Published:Updated:

முத்ரா லோன் பயன்பாட்டில் தமிழகம் முதலிடம்!

தெ.சு.கவுதமன்

2017-18 நிதியாண்டில் முத்ரா வங்கிக்கடன் பயன்பாட்டில் தமிழகம்தான் முதன்மை மாநிலமாக உள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்கள் அடுத்தடுத்த இடத்தைப் பிடித்துள்ளன.

Mudra loan
Mudra loan ( vikatan )

சிறு மற்றும் குறு தொழில்முனைவோர்களின் தொழில் முயற்சிக்கும் வளர்ச்சிக்கும் கடனுதவி செய்வதற்காக பிரதான் மந்திரி முத்ரா யோஜனா வங்கிக்கடன் திட்டம், 2015, ஏப்ரல் மாதத்தில் உருவாக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 2017 வரையிலான 33 மாதங்களில் இத்திட்டத்தால் கிடைத்த பயன்பாடுகள் குறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்துடன் இணைந்த தொழிலாளர் பணியகம் சர்வே எடுத்துள்ளது. இந்த சர்வே கடந்த 2018, ஏப்ரல்- நவம்பர் மாதங்களில், மொத்தம் 97,000 பயனாளிகளிடம் எடுக்கப்பட்டுள்ளன. அதன் வரைவு அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Beneficiaries
Beneficiaries
vikatan

முதல் மூன்று ஆண்டுகளில் மொத்தம் ரூ.5.71 லட்சம் கோடி அளவிலான வங்கிக்கடன் வழங்கப்பட்டுள்ளது. முத்ரா வங்கிக்கடன் மூலமாக இதுவரை 1.12 கோடி கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சிசு, கிஷோர் மற்றும் தருண் ஆகிய மூன்று வகைகளில் இந்த வங்கிக்கடன் வழங்கப்பட்டுள்ளது. சிசு பிரிவில் ரூ.50,000 வரையிலான வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. இதன்மூலம் மொத்தம் 66% புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கிஷோர் பிரிவில் ரூ.50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரையிலான வங்கிக்கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்த பிரிவில் 18.85% புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தருண் பிரிவில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. இப்பிரிவில் 15.51% புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சிசு பிரிவில்தான் அதிகபட்சமாக 88.65% பயனாளர்கள் பயனடைந்துள்ளார்கள். இப்பிரிவில் பயனாளிகள் எண்ணிக்கை ஒவ்வொரு நிதியாண்டிலும் பெரிதும் அதிகரித்துவருகிறார்கள். கிஷோர் மற்றும் தருண் பிரிவில் கணிசமான அளவு அதிகரித்துள்ளார்கள். 2017-18 நிதியாண்டில் முத்ரா வங்கிக்கடன் பயன்பாட்டில் தமிழகம்தான் முதன்மை மாநிலமாக உள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்கள் அடுத்தடுத்த இடத்தைப் பிடித்துள்ளன.

debt
debt
vikatan

இந்த சர்வேயில் முத்ரா வங்கிக்கடனால் பெரிய அளவில் பயன் கிடைத்திருப்பதாகத் தெரியவந்தாலும், இன்னொருபக்கம் இதிலும் வாராக்கடன் அளவு அதிகரித்துவருகிறது. 2016-17 நிதியாண்டில் 4.35 சதவிகிதத்திலிருந்து தற்போது 9.3 சதவிகிதமாக முத்ரா வாராக்கடன் அளவு உயர்ந்திருக்கிறது. குறிப்பாக அதிக அளவில் பயனாளர்களைக் கொண்டுள்ள சிசு பிரிவில் 12.39% அளவுக்கு வாராக்கடனாக அதிகரித்திருப்பது கவனிக்கத்தக்கதாகும். அதேபோல முத்ரா வங்கிக்கடனில் மோசடியும் நடப்பதாகத் தெரியவந்துள்ளது. அவற்றைக் களைந்தால் மட்டுமே தொழில்முனைவோர்களுக்கு முழுமையான பயனளிக்கும் திட்டமாக இருக்கும்.