Published:Updated:

அச்சுறுத்தும் ஆன்லைன் லோன் ஆப்கள்... எச்சரித்த ரிசர்வ் வங்கி... நாம் செய்ய வேண்டியது என்ன?

கடன் வாங்கிய பிறகு, லோன் ஆப் நிறுவனங்கள் எப்படி நடந்துகொள்ளும் என்பதை குணசீலனின் கதையைக் கேட்டால், நமக்குத் தெரியும்.

`அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் கடன் வாங்குவது சட்டத்துக்குப் புறம்பானது' என்றும், `அப்படிப்பட்ட அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் செயலிகள் மீது பொதுமக்கள் புகார் அளிக்கலாம்' என்றும் ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ``குறுகிய காலத்தில் கடன் கிடைப்பதாக கருதி அங்கீகாரம் இல்லாத மொபைல் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம். ஆப் மூலமாகச் சில நிறுவனங்கள் அதிக வட்டி, மறைமுகக் கட்டணம் எனக் கடன் வழங்குவதில் முறைகேடு செய்வதாகத் தகவல் வந்துள்ளது. கடனை வசூலிக்கவும் ஆப் நிறுவனங்கள் மோசமான நடைமுறைகளைப் பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது.

அதிக வட்டி, மறைமுகக் கட்டணத்துடன் கடன் வழங்கும் ஆப்கள் குறித்து உடனடியாகக் காவல் துறையில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். கடன் வழங்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் தொடர்பான விவரங்களை ரிசர்வ் வங்கி இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பிரச்னை குறித்து 27.12.2020 தேதியிட்ட நாணயம் விகடன் இதழில் ``ஆசையைத் தூண்டும் ஆன்லைன் ஆப்கள்... கடன் வலையில் சிக்காமல் தப்பிக்கும் வழிகள்!" என்கிற தலைப்பில் கவர் ஸ்டோரி எழுதப்பட்டிருக்கிறது. அவற்றிலிருந்து சில முக்கியமான விஷயங்கள் இங்கே உங்களுக்காக...

இந்த ஆண்டில் கொரோனா தொற்றுநோய் காரணமாக, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்ததுடன், பலரும் கடன்காரர்களாக மாறியிருக்கிறார்கள். இந்த நிலையில், உடனடியாகக் கடன் வேண்டும் என்று நினைக்கும் நடுத்தர வர்க்கத்தினரைக் குறிவைத்து, கடன் கொடுக்க பல்வேறு `லோன் அப்ளிகேஷன்கள்’ களமிறங்கியிருக்கின்றன. இந்த ஆப்களில் சென்று சில அடிப்படை விஷயங்களை மட்டும் நாம் தந்தால் போதும். அடுத்த சில மணி நேரத்தில் கடன் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைத்துவிடுகிறார்கள்.

Loan (Representational Image)
Loan (Representational Image)

அதிகரிக்கும் `லோன் ஆப்’கள்

சமீப காலமாக, இந்தியாவில், ஐ கிரெடிட், ஸ்மார்ட் காயின், கேபிட்டல் ஃபர்ஸ்ட், கேஷ் இ, கேஷியா போன்ற `லோன் ஆப்’களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. உங்களிடம் ஸ்மார்ட்போன் இருந்தால் போதும்; உங்களுக்கு எளிதில் கடன் கிடைத்துவிடும். நீங்கள் எந்த ஆவணத்தையும் தூக்கிக்கொண்டு அலைய வேண்டியதில்லை; எந்த விண்ணப்பத்தையும் நீட்ட வேண்டியதில்லை. `லோன் ஆப்’கள் மூலம் சிறிய மற்றும் பெரிய தொகைக் கடன்களை மிகவும் சுலபமாக வாங்கிவிட முடியும் என்கிற மாதிரி பல அனுகூலங்கள் இந்த லோன் ஆப்பில் உள்ளன. ஆனால், கடன் வாங்கிய பிறகு, லோன் ஆப் நிறுவனங்கள் எப்படி நடந்து கொள்ளும் என்பதை குணசீலனின் கதையைக் கேட்டால், நமக்கு தெரியும்.

குணசீலன் என்பவருக்கு மோசமான நிதிச்சிக்கல். ஏற்கெனவே கடன் கொடுத்தவர் கழுத்தை நெருக்க, செய்வதறியாமல் தவித்துக்கொண்டிருந்த நேரம் அது. அவருடைய நண்பர் ரமேஷிடம், தனது கடன் பிரச்னைகளைச் சொல்லி புலம்பிக்கொண்டிருந்தபோது, ரமேஷ் சொன்ன ஐடியா குணசீலனுக்கு சரியாகப்பட்டது. `லோன் ஆப்’ மூலம் இன்ஸ்டன்ட் கடன் வாங்கி, தற்காலிகமாகக் கடன் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம் என்பதுதான் அந்த ஐடியா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரபலமான `லோன் ஆப்’ ஒன்றின் வாயிலாகக் கடனுக்கு விண்ணப்பிக்க, ஒரு சில நிமிடங்களிலேயே கடன் தொகை குணசீலனின் வங்கிக் கணக்கில் கிரெடிட் ஆனது. கடன் கொடுத்தவருக்கு பணத்தைத் திரும்பத் தந்துவிட்டு, `அப்பாடா, ஒரு வழியாக பிரச்னை முடிந்தது’ என நினைத்தவருக்கு, மிகப் பெரிய பிரச்னையே இனிதான் ஆரம்பமாகிறது என்று தெரியவில்லை.

அடுத்தடுத்த மாதங்களில் `லோன் ஆப்’ மூலம் வாங்கிய கடனையும் திருப்பிச் செலுத்த முடியாத சூழ்நிலை குணசீலனுக்கு. கால அவகாசம் கேட்டார். கடன் தந்த ஆப் நிறுவனம் தரவில்லை. `லோன் ஆப்’ நிறுவனத்தினர், குணசீலணுக்கு போன் செய்து வெளியில் சொல்ல முடியாத டார்ச்சர்களை எல்லாம் கொடுக்க ஆரம்பித்தனர். `எளிதில் கடன் கிடைக்கிறதே’ என்று யோசிக்காமல் லோன் ஆப் மூலம் கடன் வாங்கியது தவறு’ என்பது, அப்போதுதான் அவருக்குப் புரிந்தது.

Bridgefy App
Bridgefy App
ஏன் வங்கிகள் உங்களுக்கு சில்லறைக் கடன்கள் வழங்க ஆர்வம் காட்டுகின்றன தெரியுமா? #LoanVenumaSir - 3

லோன் ஆப் சிக்கல்கள்

`லோன் ஆப்’ பயன்பாட்டிலுள்ள சிக்கல்கள் என்ன, லோன் ஆப் மூலம் கடன் வாங்குவதால் விளையும் நிதிப் பிரச்னைகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள தொழில்நுட்ப வல்லுநரான பிரபு கிருஷ்ணாவிடம் பேசினோம்.

``நீங்கள் செல்போனில் லோன் ஆப்பை டவுன்லோடு செய்கிறீர்கள். அது, உங்கள் இ-மெயில் கணக்கை எடுத்துக் கொள்ளலாமா எனக் கேட்கும். நீங்கள் `ஓகே’ என அழுத்துவீர்கள். பின்பு, ஃபேஸ்புக் கணக்கைக் கேட்கும். அதற்கும் `ஓகே’ என அழுத்துவீர்கள். பின்பு, உங்கள் சம்பள விவரங்கள், ஆதார் எண் என எல்லாவற்றையும் ஆப் வாயிலாகவே கொடுப்பீர்கள். இதன் பிறகு, உங்களுக்கு லோன் கிடைத்துவிடும்.

இந்த வகைக் கடன்களுக்கு அடமானமாக எதையும் கேட்க மாட்டார்கள் என்பது நல்ல விஷயமாக உங்களுக்குத் தோன்றினாலும், உங்களுடைய ஸ்மார்ட் போனில், நீங்கள் வைத்திருக்கும் அலைபேசி எண்கள், தனிப்பட்ட விஷயங்கள் என நீங்கள் நினைக்கும் புகைப்படங்கள், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு எண்கள் என அனைத்து விவரங்களையும் அடமானம் வைத்துதான் கடன் வாங்குகிறீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.

ஆப்ஸில் கடன் வாங்கினாலும் தப்பிக்க முடியாது!

`நேரில் சென்று வட்டிக் கடையில் கடன் வாங்கினால்தானே பணத்தைக் கேட்டு பிரச்னை செய்வார்கள்; ஆப் மூலம் பணம் பெற்றால் என்ன செய்துவிட முடியும்’ என்ற எண்ணம் உங்களுக்கு வரலாம். என்னைக் கேட்டால், லோன் ஆப்கள் மூலம் பணம் பெறுவதுதான் மிகப் பெரிய சிக்கலே. ஏனெனில், நீங்கள் நேரடியாக வங்கிக்கோ, தனி நபரிடமோ சென்று கடன் பெறும்போது, அவர்கள் சொல்லும் கடன் விதிமுறைகளைக் கேட்டுத் தெரிந்த பிறகு, அவை உங்களுக்கு சரிப்பட்டு வரும் என்றால் மட்டுமே கடன் வாங்குவீர்கள். இல்லையெனில், வாங்க மாட்டீர்கள். ஆனால், லோன் ஆப்பில் நீங்கள் `I Agree’ என அழுத்தினால்தான் அந்த ஆப் வேலை செய்யும். இதன் மூலம், அவர்களின் எல்லா சட்டதிட்டங்களையும் ஏற்றுக் கொள்ளக் கட்டாயப்படுத்துவார்கள்.

Indian Rupee
Indian Rupee
வங்கிக்கடனுக்கு விண்ணப்பிக்கிறீங்களா... இந்த கே.ஒய்.சி பிரச்னைகளை தெரிஞ்சுக்கோங்க! #LoanVenumaSir -5

தனியார் மூலம் பணம் வசூல்!

இந்த ஆப்கள் அனைத்தும் தனியார் ஏஜென்சிகள் மூலமே பணத்தை வசூலிக்கின்றன. கடன் பணத்தை வசூலிக்க அவர்கள் பலவிதமான வழிமுறைகளைப் பின்பற்றுவார்கள். இது குறித்து லோன் ஆப் நிறுவனங்களிடம் புகார் செய்தால், எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். இந்தத் தனியார் ஏஜென்சியை நடத்துபவர்கள் முறையான அனுமதி பெற்று அலுவலகம் எல்லாம் வைத்திருக்க மாட்டார்கள் விதிமுறைகளைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் எங்கிருந்தோ இயங்கும் இத்தகைய கும்பல்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது அவ்வளவு சுலபமல்ல.

என்றாலும், இதுபோன்ற தகவல் திருட்டுகள், சைபர் கிரைமில் வரும். இது தொழில்நுட்ப சட்டம் 2000-ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தயக்கம் இல்லாமல் உடனடியாகக் காவல்துறை மற்றும் நீதிமன்றத்தை அணுக வேண்டியது அவசியம்” என்றார்.

எதன் அடிப்படையில் கடன் கொடுக்கிறார்கள்? லோன் ஆப் மூலம் கடன் வாங்குவதால் என்னென்ன நிதிப் பிரச்னைகள் விளையும் மற்றும் அவசர தேவைக்கு லோன் ஆப்களை அணுகாமல், வேறு எந்தக் கடன்களை மக்கள் பரிசீலிக்கலாம் என்பது குறித்து விரிவாக விளக்கும் நாணயம் விகடனின் கட்டுரையைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு