Published:Updated:

2,000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை நிறுத்துகிறது ஆர்பிஐ?! - என்ன காரணம்

செ.கார்த்திகேயன்

கடந்த 2017-18 நிதியாண்டின்போது, 3,363 மில்லியன் நோட்டுகளாக இருந்த இதன் எண்ணிக்கை, 2018-19 -ம் ஆண்டில் 3,291 மில்லியனாகக் குறைந்துள்ளது.

2,000 currency notes
2,000 currency notes

கடந்த 2016-ம் ஆண்டு, மோடி தலைமையிலான மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும்போது இருந்த அதே பதற்றமும் சலசலப்பும், 2,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடும்போதும் இருந்தது. 1,000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்துவிட்டு, 2,000 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளை வெளியிடுவதால், கறுப்புப் பணம் அதிகரிக்கத்தான் செய்யுமே தவிர, குறையாது என அப்போது பேச்சுகள் அடிபட்டன. மதிப்பு அதிகமுள்ள நோட்டு என்பதால் பதுக்கி வைத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும். இதனால், அதன் புழக்கம் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது.

RBI
RBI

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக புழக்கத்தில் இருந்துவந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் தற்போது குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2017-18 நிதியாண்டின்போது 3,363 மில்லியன் நோட்டுகளாக இருந்த இதன் எண்ணிக்கை, 2018-19-ம் ஆண்டில் 3,291 மில்லியனாகக் குறைந்துள்ளது. சுமார் 72 மில்லியன் நோட்டுகள் புழக்கத்தில் இல்லாமல் இருப்பதாக ரிசர்வ் வங்கி 2018-19-ம் நிதி ஆண்டின் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மதிப்பின் அடிப்படையில், கடந்த 2017-18 நிதியாண்டில் 6,72,600 கோடி இருந்த இதன் மதிப்பு, 2018-19-ம் ஆண்டில் 6,58,200 ரூபாயாகக் குறைந்துள்ளது.

அதே நேரத்தில், 500 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 2017-2018-ம் நிதியாண்டில் 37 சதவிகிதத்தில் இருந்து 2018-2019-ம் நிதியாண்டில் 39 சதவிகிதமாக உயர்ந்தது. மேலும், பல்வேறு மதிப்புள்ள நோட்டுகளின் மதிப்பு, 43 சதவிகிதத்தில் இருந்து 51 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஆர்பிஐ, நடப்பு நிதியாண்டில் 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை நிறுத்த முடிவுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 151 மில்லியன் அளவில் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை 47 மில்லியனாகக் குறைத்துள்ளது.