Published:Updated:

`கொரோனா பாதிப்பை எப்படி எதிர்கொள்கிறது மைக்ரோசாஃப்ட்?' -சத்ய நாதெள்ளாவின் உருக்கமான மெயில்

சத்ய நாதெள்ளா
சத்ய நாதெள்ளா

தன் நிறுவன ஊழியர்களுக்கு மின்னஞ்சல் வழியாக கொரோனா பேரிடர் குறித்த தன் கருத்துகளையும் மைக்ரோசாஃப்ட் பங்களிப்பு குறித்தும் ஊழியர்களுக்கு சத்ய நாதெள்ளா மெயில் அனுப்பியிருக்கிறார்.

நாளுக்குநாள் அதிகரித்து வரும் `கோவிட் - 19 ' நோய்த் தொற்றால் உலகமே பெரும்பதற்றத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா, தன் நிறுவன ஊழியர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இந்தப் பேரிடர் குறித்தும் தன் நிறுவனத்தின் பங்களிப்பு குறித்தும் ஊழியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள மெயில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

``72% மென்பொறியாளர்கள் வேறு துறைகளில் வேலைபார்க்கிறார்கள்" - `மைக்ரோசாஃப்ட்' சத்யா நாடெல்லா ஆதங்கம்

``யாரும் எதிர்பாராத வகையில் ஒரு பேரிடர் தாக்கியுள்ளது. அனைத்துத் துறைகளும் முடங்கிக் கிடப்பதால் உலகப் பொருளாதாரம் மிகப் பெரிய சரிவைக் கண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தொழிற்துறைக்குத் தொழில்நுட்பங்களின் தேவை மிகவும் அதிகமாக இருக்கிறது. அந்தவகையில் ஒரு மென்பொருள் நிறுவனமாக மைக்ரோசாஃப்ட் எல்லாவிதத்திலும் சிறப்பாகப் பணியாற்றி வருகிறது. நோய்த் தொற்றால் முடங்கிக் கிடக்கும் துறைகளுக்கு உறுதுணையாக இருந்து அவர்களின் டிஜிட்டல் தேவைகளைப் பூர்த்தி செய்துவருகிறோம்.

மென்பொருள் உருவாக்கத்தில் நாம் மிக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம். மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய தொழிலில் பல புதுமைகளைப் புகுத்தி திறம்பட செயலாற்றி வருகிறோம். ஒரு மென்பொருள் நிறுவனமாக இருந்துகொண்டு அரசாங்கங்கள், பள்ளிகள், உணவு நிறுவனங்கள் என எல்லா துறைகளுடனும் இணைந்து பணியாற்றுவது ஒப்பற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.

`Carbon Negative' திட்டத்தை நடைமுறைப்படுத்த உறுதியேற்ற மைக்ரோசாஃப்ட்!

நோய்த் தொற்றின் காரணமாக நிறுவனங்கள் இதுவரை மேற்கொள்ளாத மாற்றங்களை தங்கள் வேலைமுறைகளில் நடைமுறைப்படுத்தி இருக்கின்றன. வீட்டில் இருந்துகொண்டே நிறுவனத்துக்கு வேலைசெய்வது பலருக்கு சவாலான காரியமாக இருக்கிறது. ஆனால், எனக்கு இது பழக்கப்பட்ட ஒன்றுதான். நான் பல நேரங்களில் வீட்டில் என் மகள்களுடன்தான் என் அலுவல் பணிகளைச் செய்கிறேன்.

நோய்த் தொற்றால் முடங்கிக் கிடக்கும் துறைகளுக்கு உறுதுணையாக அவர்களின் டிஜிட்டல் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறோம்.
சத்ய நாதெள்ளா

இந்த இக்கட்டான சூழலுக்கு ஏற்றாற்போல் நம்முடைய நிறுவன உள்கட்டமைப்பை மாற்றி இருப்பதால் நம் வாடிக்கையாளர்களுக்கு நம்மால் இன்னும் சிறப்பான சேவைகளை வழங்க முடியும். குறிப்பாக மருத்துவத் துறையில் நம்முடைய பங்களிப்பு மிகுதியாக உள்ளது.

ஒரு முன்னோடி நிறுவனமாக இருந்துகொண்டு நம்முடைய சமுதாயத்தை இந்தப் பாதிப்பிலிருந்து பாதுகாத்து மீண்டெழச் செய்ய வேண்டியது நம் அனைவரின் பொறுப்பாகும். அதே சமயத்தில் உங்கள் உடல்நலன் மற்றும் உங்கள் குடும்பத்தினரின் உடல்நலனிலும் கவனம் செலுத்த வேண்டும்.

உங்களைப் போலவே நானும் இந்தக் கொரோனா நோய்த் தொற்றால் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளேன். என் மனைவியின் பெற்றோர் உடல்நலன் குறித்து நானும் என் மனைவியும் மிகுந்த கவலையில் இருக்கிறோம். உங்கள் உடல்நலன் மற்றும் உங்கள் குடும்பத்தினரின் உடல்நலனில் அக்கறை கொண்டவர்களாக இருங்கள்.

சத்ய நாதெள்ளா
சத்ய நாதெள்ளா

இந்தப் பேரிடர் பாதிப்பால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பள்ளிக் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. நாம் அதையும் கருத்தில்கொண்டு வீட்டில் இருந்தபடியே ஆசிரியர்களையும் மாணவர்களையும் இணைக்கும் வகையில் நம்முடைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறோம். இதனால் மாணவர்களின் கல்வியை நம்மால் மேம்படுத்தமுடிகிறது.

இந்தத் தருணத்தில் நிறுவனங்கள் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். தொழில்நுட்பம் மட்டுமே நம்மை இதுபோன்ற சூழல்களில் இருந்து காப்பாற்றும். எனவே, அதற்கு நாம் முக்கியத்துவம் அளித்து அதில் முன்னேற்றங்களைக் கொண்டுவர வேண்டும்" என அந்த மின்னஞ்சலில் உருக்கமாக எழுதியிருக்கிறார்.

எல்லாத்துறைகளும் முடங்கிக் கிடக்கும் இந்தச் சமயத்தில் தொழில்நுட்பத் துறையின் பங்களிப்பு மிகவும் அதிகமாக உள்ளதை குறிப்பிட்ட சத்ய நாதெள்ளா, மக்களுக்காக ஓய்வறியாமல் உழைக்கும் ஊழியர்கள் நிறுவனத்துக்கு கிடைத்திருப்பது மிகவும் பெருமையாக உள்ளதாகவும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு