பிரீமியம் ஸ்டோரி
என் பணம் என் அனுபவம்!

வரி வசூல் ஜாக்கிரதை!

என்னுடைய வீடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது. சமீபத்தில் நான் அலுவலக வேலை காரணமாக பெங்களூருக்குச் சென்றிருந் தேன். அப்போது வீட்டுக்கான வரி வசூல் செய்ய என்று இரண்டு பேர் வந்திருக்கிறார்கள். ‘‘ரூ.3,000 வீட்டு வரி செலுத்தாமல் நிலுவையில் உள்ளது. இன்றைக்குள் செலுத்தாவிட்டால் அபராதம் ரூ.1,000 விதிக்கப்படும்’’ என்று சொல்லி யிருக்கிறார்கள். இதுபற்றி என்னிடம் சொல்ல, என் மனைவி எனக்கு போன் செய்திருக்கிறார். ஆனால், அன்று நான் முக்கியமான மீட்டிங்கில் இருந்ததால் போனை எடுத்துப் பேச முடியவில்லை. வேறு வழியில்லாமல் பணத்தைத் தந்திருக்கிறார் என் மனைவி. நான் ஊருக்கு வந்ததும் விஷயத்தைக் கேள்விப்பட்டுத் திடுக்கிட்டுப் போனேன். காரணம், மூன்று மாதங்களுக்கு முன்புதான் நான் வீட்டு வரி கட்டினேன். என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள நகராட்சி அலுவலகத்துக்குப் போய் விசாரித்தபோது, அவர்கள் அப்படி யாரையும் அனுப்பவில்லை என்றார்கள். நான் இல்லாத சமயத்தில் யாரோ திட்டமிட்டு ஏமாற்றியிருப்பது தெரிந்தது. இனி வீட்டு வரி மட்டுமல்ல, எந்தக் கட்டணத்தைக் கட்டினாலும் அதைக் கட்டியவுடன், அந்தத் தகவலை என் மனைவிக்கும் தெரியப்படுத்தி விடுவது என்று முடிவெடுத்திருக்கிறேன்!

-கதிர், போன் மூலமாக

என் பணம் என் அனுபவம்!

நண்பரின் யோசனை தந்த நல்ல லாபம்!

நான் ஸ்வீட் ஸ்டால் வைத்துள்ளேன். ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் விடுமுறை நாள்களில் வியாபாரம் பரவாயில்லை. மற்ற நாள்களில் வியாபாரம் சுமாராகத்தான் இருந்தது. இதற்கான காரணம் எனக்குப் புரியவில்லை. என் நண்பர் ஒருவரிடம் இதுகுறித்து பேசிக்கொண்டிருந்தபோது, அவர் இப்போதிருக்கும் கடைக்கு எதிர்புறத்தில் கடையை மாற்றம் செய்யச் சொன்னார். அப்படிச் செய்தால் வியாபாரம் ஆகுமா என்றேன். பொதுவாக, நாம் சாலையின் இடதுபுறமாகச் செல்ல வேண்டும் என்பதே விதிமுறை. காலையில் அலுவலகத்துக்குச் செல்லும் அவசரத்தில் யாரும் பொருள் வாங்குவதற்குக் கடைக்கு வரமாட்டார்கள். மாலையில் வீட்டுக்குப் போகும்போதுதான் பலரும் கடைக்குச் சென்று பொருள் வாங்குவார்கள். நாம் போகும் திசையில் பக்கவாட்டில் இருக்கும் கடையை விட்டுவிட்டு சாலையை கிராஸ் செய்து சென்று பொருள் வாங்குவதைப் பலரும் செய்வதில்லை. இது மக்கள் மனோபாவம். அந்த வகையில் கடையை எதிர்புறம் மாற்றினால் உங்களுக்கு வியாபாரம் கூடுதலாகும் என்றார். அவர் சொன்னபடி செய்தேன். ஆச்சர்யமாகத்தான் இருந்தது. வியாபாரம் இரட்டிப்பானது. ‘எங்களுக்கு இப்போ ஈஸியா இருக்கு அண்ணாச்சி’ எனப் பல வாடிக்கையாளர்கள் என்னிடமே சொல்லிவிட்டுப் போகிறார்கள். போட்டி அதிகமுள்ள சூழலில் இந்த டெக்னிக் கைகொடுக்கலாம் என்பது என் அனுபவ உண்மை.

-சிவபாலன், திருவள்ளூர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என் பணம் என் அனுபவம்!

நட்பு வேறு... தொழில் வேறு!

நானும் என் நண்பரும் கூட்டாகத் தொழில் செய்கிறோம். கடந்த சில வருடங்களாகவே லாபம் குறைந்து வந்தது. தொழில் நன்றாகப் போகும்போது லாபம் ஏன் குறைகிறது என எனக்குக் குழப்பம். என் நண்பர் வெளியூர் சென்ற சமயத்தில், கடந்த இரண்டு வருட ஆர்டர்கள், பணவரவுகளை ஆராய்ந்து பார்த்துவிட்டு, வேலை முடித்துக் கொடுத்த சிலரை அணுகி பில் காப்பியை வாங்கிப் பார்த்தேன். நான் அதிர்ந்துபோனேன். டூப்ளிகெட் பில் கொடுத்து பணம் வாங்கப்பட்டிருந்தது. வாங்கிய பணத்தைவிட குறைந்த தொகைக்கே பில் இணைக்கப்பட்டிருந்தது. நண்பர்தானே என சில விஷயங்களைக் கவனிக்காமல்விட்டது தவறு எனப் புரிந்துகொண்டேன். நாற்பது ஆண்டு கால நண்பர் என்றாலும், நட்பு வேறு, தொழில் வேறு.

-நாராயணசாமி, சேலம்

என் பணம் என் அனுபவம்!

மருத்துவக் கொள்ளை!

என் மனைவிக்கு கடும் வயிற்று வலி. வயிற்று நோய் தொடர்பான ஒரு பெரிய டாக்டரிடம் அழைத்துச் சென்றேன். ரூ.25,000 செலவில் அனைத்து டெஸ்ட்டுகளையும் எடுத்துவிட்டு, கர்ப்பப் பையில்தான் பிரச்னை; எனவே, உடனடியாக ஆபரேஷன் செய்து கர்ப்பப் பையை அகற்ற வேண்டும் என்றார் டாக்டர். பிறகு, நண்பர் ஒருவரின் ஆலோசனைபடி, பெண் மருத்துவர் ஒருவரிடம் என் மனைவியை அழைத்துச் சென்றேன். அவர் வேறு சில டெஸ்ட் எடுத்துப் பார்த்துவிட்டு, அல்சர் பிரச்னையால்தான் வயிற்று வலி என்று சில மருந்துகளை எழுதித் தந்தார். ஒரே வாரத்தில் வயிற்று வழி போனது. பணத்தை மட்டுமே இலக்காகக்கொண்ட மருத்துவமனைகளை அடையாளம் கண்டு தவிர்த்தால், பணம் மிச்சமாவதுடன், தேவை யில்லாமல் உடல்பாகத்தை இழக்க வேண்டியிருக்காது!

-சேதுராமன், புதுச்சேரி

என் பணம் என் அனுபவம்!

கூட்டணியால் கிடைத்த லாபம்!

நான் வாடகைக்குக் குடியிருந்த பகுதிக்கு மிக அருகில் புதிதாக ரியல் எஸ்டேட் லே அவுட் போட்டார்கள். அரை கிரவுண்ட் வாங்கினால் லோன் போட்டு உடனே வீட்டைக் கட்டிவிடலாம் என்றார் என் மனைவி. அரை கிரவுண்ட் பிளாட் ரூ.6 லட்சம் சொன்னார்கள். ஆறு பிளாட் மொத்தமாக வாங்கினால் ஒரு பிளாட் இலவசம் என ஆஃபர் இருந்தது. உடனே என் மனைவி தெருவில் உள்ளவர்கள், உறவினர்களிடம் பேசி நான்கு பேரைச் சேர்த்தார். நான் அலுவலக நண்பர்கள் இருவரைச் சேர்த்தேன். ஆறு பிளாட் வாங்கும் தொகையில் ஏழு பிளாட் கிடைத்தது. ஒரு பிளாட்டுக்கான தொகையை நாங்கள் ஏழு பேரும் சமமாகப் பங்கிட்டு, நாங்கள் செலுத்த வேண்டிய தொகையில் ஈடு செய்துகொண்டோம். கூட்டாகச் சேர்ந்ததால் எல்லோருக்குமே லாபம்!

-வேலுமணி, திருச்சி

என் பணம் என் அனுபவம்!

நிதி தொடர்பான உங்கள் அனுபவங்களை finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு