Published:Updated:

ஜி.எஸ்.டி விவகாரம்... 50 போலி நிறுவனங்கள்... 50 கோடி ரூபாய் மோசடி!

செ.கார்த்திகேயன்

ஜி.எஸ்.டி ரிட்டன்களை தணிக்கை செய்து பார்த்த ஜி.எஸ்.டி தணிக்கைத் துறை, நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் கோடிக்கணக்கில் உள்ளீட்டு வரிப் பயனை ரீஃபண்ட் பெற்றதாகக் கண்டுபிடித்துள்ளது.

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி

போலி நிறுவனங்களை ஆரம்பித்து அதன்மூலம் 350 கோடி ரூபாய் மதிப்புள்ள துணிகளை ஏற்றுமதி செய்துள்ளதாகவும், போலியாக பில்களை தயார் செய்து, அதன் மூலம் சுமார் 50 கோடி ரூபாய் வரை ஐ.ஜி.எஸ்.டி வரி மோசடி செய்ததாகவும் மும்பையின் பிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி

`வாட் வரிவிதிப்பில் நிறைய வரி மோசடிகளும் பில் முறைகேடுகளும் நடப்பதால், வரி செலுத்துவதில் தவறு நடக்கிறது. முறையாக வரி வருமானம் கிடைப்பதில்லை’ என்று சொல்லித்தான் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை கடந்த 2017 ஜூலையில் அமல்படுத்தப்பட்டது. ஜி.எஸ்.டி வரிமுறை அமல்படுத்தப்பட்ட பின்னர் வரி மோசடிக்கு 100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை என்றும், ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையில் போலியான பில்கள் தயாரிக்க முடியாது என்றும் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு உறுதியளித்திருந்தது.

இந்த நிலையில், வர்த்தக நிறுவனங்கள் தாக்கல் செய்திருந்த 2017-18 மற்றும் 2018-19ஆம் ஆண்டுக்கான ஜி.எஸ்.டி ரிட்டன்களை தணிக்கை செய்து பார்த்த ஜி.எஸ்.டி தணிக்கைத் துறை, நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் கோடிக்கணக்கில் உள்ளீட்டு வரிப் பயனை ரீஃபண்ட் பெற்றதாகக் கண்டுபிடித்துள்ளது.

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி

இதைத் தொடர்ந்து மும்பையின் பிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த அஜய் கோபிநாத் மிஸ்ரா மற்றும் ரமேஷ் சந்திர பட் ஆகிய இருவரும் ஜி.எஸ்.டி வரி மோசடியில் அண்மையில் கைதாகியிருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் சேர்ந்து 50 போலி நிறுவனங்களை (Shell Companies) உருவாக்கி அந்த நிறுவனங்களுக்கு மூலப் பொருள்களைக் கொள்முதல் செய்து, சுமார் 350 கோடி ரூபாய் மதிப்புடைய ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்து, போலியான பில்களை உருவாக்கி, அதன் மூலமாக சுமார் 50 கோடி ரூபாய் வரையிலும் ஐ.ஜி.எஸ்.டி (IGST) ரீஃபண்ட் தொகையை திரும்பப் பெற்றிருக்கிறார்கள். 

ஜி.எஸ்.டி வரிமோசடி மற்றும் ரீஃபண்ட் மோசடிகளைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகச் சமீபத்தில் ஜி.எஸ்.டி கவுன்சில் அறிவித்ததை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.