பிரீமியம் ஸ்டோரி

செகண்ட்ஹேண்ட் பைக்... ஜாக்கிரதை!

அலுவலகத்துக்குச் சென்றுவர ஒரு பைக் இருந்தால் பரவாயில்லை எனத் தோன்றவே செகண்ட் ஹேண்ட் பைக் நல்லதாகக் கிடைக்குமா எனப் பார்த்துக்கொண்டிருந்தேன். நண்பர்கள், தெரிந்தவர்களிடம் சொல்லிவைத்திருந்தேன். என் நண்பன் ஒருவன் ஆன்லைனில் ஒரு பைக் விற்பனைக்குப் பார்த்தேன்; பிடித்தால் வாங்கலாம் என்று லிங்க் அனுப்பிவைத்தான்.

என் பணம் என் அனுபவம்!

பைக் மாடல் எனக்குப் பிடித்திருந்தது. விலை 48,000 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதே மாடல் புது பைக் ஷோரூமில் 75,000 என விசாரித்துத் தெரிந்துகொண்டேன். பிறகு நண்பனுடன் சென்று பைக்கை நேரில் பார்த்து வாங்கி வந்தேன். மூன்றே மாதங்களில் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு, ரூ.5,000-க்குமேல் செலவு வைத்துவிட்டது. பைக் வாங்கிய முகவரிக்குச் சென்று பார்த்தால், பைக்குக்கு உரியவர் பீகாரைச் சேர்ந்தவர் என்றும் அவர் வீட்டைக் காலி செய்துவிட்டு டெல்லி போய்விட்டதாகவும் சொன்னார்கள். பைக், எலெக்ட்ரானிக் பொருள்களை நன்றாகத் தெரிந்தவர்களிடம் மட்டும் வாங்குவது நல்லது. முகம் தெரியாத நபர்களிடம் வாங்குவதைத் தவிர்த்துவிடுங்கள்.

-சுந்தர், சென்னை

என் பணம் என் அனுபவம்!

பேருந்துக் கட்டணத்தை மிச்சப்படுத்திய பக்கா ஐடியா!

நான் வீட்டுப் பொறுப்பைக் கவனித்துவரும் இல்லத்தரசி. வீட்டிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனியார் பள்ளியில் என் மகள் 5-ம் வகுப்புப் படிக்கிறாள். பள்ளிக்கட்டணம் போக பள்ளிப் பேருந்துக் கட்டணம் மட்டுமே ஆண்டுக்கு ரூ.18,000 வரை செலுத்திவந்தோம். எங்கள் வீட்டுக்கு எதிர்வீட்டில் குடியிருக்கும் பெண்ணுடன் எனக்கு நல்ல பழக்கம் இருந்தது. நல்ல தோழிகளாகப் பழகிவந்தோம். அந்தப் பெண்ணின் மகளும் என் மகள் படிக்கும் பள்ளியில்தான் ஆறாம் வகுப்புப் படித்து வந்தாள். எங்கள் இருவரின் வீட்டிலுமே ஸ்கூட்டர் இருந்தது. இருவருமே நன்றாக வண்டி ஓட்டுவோம். எனவே, எனக்கு ஒரு ஐடியா தோன்றியது. ‘‘குழந்தைகளைப் பள்ளிப் பேருந்தில் அனுப்புவதை நிறுத்திவிடுவோம். நான் ஒருவாரம், நீ ஒருவாரம் எனக் குழந்தைகளை பள்ளியில் விட்டு, அழைத்துவருவோம்” என்றேன். பெட்ரோல் செலவுகளைக் கழித்துவிட்டாலும் ஆண்டுக்கு ரூ.15,000 வரை எங்கள் இருவருக்குமே மிச்சம்.

-தர்ஷினி, கோவை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என் பணம் என் அனுபவம்!

பயணம்... பர்ஸ்... பணம் பத்திரம்!

சமீபத்தில் பேருந்தில் சென்னைக்குப் பயணம் செய்தோம். என் மனைவி ஏதோ வாங்க வேண்டும் என்றுக் கூற நான் பையிலிருந்த பர்ஸை எடுத்துப் பணத்தைக் கொடுத்துவிட்டு, மீண்டும் பர்ஸை பையிலேயே வைத்தேன். பஸ்ஸை ஹோட்டலில் நிறுத்தும்போது சாப்பிடச் சென்றோம். இரவு இரண்டு மணிக்கு இறங்கியதும் உறவினர் வீட்டுக்குச் செல்ல ஆட்டோ பிடித்தபோது, பர்ஸைத் தேடினால் காணவில்லை. அவ்வப்போது பையிலிருந்து பர்ஸை எடுத்ததைக் கண்காணித்த யாரோதான் எடுத்திருக்கக்கூடும் என யூகிக்க முடிந்தது. பணத்துடன் கிரெடிட், டெபிட் கார்டுகளும் பறிபோனதால் மனஉளைச்சலுக்கும், அலைச்சலுக்கும் ஆளானேன்.

-தேவராஜ், மதுரை

என் பணம் என் அனுபவம்!

நஷ்டத்தைக் கொடுத்த தங்கத்தின்மீதான மோகம்!

என் கணவர் கட்டட வேலைகளை கான்ட்ராக்ட் எடுத்துச் செய்து வருகிறார். இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறைதான் பணம் கிடைக்கும். பணம் வரும்போது மாதச் செலவுகளுக்குப் போக மீதம் இருக்கும் பணத்தைச் சேர்த்து வருடத்துக்கு ஒருமுறை தங்க நகைகளை வாங்கிவிடுவேன். தங்கத்தின்மீது எனக்கு இருக்கும் ஆர்வத்தையும் என் நடவடிக்கையும் தெரிந்த என் அக்கா, கொஞ்சமாவது பணமாகச் சேர்த்து வருமாறு சொன்னார். மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யுமாறு சொன்னார். அதை நான் கேட்கவில்லை. அக்கம்பக்கத்தினர் ஆச்சர்யமாகவும், பொறாமையாகவும் பார்ப்பார் கள். ஒருசமயம் நாங்கள் குடும்பத்துடன் வெளியூர் சென்று திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 25 பவுனுக்குமேல் நகைகள் திருடப் பட்டிருந்தன. அளவுக்கு அதிகமாகத் தங்கத்தை வாங்கியதுடன், மற்றவர்கள் கண்ணை உறுத்தும் வகையில் நடந்துகொண்டதும் தவறு எனப் புரிந்துகொண்டேன்.

-கயல்விழி, நாமக்கல்

என் பணம் என் அனுபவம்!

வழக்கில் உள்ள நிலம்... வாங்கும்முன் விசாரியுங்கள்!

நான் பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறேன். எனக்கு இயற்கை விவசாயம் செய்வதில் ஆர்வம் அதிகம். என்னுடன் பணிபுரியும் நண்பர், திருச்சிக்கு அருகில் மூன்று ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளதாகவும், ஆளுக்குப் பாதியாக வாங்கலாம் என்றும் சொன்னார். வாங்கிப்போட்டால் ஓய்வுக்காலத்தில் பண்ணை அமைத்து இயற்கை விவசாயம் செய்யலாம் என நினைத்தேன்.

ஏக்கர் 10 லட்சம் சொன்னார்கள். பத்திரப்பதிவு செலவுகளோடு ரூ.30 லட்சத்துக்குப் பேசி முடித்தோம். என் பங்கு ரூ.15 லட்சம். பி.எஃப்-லிருந்து ரூ.10 லட்சம் எடுத்துத் தந்தேன். நண்பர் ரூ.10 லட்சம் போட்டு ரூ.20 லட்சம் அட்வான்ஸ் கொடுத்தோம். பாக்கித்தொகையைக் கொடுத்துவிட்டுப் பத்திரம் பதிவு செய்துகொள்கிறோம் எனச் சொல்லிவிட்டு வந்தோம். மீதித் தொகையுடன் நாங்கள் பத்திரப் பதிவுக்குச் சென்றபோது எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. எங்களுக்கு நிலம் விற்றவர் பங்குத் தகராறில் தற்கொலை செய்துகொண்டதாகச் சொன்னார்கள். அந்த நிலம் வழக்கில் வில்லங்கமாகிக் கிடப்பதை தாமதமாகத்தான் தெரிந்துகொண்டோம். நாங்கள் கொடுத்த ரூ.20 லட்சத்தை வாங்க இன்னும் அலைந்துகொண்டிருக்கிறோம்.

-மோகன், பெங்களூரு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு