Published:Updated:

`கொரோனாவால் சரிந்த வாகன உற்பத்தி’ -தேன் விற்பனையில் கவனம் செலுத்தும் ரோல்ஸ் ராய்ஸ்!

தேன் - ரோல்ஸ் ராய்ஸ்
தேன் - ரோல்ஸ் ராய்ஸ்

கொரோனாவால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக ஆட்டோ மொபைல் நிறுவனங்களின் விற்பனை சரிந்ததால் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தேன் விற்பனையில் கவனம் செலுத்தி வருகிறது.

கொரோனா பாதிப்பால் உலகப் பொருளாதாரம் இதுவரை சந்திக்காத பெரும் சரிவில் பயணித்துக்கொண்டிருக்கிறது. 2008-ல் உலகளாவில் பொருளாதாரத்தை உலுக்கிய கிரேட் டிப்ரஷன் எனும் பொருளாதார நெருக்கடி, பொருளாதார வரலாற்றில் கறுப்பு அத்தியாயமாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால், அந்த வரலாற்றை மாற்றி எழுதத் தொடங்கியிருக்கிறது இந்த கோவிட் -19 நோய்.

கொரோனா பாசிட்டிவ்
கொரோனா பாசிட்டிவ்

சீனாவிலிருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் சரியாக மூன்று மாதங்களில் உலகம் முழுவதும் பரவி பெரும் உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. நம் நாட்டுக்கு வராது, நம் மாநிலத்துக்கு வராது, நம் ஊருக்கு வராது என்று மனதுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தவர்களைக் கதிகலங்க வைத்திருக்கும் கொரோனாவால் இன்று ஒட்டுமொத்த உலகமும் ஸ்தம்பித்துப் போயிருக்கின்றது.

உலகளவில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 2,30,000 நெருங்கிக் கொண்டிருக்கிறது. நோய்த் தாக்குதலில் இருந்து மீண்டு வர முடியாமல் உலகின் நம்பர் ஒன் வல்லரசு நாடாகக் கருதப்படும் அமெரிக்கா திணறி வருகிறது. உலகளவில் நோய்ப் பரவலைத் தடுக்க பல நாடுகள் கடுமையான ஊரடங்கைக் கடைப்பிடித்து வருகின்றன. இந்த நிலையில், கொரோனா நோய்த் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் சீராகி மீண்டும் பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்ப வருடக்கணக்கில் கூட ஆகலாம் என்று உலகின் தலைசிறந்த பொருளாதார வல்லுநர்கள் பலரும் கணித்துள்ளனர்.

ஆட்டோமொபைல்
ஆட்டோமொபைல்

இந்தக் கொரோனா தாக்கத்தின் விளைவால் உற்பத்தித்துறையில் தொடங்கி ஆட்டோ மொபைல் துறை வரை அனைத்துத் துறைகளும் முடங்கியுள்ள நிலையில், ஒட்டுமொத்த தொழில்துறைகளும் வரலாறு காணாத நெருக்கடியைச் சந்தித்துள்ளன. குறிப்பாக உலகம் முழுவதும் கொரோனா நோய் பாதிப்பின் காரணமாக ஆட்டோ மொபைல் துறைகள் முற்றிலும் முடங்கி கடும் நிதி நெருக்கடியில் பயணித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிதி நெருக்கடியைச் சமாளிக்க ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பலவும் நிறுவன செலவீனங்களைக் குறைக்க தங்கள் ஊழியர்களுக்கு சம்பளமற்ற கட்டாய விடுப்பு, தற்காலிகப் பணிநீக்கம் மற்றும் சம்பளப் பிடித்தம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் காரணமாக உலகம் முழுதும் கோடிக்கணக்கானோர் தங்கள் வேலைகளை இழந்து வருமானமின்றித் தவித்து வருகின்றனர்.

கொரோனாவுக்கு இதுவரை எந்தத் தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் தனிமனித விலகல் ஒன்றை வைத்து மட்டுமே நோய்ப் பரவல் தொடர்ந்து தடுக்கப்பட்டு வருகிறது. ஒருவேளை இந்த நோய் பாதிப்பு சில மாதங்களுக்குப் பிறகு முற்றிலும் இல்லாமல் போய்விட்டாலும், அனைத்து தொழில்துறைகளும் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிவிடப் போவதில்லை என்கின்றனர் தொழில்துறை நிபுணர்கள். அந்தவகையில் ஆட்டோமொபைல் துறை கொரோனாவுக்குப் பிறகு மீண்டும் தன் இயல்பு நிலைக்குத் திரும்புவதில் பல சிக்கல்கள் உள்ளன.

ஆட்டோமொபைல் துறை
ஆட்டோமொபைல் துறை
vikatan

இந்தக் கொரோனாவால் வருமானமின்றி வாழ்வாதாரம் இழந்து மக்கள் தவித்துவரும் நிலையில், அவர்களுக்குப் புதிதாக வாகனங்களை வாங்குவதன் தேவை மிக குறைவாகவே இருக்கிறது. பெரும்பாலும் மக்கள் மீண்டும் இயல்பு நிலை திரும்பி வேலைகளுக்குச் சென்றாலும் அவர்களின் வருமானம் அவர்களின் நாட்டம் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயல்வதிலும் சேமிப்புகளின் மீதும்தான் இருக்குமே தவிர ஆடம்பரத் தேவையாகக் கருதப்படும் காரின் மீது இருக்காது.

Vikatan

ஏற்கெனவே இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை தனது வரலாற்றில் ஒரு நாளைக்கு ஒரு வாகனம்கூட விற்பனை ஆகாத மிக மோசமான விற்பனை மந்தத்தை இந்த ஊரடங்கால் சந்தித்து வருகிறது. இதே நிலை தொடரும்பட்சத்தில் பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் திவாலாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கார் தயாரிக்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பலவும் இந்தச் சூழலை சமாளிக்க தங்களின் `சைடு பிசினஸ்' களில் கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் உலகின் முன்னணி ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான `ரோல்ஸ் ராய்ஸ்' தனது நிறுவனத்தின் கார் உற்பத்தி முடங்கி, விற்பனை குறைந்துள்ளதை அடுத்து தற்போது தேன் உற்பத்தியில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது.

ரோல்ஸ் ராய்ஸ்
ரோல்ஸ் ராய்ஸ்

ஆடம்பரம் என்ற சொல்லுக்கு அழகு சேர்க்கும் செல்வமாக பணக்காரர்களால் கருதப்படும் ரோல்ஸ் ராய்ஸ் வகை கார்களுக்கு சந்தையில் எப்போதும் ஒரு தனி மவுசு இருந்து கொண்டுதான் இருக்கிறது. இங்கிலாந்தின் குட்வுட் பகுதியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ரோல் ராய்ஸ் நிறுவனம், கடந்த 2017-ம் ஆண்டு அதே குட்வுட் பகுதியில் சுமார் 42 ஏக்கர் பரப்பளவில் தேனீக்கள் வளர்ப்பை தொடங்கி தேன் உற்பத்தியில் களம் இறங்கியது.

எதிலும் பிரமாண்டம் காட்ட வேண்டும் என்பதே ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் அடிப்படை நோக்கம், அந்த வகையில் தேன் உற்பத்தியிலும் பிரமாண்டத்தை புகுத்த முடிவெடுத்த நிறுவனம் இயற்கையான முறையில் நல்ல தரமான தூய தேனை உற்பத்தி செய்து, ``உலகின் பிரத்யேக தேன்" என்று விளம்பரமும் செய்தது. ஆனால், சந்தையில் ரோல்ஸ் ராய்ஸ் தயாரிப்புக்குப் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து இன்றளவும் அந்த நிறுவனத்தின் தேன் விற்பனை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. வணிகரீதியாக வியாபார சந்தைக்குள் தன் தயாரிப்பைத் திணிக்காத ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் விற்பனை செய்து வருகிறது.

தேன்
தேன்

உலகளவில் என்னதான் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார்களுக்குப் போட்டியாக பல ஆடம்பர கார்களை பல கார் நிறுவனங்கள் தயாரித்து சந்தைக்குக் கொண்டுவந்த போதிலும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் பான்டோம், கோஸ்ட், டாவ்ன், வ்ரைத் மற்றும் கல்லினன் மாடல்கள்தான் இப்போதும் டாப்பில் உள்ளன. தன் தனித்துவத்தையே தன் அடையாளமாகக் கொண்டு இயங்கும் ரோல்ஸ் ராய்ஸ் தனது தயாரிப்பான தேனுக்கும் தனித்துவமான பெயரையே வைத்துள்ளது `பரவசத்தின் ஆவி' என்ற பெயரில் தனது வாடிக்கையாளர்களுக்குத் தேனை விற்பனை செய்து வருகிறது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் கார் உற்பத்தி செய்ய முடியாத இந்த இக்கட்டான சூழலை சமாளிக்க சிறிது காலத்துக்கு தனது கவனத்தை இந்தத் தேன் விற்பனையில் செலுத்த முடிவெடுத்துள்ளது.

சந்தையில் விற்கப்படும் மற்ற விலை உயர்ந்த தேன் வகைகளைவிடவும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் `பரவசத்தின் ஆவி' தேன் மிகவும் விலை அதிகமானதுதான். இருந்தாலும் வாடிக்கையாளர்கள் தயாரிப்பின் தரத்தை கருதி விலையை பார்க்காமல் வாங்கி சுவைக்கின்றனர்,`பரவசத்தின் ஆவியை'.

அடுத்த கட்டுரைக்கு