழைய கிரெடிட் கார்டுகளை மாற்றாமல் வைத்துக்கொள்வது ஒரு நீண்ட கடன் வரலாற்றைத் தெளிவாகக் காட்ட உதவும்.

கிரெடிட் கார்ட் என்ற கெடுக்கும் கடனை நல்ல கடனாக மாற்றுவது நம் கையில்தான் உள்ளது. ஆல் த பெஸ்ட்!

- இனி அடுத்து புதன்கிழமை காலை 9 மணிக்கு சந்திப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு