Published:Updated:

சென்செக்ஸ் 1800 புள்ளிகள்;நிஃப்டி 540 புள்ளிகள் சரிவு! -முதலீட்டாளர்களின் அச்சத்துக்கு காரணம் என்ன?

தொடர் சரிவில் இந்திய பங்குச் சந்தைகள்
தொடர் சரிவில் இந்திய பங்குச் சந்தைகள்

ஜனவரி 14-ம் தேதி, 41,952 புள்ளிகளாக இருந்த மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், தற்போது 34,017.56 புள்ளிகளாகச் சரிந்துள்ளது.

இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து சரிவைச் சந்தித்துவருகிறது. சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், கொரோனா வைரஸ் பாதிப்பு இந்திய பங்குச் சந்தைகளை ஆட்டம்காண வைத்திருக்கிறது. 

சென்செக்ஸ் - 9:38 மணி அளவில்
சென்செக்ஸ் - 9:38 மணி அளவில்

"15 மாதங்களில் இல்லாத அளவிற்கு இந்திய பங்குச் சந்தைகள் பெரிய அளவில் சரிவைச் சந்தித்துள்ளன. இதனால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 7 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது." இது, கடந்த மார்ச் 10-ம் தேதி நிலவரம். அன்று, வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 1942 புள்ளிகள் சரிந்து 35,635 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதேபோல், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, 538 புள்ளிகள் சரிந்து 10,451 புள்ளிகளில் நிறைவடைந்தது. 

நிஃப்டி - 9:38 மணி அளவில்
நிஃப்டி - 9:38 மணி அளவில்

இன்றும் இந்திய பங்குச் சந்தைகள் வர்த்தகம் ஆரம்பிக்கும் போதே மிகப்பெரிய வீழ்ச்சியோடு தொடங்கியுள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், தற்போது 10:10 மணி அளவில் 1801.16 புள்ளிகள் சரிந்து 33895.56 (-5.12%) என்கிற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல, தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 546.35 புள்ளிகள் சரிந்து, 9914.95 (-5.22%) என்கிற நிலையில் வர்த்தகமாகிவருகிறது.

ஜனவரி 14-ம் தேதி, 41,952 புள்ளிகளாக இருந்த மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், தற்போது 34017.56 புள்ளிகளாகச் சரிந்துள்ளது. அதேபோல், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, ஜனவரி 14-ம் தேதி, 12,362 புள்ளிகளில் இருந்து தற்போது 9956.65 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.
பங்குச்சந்தையில் வரலாற்றுச்சரிவு: ஏன் சரிந்தது? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

இந்திய பங்குச் சந்தைகளின் தொடர் சரிவுக்கு சர்வதேச அளவில் பல காரணங்கள் இருந்தாலும், கொரோனாவின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துவருவதும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக, சர்வதேச பொருளாதாரத்தில் சுமார் 172 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, சவுதி அரேபியா, ரஷ்யா இடையேயான கருத்து வேறுபாட்டால், கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதும் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. யெஸ் வங்கியின் தற்போதைய நிலை, இந்திய வங்கித்துறை மற்றும் நிதித்துறை மீதான சந்தேகத்தை முதலீட்டாளர்களிடையே அதிகரித்துள்ளதும், பங்குச்சந்தை சரிவுக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு