Published:Updated:

சென்னை டு ரஷ்யா! - மோடி, புதின் ஒப்பந்தத்தால் குறைந்த 3,000 நாட்டிக்கல் மைல்

பா.கவின்

சென்னை - ரஷ்யா இடையில் 5500 நாட்டிக்கல் மைல்தான் இருக்கும். இதனால் முன்பைவிட கிட்டத்தட்ட 3000 நாட்டிக்கல் தூரம் குறைகிறது.

modi and putin
modi and putin

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக ரஷ்யாவுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு நடந்த கிழக்கு மாகாண பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இதன்மூலம் கிழக்கு மாகாணத்துக்குச் சென்ற முதல் பிரதமர் என்ற பெருமையும் மோடியைச்சேரும்.

இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகி உள்ளன. கடல் போக்குவரத்து இணைப்பு, வணிகம், பெட்ரோலியம், அணுசக்தி, கல்வி, கலாசாரம், எண்ணெய் எரிவாயு, வியாபாரம், முதலீடு, விண்வெளி ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்களில் மிக முக்கியமானது சென்னை மற்றும் ரஷ்யா இடையேயான கடல் போக்குவரத்து வழித்தடம் தொடங்குவது ஆகும்.

modi and putin
modi and putin

இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், ``ரஷ்யாவின் ஒத்துழைப்பால் நாம் இந்தியாவில் நிறைய அணு உலைகளை அமைத்துள்ளோம். அணுசக்திப் பிரிவில் ரஷ்யாவுடன் கூட்டு ஒப்பந்தத்தில் பயணிக்கிறோம். இந்திய- ரஷ்ய உறவானது இரு நாட்டின் தலைநகரத்தில் வசிக்கும் மக்களை மட்டும் சென்றடைவது அல்ல. இவை கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டும்" என்றார் உறுதியாக.

கூடங்குளம் அணு உலையைப் பற்றி ரஷ்ய அதிபர் புதின் கூறுகையில், ``முதல் மற்றும் இரண்டாம் பிரிவுகள் ஏற்கெனவே சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. தற்போது மூன்று மற்றும் நான்காவது பிரிவுகளும் திட்டமிட்டபடி செயல்படுகின்றன" என்றார்.

இந்தக் கூட்டத்தின்போது இந்திய விண்வெளி `சுகன்யான்' வீரர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி அளிப்பது, வணிக ஒப்பந்தங்கள் எனப் பல துறைகளில் ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. `காஷ்மீர் பிரச்னையில் பிற நாட்டினர் தலையிடக் கூடாது' என்ற பிரதமர் மோடியின் கருத்தை புதின் ஆதரித்துள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தில் ரஷ்யா சென்னை இடையேயான சரக்குக் கப்பல் போக்குவரத்து ஒப்பந்தம் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதுவரை மும்பைத் துறைமுகம் வாயிலாக ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்ற இடத்திற்கு கடல் வணிகம் நடந்து வருகிறது. இவ்விரு இடங்களுக்கு இடையேயான தூரம் 8500 நாட்டிக்கல் மைல் தூரத்துக்கும் அதிகமாகும். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி சென்னை - விளாடிவோஸ்டோக்(Vladivostok) வழியான பாதை 5,500 நாட்டிக்கல் மைல்தான் இருக்கும். இதனால் முன்பைவிட கிட்டத்தட்ட 3,000 நாட்டிக்கல் தூரம் குறைகிறது. இதனால் போக்குவரத்து நேரமும் குறைகிறது. எரிபொருள் செலவும் மிச்சமாகிறது. அதுமட்டுமல்லாமல் பயண நாள்களும் 40லிருந்து 25 ஆக குறையும்.

modi and putin
modi and putin

இதனாலேயே சென்னையை ரஷ்யா தேர்வு செய்துள்ளது. இதன்மூலமாக ரஷ்யா உடனான இந்தியாவின் உறவு மேலும் பலப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய துறைமுகத்திலிருந்து சென்னைக்கு கச்சா எண்ணெய் கொண்டுவரப்படும். பின் சென்னையிலிருந்து பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படும். `சென்னையில் புதிய நிறுவனங்கள், பல்வேறு வேலைவாய்ப்புகள் என முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு இந்த ஒப்பந்தம் ஏதுவாக இருக்கும்' என்கின்றனர் துறைமுக அதிகாரிகள்.