பிரீமியம் ஸ்டோரி

அலையவிடாமல் முடித்துக் கொடுக்கலாமே!

என் பணம் என் அனுபவம்!

மீபத்தில் ஸ்மார்ட் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து, பிறகு அதன் நகல் காப்பிகளை எங்கள் பகுதி வட்டார வழங்கல் அலுவலகத்தில் சமர்ப்பித்தேன். சில நாள்களில் என் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக எஸ்.எம்.எஸ் வந்தது. எனக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்துதந்த இன்டர்நெட் கடைக்காரரிடம் போய்க் காரணம் கேட்டேன். ‘‘முகவரிச் சான்று தவறாக இணைக்கப் பட்டதாகச் சொல்லி, உங்கள் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார்கள். ஆனால், இணையதளத்தில் அனுமதிக்கப்பட்ட சான்றுகளில் ஒன்றைத்தான் விண்ணப்பத்துடன் இணைத்துத் தந்திருக்கிறேன். சரியான டாக்குமென்டுகளை இணைத்தாலும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி நிராகரிக்கிறார்கள். ஏன் இப்படிச் செய்கிறார்கள் என உங்களுக்குத் தெரியாதா சார்...’’ என்று பூடகமாகப் பேசியபடி, விண்ணப்பத்தை மீண்டும் பதிவேற்றம் செய்து தந்தார். மீண்டும் டாக்குமென்ட்டு களைச் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் கொடுத்துவந்தேன். நல்லவேளையாக இந்தமுறை என் விண்ணப்பம் நிராகரிக்கப் படவில்லை. ஆன்லைன்மூலம் விண்ணப்பம் செய்வதே லஞ்சம், ஊழல் போன்ற பேச்சு வராமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆன்லைனில் பதிவு செய்துவிட்டு, மீண்டும் அந்த டாக்குமென்ட்டுகளை நேரில் போய்த் தந்தால், லஞ்சத்துக்கு அது வழிசெய்து தருகிற மாதிரிதானே! எல்லாவற்றுக்கும் ஆன்லைனில் மட்டும் விண்ணப்பித்தால் போதும் என்ற உத்தரவை அரசு வெளியிட வேண்டும்!

மணிவாசகம், போன் மூலமாக

சம்பளம் மட்டுமே பிரதானமல்ல!

என் பணம் என் அனுபவம்!

நான் முன்னணி ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் நல்ல சம்பளத்தில் பணிபுரிந்து வந்தேன். சமீபத்தில் என் நண்பர் ஒருவன் கார் தயாரிக்கும் பெரிய நிறுவனத்தில் பணியில் சேர்ந்தான். அங்கு ஒரு வேலை காலியாக இருப்பதாகவும் அதிக சம்பளம் கிடைக்கும் என்றும் சொல்லி என்னை அழைத்தான். நானும் என் நீண்ட நாள் நண்பனோடு சேர்ந்து இருக்கலாமே என நினைத்து வேலை மாறினேன்.

என் பணம் என் அனுபவம்!

நான் எனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தவுடன், என் உயரதிகாரிகள் ஏற்றுக்கொண்டுவிடவில்லை. என்ன காரணம், என்ன குறை என்றெல்லாம் கேட்டு என்னைத் துளைத்தெடுத்து விட்டார்கள். அடுத்த சில மாதங்களில் பதவி உயர்வுடன் சம்பளத்தை அதிகரித்துத் தருவதாகச் சொல்லியும் நான் அதைக் கேட்கவே இல்லை. அந்த யோசனைகளையெல்லாம் நிராகரித்துவிட்டு வந்ததன் விளைவை இப்போதுதான் உணர்கிறேன். சம்பளம் அதிகம் என்ற அளவுகோலை மட்டும் வைத்துக்கொண்டு பணி மாறியது தவறு என இப்போதுதான் புரிகிறது. புதிய வேலை எனக்குப் பரிச்சயம் இல்லாததால், எனக்குப் பிடிக்கவில்லை. இதனால் என் பெர்ஃபாமென்ஸ் குறைந்தது. அடுத்த ஆறு மாதத்திலேயே, சரியாக வேலை செய்யவில்லை என்று காரணம் காட்டி என்னை வேலையிலிருந்து அனுப்பிவிட்டார்கள். என்ன வேலை என்பது பற்றியெல்லாம் விசாரிக்காமல், சம்பள அதிகரிப்பை மட்டும் கவனத்தில்கொண்டு வேலை மாறினால் இப்படிக் கஷ்டப்பட வேண்டியிருக்கும்!

- முருகேசன், கோவை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கூடுதல் கடன்... கூடுதல் சுமை!

என் பணம் என் அனுபவம்!

ரண்டு ஆண்டுகளுக்குமுன் ரூ.20 லட்சம் வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டினேன். என் வீட்டுக்குவந்த உறவினர் ஒருவர், மொட்டை மாடியில் சிம்பிளாக ஒரு வீட்டைக் கட்டி வாடகைக்கு விட்டால் வருமானம் வருமே என ஆலோசனை சொன்னார். அதன்பிறகு என் மனைவியும் நச்சரிக்க ஆரம்பித்துவிட்டாள். வங்கியில் டாப்அப் லோன் போட்டு வீட்டைக் கட்டி முடித்தேன். ஆனால், வாடகைக்கு ஆள் வந்தபாடில்லை. கடந்த ஆறு மாதங்களாகக் கூடுதலாக ரூ.5,000 இ.எம்.ஐ செலுத்தி வருவதால், குடும்பச் செலவுகளைச் சமாளிக்க கடன் வாங்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டேன். யார் என்ன ஆலோசனை சொன்னாலும், நம்முடைய பகுதியில் வீடு வாடகைக்கு விடக் கூடிய அளவுக்கு வாய்ப்பிருக்கிறதா என ஆராய்ந்து பார்த்து விட்டு, புதிதாக வீடு கட்டும் வேலையில் இறங்க வேண்டும்!

-சிவபிரகாஷ், செட்டிபுண்ணியம்.

திட்டமிட்டால் பற்றாக்குறை வராது!

என் பணம் என் அனுபவம்!

ன் கணவர் தனியார் நிறுவனத்திலும், நான் அரசு அலுவலகத்திலும் பணிபுரிகிறோம். இருவருக்கும் சேர்த்து ரூ.50,000 வரை மாதச் சம்பளம் வருகிறது. சமீபத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒன்றை வாங்கிவிட்டதால் இ.எம்.ஐ மட்டும் ரூ.20,000 செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். குழந்தைகள் பெரிய பள்ளிக்கூடத்தில் படித்துவருவதால், படிப்புச் செலவுகளோடு, குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தடுமாறினோம். வீட்டுக்கு வந்திருந்த என் அக்காவிடம் நிலைமையைச் சொல்லிப் புலம்பினேன். அவர் என் வரவு செலவு விவரங்களை எழுதித் தரச் சொன்னார். எழுதிக்கொடுத்ததும் அதைப் பார்த்து அதிர்ந்துவிட்டார். காரணம், நான் செய்துவரும் செலவு மிக மிக அதிகம் என்று நினைத்தார் அவர். சில செலவுகளைத் தவிர்க்கும்படி எனக்கு ஆலோசனை சொன்னார். இதன்பிறகு அலுவலகத்துக்கு என் கணவரின் வண்டியிலேயே போக ஆரம்பித்தேன். ஒரு அறையில் மட்டும் ஏசியைப் பயன்படுத்தினேன். மாதம் ஒருமுறை மட்டுமே சினிமா, ஹோட்டலுக்குச் சென்றோம். வீட்டில் தொட்டியில் காய்கள், கீரைகளை வளர்க்க ஆரம்பித்தேன். என்ன ஆச்சர்யம்! எல்லா செலவுகளும் பாதியாகக் குறைந்தது. எவ்வளவு வருமானம் என்பதைவிட, எவ்வளவு செலவழிக்கிறோம் என்பதில்தான் பணத்தை மிச்சப்படுத்தும் சூட்சுமம் இருக்கிறது!

-சுபாஷினி, சென்னை

நிதி தொடர்பான உங்கள் அனுபவங்களை finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு