பிரீமியம் ஸ்டோரி
என் பணம் என் அனுபவம்!

ஆதாரம் இல்லாமல் பணம் தராதீர்!

நான் வாடகை வீட்டில் குடியிருப்பதற்காக அட்வான்ஸ் தொகை ரூ.50,000 கொடுத்திருந்தேன். மாதம் ரூ.5,000 வாடகையைச் சரியாகத் தந்துவிடுவேன். சமீபத்தில், தன் மகனுக்கு வீடு தேவைப்படுவதாகச் சொல்லி இரண்டு மாதத்தில் காலி செய்யச் சொன்னார் வீட்டின் உரிமையாளர். அடுத்த ஒரே வாரத்தில் அதே பகுதியில் நல்ல வீடு ஒன்று எனக்குக் கிடைத்ததால், உடனே காலி செய்ய முடிவெடுத்து, அட்வான்ஸைத் திரும்பக் கேட்டேன். அடுத்த மாதம் தந்துவிடுகிறேன் என்றார் வீட்டு உரிமையாளர். நான் என்னிடமிருந்த பணத்தை அட்வான்ஸாகத் தந்து, வீட்டைக் காலி செய்துவிட்டேன். ஆனால், அதன்பிறகு பலமுறை அவரிடம் அட்வான்ஸ் பணம் கேட்டும் திரும்பத் தரவே இல்லை. அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, ‘‘இதுவரை குடியிருந்த யாருக்குமே அவர் அட்வான்ஸைத் திரும்பத் தரவில்லை’’ என்றார்கள். வீட்டுக்கு அட்வான்ஸ் பணம் கொடுத்ததற்கான சான்று எதுவுமில்லை என்றதால், மேற்கொண்டு என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. ஆதாரம் மட்டும் இருந்திருந்தால், அவர்மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆதாரம் இல்லாமல் பணம் தரக்கூடாது என்பதுதான் நான் இதிலிருந்து கற்ற பாடம்!

-சுந்தர், தேனி

என் பணம் என் அனுபவம்!

ஒப்பந்தத்தைப் படித்துப் பார்த்துக் கையொப்பமிடுங்கள்!

நான் ஒரு குடும்பத் தலைவி. என் கணவர் அரசு அலுவலர். நாங்கள் சென்னையில் கட்டப்பட்டு கொண்டிருக்கும் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் வீடு வாங்க முன்பணம் ரூ.10 லட்சம் தந்தோம். வீட்டின் மொத்தத் தொகை ரூ.1 கோடி. ஒப்பந்தம் செய்துகொண்டோம். ஒப்பந்தத்தில் ஒரு விதி, வீடு வாங்குபவர் பணம் கட்டாவிட்டால் 10% பிடித்துக்கொள்ளப்படும் என்று இருந்தது. வீட்டுக்கான பணத்தை கட்டமுடியாத நிலையில், அந்த வீட்டை வேறு ஒருவருக்குக் கொடுக்க ஒப்புக்கொண்டு, ரூ.9 லட்சம் திரும்பத் தருமாறு கேட்டோம். ஆனால், அவர்களோ ரூ.1 கோடியில் 10% ரூ.10 லட்சம். பணத்தைத் தரமுடியாது என்று கூறிவிட்டனர். ஒப்பந்தத்தில் எவ்வளவு தொகைக்கு 10% என்பது தெளிவாக இல்லை. வீடு வாங்கும்முன் ஒப்பந்தத்தைத் தெளிவாகப் படித்துப் பார்த்து கேள்வி எழுப்பாதது தவறுதான்!

- விசன்யா, திருச்சி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என் பணம் என் அனுபவம்!

ஆன்லைனில் பர்ச்சேஸ்... கூடுதல் கவனம் தேவை!

கடந்த மாதம் என் குழந்தையின் பிறந்த நாள் வந்தது. வழக்கமாக பஜாருக்குச் சென்றுதான் ட்ரெஸ் வாங்குவோம். சமீபமாக ஆன்லைன் பர்ச்சேஸுக்கு அடிமையாகிவிட்டதால், பிறந்த நாள் ட்ரெஸ்ஸையும் ஆன்லைனில் பர்ச்சேஸ் செய்தேன். பிறந்தநாளுக்கு முதல்நாள்தான் பார்சல் கிடைத்தது. பிரித்துப் பார்த்த நான் அதிர்ச்சியாகிவிட்டேன். ஆன்லைனில் பார்த்த தோற்றத்துக்கும் பார்சலில் வந்த ஆடையின் தோற்றத்துக்கும் துளியும் சம்பந்தமே இல்லை. பிறகு கடைசி நேரத்தில் பக்கத்தில் உள்ள கடைக்குச் சென்று வேறு ட்ரெஸ் வாங்கி வந்தேன். ஆன்லைனில் சில பொருள்களை வாங்கலாம். ஆடைகள் உள்ளிட்ட சிலவற்றை வாங்கும்போது நாம் எதிர்பார்த்த தோற்றம், அளவு இல்லாமல்போகலாம். கூடுதல் கவனம் அவசியம் என்பது எனக்கு அன்று புரிந்தது!

-விக்னேஷ், வேலூர்

என் பணம் என் அனுபவம்!

எல்லோரிடமும் எல்லாமும் சொல்லாதீர்கள்!

நான் சமீபத்தில் டெல்லி, ஆக்ரா என ஒரு வாரம் சுற்றுலா சென்றேன். சுற்றுலாவுக்குப் புறப்படுவதற்கு முதல்நாள் வழக்கமாக பால் கொண்டுவரும் பால்காரரிடம், “நாளைமுதல் ஒரு வாரத்துக்கு டூர் போக இருப்பதால் பால் எடுத்துவர வேண்டாம்” என்று சொன்னேன். சுற்றுலாவுக்குச் சென்றுவந்து பார்த்தபோது, வீட்டு காம்பவுண்டுக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டுமானக் கம்பிகள் குறிப்பிட்ட அளவு குறைந்திருப்பதை உணர்ந்து அக்கம்பக்கத்தில் விசாரித்தேன். தெருமுனையில் இருக்கும் காயிலாங்கடை பையன் எடுத்துக்கொண்டு போனதாக சிலர் சொன்னார்கள். அங்கே சென்று கேட்டால், “நான் எடுக்க வில்லை” என்று சாதித்தான் அவன். பிறகு விசாரிக்கும்போதுதான் தெரிந்தது, காயிலாங்கடையில் வேலை பார்க்கும் பையனும் பால்காரரின் மகனும் நண்பர்கள் என்று. வெளியூர் போகும்போது எல்லோரிடமும் சொல்லிவிட்டுப் போவதைத் தவிர்க்கலாமே!

-சிவபாலன், கும்பகோணம்

என் பணம் என் அனுபவம்!

சின்ன லாபம்... பெரிய நஷ்டம்!

நான் வீடு கட்டிக்கொண்டிருக்கிறேன். கட்டுமானப் பொருள்களையெல்லாம் எங்கு விலை குறைவாகக் கிடைக்கிறது என்று பார்த்துப் பார்த்து வாங்கினேன். அக்கம்பக்கத்தினர் எல்லோரும் என்னை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். புதிதாக வீடுகட்டும் சிலர் எந்தப் பொருளை எங்கே வாங்குவது என என்னிடம் ஆலோசனை கேட்டார்கள். எனக்குப் பெருமையாக இருந்தது. வீட்டின் வராண்டா சன்னல்களுக்கு க்ளாஸ் தேவைப்பட்டது. லோக்கலில் விசாரித்துவிட்டு, பிறகு பாரிமுனை பகுதிக்கும் சென்று விசாரித்தேன். 5% அளவுக்கு விலை வித்தியாசம் இருந்தது. பாரிமுனையில் வாங்கி லாரியில் ஏற்றி அனுப்பிவிட்டு வந்தேன். லாரிக்காரர்களும் இறக்கி விட்டுச் சென்றுவிட்டார்கள். பிறகு இரண்டு, மூன்று நாள்கள் கழித்து கார்பென்டர் வந்து பிரித்துப் பார்த்த போதுதான் ஐந்து க்ளாஸுக்கும்மேல் விரிசல் விட்டிருக்கும் விஷயம் தெரிந்தது. மீண்டும் பாரிமுனைக்குச் சென்று கேட்டபோது, “நாங்கள் கொடுத்தபோது சரியாகத்தான் இருந்தது. லாரியில் கொண்டுசெல்லும்போதோ, இறக்கி வைக்கும்போதோ உடைந்ததற்கு நாங்கள் பொறுப்பல்ல” என்று சொல்லிவிட்டார்கள். சின்ன லாபத்துக்கு ஆசைப்பட்டு, பெரிய நஷ்டமடைந்தேன். விலை விசாரித்து வாங்குவது புத்திசாலித்தனம்தான். ஆனால், உடையும் தன்மையுள்ள சில பொருள்களை லோக்கலில் வாங்கி விடுவதே பாதுகாப்பானது.

-வெற்றிவேல், தாம்பரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு