Published:Updated:

``விற்பனை பாதிப்புக்குக் காரணம் ஓலா, ஊபர் அல்ல!"- மறுக்கும் மாருதி

தெ.சு.கவுதமன்

அமெரிக்காவில் ஊபர் நிறுவனம் மிகப்பெரிய அளவில் இயங்கிவருகிறது. எனினும் அங்கே ஆட்டோமொபைல் துறை வலுவாகவே உள்ளது.

மாருதி
மாருதி

தற்போதுள்ள இளம் தலைமுறையினர் ஓலா, ஊபர் தனியார் போக்குவரத்து நிறுவனங்களின் சேவைகளைப் பயன்படுத்துவதே ஆட்டோமொபைல் துறையின் விற்பனைச் சரிவுக்குக் காரணம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய கருத்தை மாருதி இந்தியா நிறுவனம் மறுத்துள்ளது.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
vikatan

ஆட்டோமொபைல் துறையானது, இதுவரை இல்லாத அளவுக்கு வரலாற்று வீழ்ச்சியைக் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சந்தித்தது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பயணிகள் வாகனத்தின் விற்பனை 31.57 சதவிகிதமும், பயணிகள் கார் விற்பனை 41.09 சதவிகிதமும் சரிவடைந்தது. அதுமட்டுமின்றி ட்ரக் மற்றும் பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்களின் விற்பனை 39% வீழ்ச்சியடைந்தது.

இந்த விற்பனைச்சரிவு குறித்து மாருதி இந்தியா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் & விற்பனைப்பிரிவின் தலைவர் ஸ்ரீவத்சவா கூறும்போது, ``இந்தியாவில் 46 சதவிகிதம் பேர் முதன்முறையாக கார் வாங்குபவர்களாக இருக்கிறார்கள். ஓலா, ஊபர் சேவைகளைப் பெரும்பாலும் அலுவலகம் செல்வதற்கே பயன்படுத்துகிறார்கள். வார இறுதி நாளில் குடும்பத்தோடு ஊர் சுற்றுவதற்குச் சொந்த கார்களையே பயன்படுத்த விரும்புகிறார்கள். ஓலா, ஊபர் பயன்பாட்டுக்கு வந்து ஆறேழு ஆண்டுகளாகிவிட்டன. அப்போதெல்லாம் ஆட்டோமொபைல் துறை நல்லநிலையில்தான் இருந்தது. கடந்த சில மாதங்களாகத்தான் பெரிய அளவிலான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

maruti
maruti
vikatan

மேலும், அமெரிக்காவில் ஊபர் நிறுவனம் மிகப்பெரிய அளவில் இயங்கிவருகிறது. எனினும், அங்கே ஆட்டோமொபைல் துறை வலுவாகவே உள்ளது. இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சிக்கு, பணவீக்கம், இன்ஷூரன்ஸ் திட்டங்களின் விலை உயர்வு, வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் காரணமாக இருக்கக்கூடும். எனவே, வீழ்ச்சிக்கான காரணம் குறித்து தீவிரமாக ஆய்வு செய்தபிறகே முடிவுக்கு வர வேண்டும்'' என்று கூறியிருக்கிறார்.