Published:Updated:

மழையால் உள்ளூர் உற்பத்தி பாதிப்பு! – தூத்துக்குடியில் இறக்குமதியான குஜராத் உப்பு

’உப்பு நகரம்’ எனப் பெயர்பெற்ற தூத்துக்குடியில், மழையினால் ஏற்பட்ட உப்புத் தட்டுப்பாட்டின் காரணமாக, குஜராத்திலிருந்து கப்பல்மூலம் 25 ஆயிரம் டன் உப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

குஜராத் உப்பு ஏற்றி வந்த கப்பல்
குஜராத் உப்பு ஏற்றி வந்த கப்பல்

தூத்துக்குடி மாவட்டத்தில், 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி நடைபெற்றுவருகிறது. பருமணி, சிறுமணி ஆகியவற்றில், ’சிறுமணி’ என்ற வகைப் பொடி உப்பு இயற்கையாகவே இங்கு அதிகமாக விளைவதாலும், அதிக வெண்மை நிறம் உடையது என்பதாலும் தூத்துக்குடி உப்புக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. இந்தியாவில், குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தின் தூத்துக்குடியில்தான் உப்பு அதிகமாக உற்பத்திசெய்யப்படுகிறது.

உப்பு கொட்டும் பெண் தொழிலாளர்
உப்பு கொட்டும் பெண் தொழிலாளர்

தமிழகத்தில், சராசரியாக ஓர் ஆண்டுக்கு 25 லட்சம் டன் வரை உப்பு உற்பத்திசெய்யப்படுகிறது. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 22 லட்சம் டன் வரை உற்பத்தி நடைபெறுகிறது. இத்தொழிலில் நேரடியாக 25 ஆயிரம் தொழிலாளர்களும், மறைமுகமாக 25 ஆயிரம் தொழிலாளர்களும் ஈடுபட்டுவருகின்றனர்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்குக் கப்பல்கள்மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தூத்துக்குடியில், கடந்த சில நாள்களாகப் பெய்த தொடர் மழையால், உப்பு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

உப்பு அள்ளிச் செல்லும் பெண் தொழிலாளர்
உப்பு அள்ளிச் செல்லும் பெண் தொழிலாளர்

இதன் காரணமாக, தூத்துக்குடியில் உப்பு விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால், உப்பு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்த சூழலில், தற்போது குஜராத்திலிருந்து 25 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட பருமணி உப்பை ஏற்றிக்கொண்டு வந்த கப்பல், தூத்துக்குடி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இதுகுறித்து சில உப்பு உற்பத்தியாளர்களிடம் பேசினோம். “தமிழகத்தைவிட குஜராத்தில் உப்பு உற்பத்திச் செலவு இரு மடங்கு குறைவு. உப்பு அரவை மில்லுக்கு குஜராத் அரசு வழங்கியுள்ள குறைவான மின்சார கட்டணத்திற்கு முக்கியக் காரணம், உற்பத்திசெய்யப்பட்ட உப்பை நேரடியாக துறைமுகத்திலிருந்தே ஏற்றுமதிசெய்யும் அளவிற்கு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

குஜராத் உப்பு ஏற்றி வந்த கப்பல்
குஜராத் உப்பு ஏற்றி வந்த கப்பல்

தமிழகத்தில் இதுபோன்ற வசதிகள் செய்து கொடுக்கப்படுவதில்லை. இதனால் தூத்துக்குடி உப்பு குஜராத் உப்பைவிட இரண்டு மடங்கு விலை அதிகம். குஜராத்தில் ஒரு டன் உப்பின் விலை ரூ.600 முதல் 700 வரைதான். ஆனால், அதே ஒரு டன் உப்பு தூத்துக்குடியில் ரூ.1,500 முதல் 1,800 வரை விற்கப்படுகிறது.

தூத்துக்குடியைச் சுற்றி உள்ள 60-க்கும் அதிகமான ப்ரீ-ப்ளோ உப்பு ஆலைகள், உப்பு உற்பத்திக் குறைவினால் முழு நேரமும் செயல்படாமல் இருந்ததனால்தான் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் குஜராத்தில் இருந்து பருமணி உப்பு, கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

உப்பு ஏற்றிச் செல்ல காத்திருக்கும்  லாரிகள்
உப்பு ஏற்றிச் செல்ல காத்திருக்கும் லாரிகள்

கப்பலில் இருந்து இறங்கும் உப்பு, டன் ஒன்றுக்கு ரூ.1,300-க்கு விரும்பும் இடத்தில் டெலிவரி செய்யப்படும். இதனால், உள்ளூர் (தூத்துக்குடி) உப்பு விலையும் கணிசமாகக் குறைவதற்கு வாய்ப்புள்ளது” என்றனர்.