Published:Updated:

கூடுதல் பணத்தை அச்சிடுவது நாட்டின் பொருளாதாரத்தை சரிசெய்ய உதவுமா? உண்மை என்ன?

இந்தியப் பொருளாதாரத்தை சரிசெய்வதற்காக அதிக அளவில் பணத்தாள்களை அச்சிடலாமா, அப்படி அச்சிட்டால் எதிர்மறையான விளைவுகள் ஏதாவது உருவாகுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனாவின் தாக்கத்தால் அனைத்து உலக நாடுகளின் பொருளாதாரமும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இந்தியாவின் பொருளாதாரம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது.

இந்த நிதி நெருக்கடியைச் சமாளிக்க ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிட வேண்டும் என ஏராளமான பொருளாதார நிபுணர்கள் அரசுக்குப் பரிந்துரைத்து வருகின்றனர். கடந்த ஆண்டில் `ஹெலிகாப்டர் மணி' கான்சப்ட்கூட அவர்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார்கள். அதாவது, மக்களின் கைக்கு பணத்தை ரொக்கமாகக் கொண்டுபோய் சேர்க்க, பணத்தாள்களை அதிக அளவில் அச்சிடுவதுதான் அந்த கான்சப்ட்.

பணம்
பணம்

ஆனால், அளவுக்கு அதிகமாகப் பணத்தை அச்சிடும்போது, நாட்டின் பணவீக்கம் உயரும் என்பதால், இந்த யோசனைகளை எல்லாம் மத்திய அரசாங்கம் தவிர்த்துவிட்டு, மக்களின் நிதி நெருக்கடிப் பிரச்னைகளை வேறு வழியில் கையாண்டது.

தற்போது மீண்டும் பணத்தாள்கள் அச்சடிப்பது குறித்த விவாதங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. ஏனெனில், கடந்த வாரத்தில் நடைபெற்று முடிந்த மக்களவைக் கூட்டத் தொடரில், `பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் ஏதேனும் உள்ளதா?' என உறுப்பினர்கள் சிலர் கேள்வி எழுப்பினர்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

இதற்கு பதில் அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ``2020-21-ம் நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3% வீழ்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் வழங்கப்பட்டதால், பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக இருக்கிறது. தற்சார்பு இந்தியா திட்டத்தின் காரணமாக 2020-21 நிதியாண்டின் இரண்டாம் பாதியில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பாதை உறுதியாக இருக்கிறது. இதன் காரணமாகப் புதிய பணத்தாள்கள் அச்சிடுவதற்கான யோசனை மத்திய அரசுக்கு இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

சிக்கலில் சிறுதொழில் நிறுவனங்கள்; மத்திய அரசின் உதவிகள் உண்மையில் கைகொடுத்திருக்கின்றனவா?

இந்தியப் பொருளாதாரத்தை சரிசெய்வதற்காக அதிக அளவில் பணத்தாள்களை அச்சிடலாமா, அப்படி அச்சிட்டால் எதிர்மறையான விளைவுகள் ஏதாவது உருவாகுமா என்கிற கேள்விகளைப் பொருளாதார ஆலோசகர் சோம வள்ளியப்பனிடம் கேட்டோம். அவர் விரிவான விளக்கம் தந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பணவீக்கமும் பண அச்சடிப்பும்!

``எந்தக் கணக்கும் இல்லாமல் பணத்தாள்களை அச்சடித்துக் கொண்டே இருந்தால் பணவீக்கம் நிச்சயம் அதிகமாகும். இதைக் கண்காணிக்க வெவ்வேறு ஃபார்முலாக்கள் பின்பற்றப்படுகின்றன. அதில் ஒன்று, ஒரு நாட்டின் உற்பத்தி விகிதத்தை (GDP) அடிப்படையாக வைத்து ரூபாய் நோட்டுகளை அச்சிடும் கணக்கை நிர்ணயிப்பதாகும். இதுதான் மிகச் சரியான ஃபார்முலா. இதைத்தான் இந்திய அரசும் பின்பற்ற நினைக்கிறது.

Soma Valliappan
Soma Valliappan

கோவிட் -19 தொற்று காரணமாக இந்தியாவின் அனைத்துத் துறைகளும் பேராபத்தைச் சந்தித்து, கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக, உற்பத்தித் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி விகிதம் குறைந்துள்ளது. அதே சமயம், பொருள்களுக்கான தேவைகள் அதிகரித்து வருகின்றன. பொருள்களுக்கான தேவை அதிகமாக இருந்து, அதற்கான உற்பத்தி குறைவாக இருக்கும்போது பணவீக்கம் அதிகமாகும்.

ஏற்கெனவே பணவீக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், புதிய பணத்தாள்களை அச்சிடுவது மேலும் பணவீக்கத்தை அதிகப்படுத்தவே செய்யும். அதனால்தான் மத்திய அரசாங்கம் பணத்தாள்கள் அச்சிடுவதை நிறுத்தி வைத்துள்ளது. உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்போது, அதற்கு இணையான புதிய பணத்தாள்கள் அச்சிடுவதை அரசு அப்போது பரிசீலனை செய்யும் என நான் நினைக்கிறேன்.

Rupee
Rupee
Image by Free stock photos from www.rupixen.com

இன்னும் சொல்லப்போனால், ஒரு நாட்டின் ஜி.டி.பி விகிதம் மைனஸில் இருந்தால், புழக்கத்தில் உள்ள குறிப்பிட்ட ரூபாய் நோட்டுகளை அரசு திரும்ப எடுத்துக்கொள்ளலாம். நிலைமை சரியாகி, உற்பத்தி அதிகரிக்கும்போது அதிக அளவில் பணத்தாள்களை அச்சிட்டு மீண்டும் புழக்கத்துக்கு விடலாம். இன்னும் சில நாடுகள் ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் இருக்கும் தங்கம், அந்நியச் செலாவணி (வெளிநாட்டு கரன்சிகள்), பாண்டுகள் போன்றவற்றின் மதிப்புக்கு இணையான அளவில் பணத்தாள்களை அச்சிடும். இதற்கு மேல் அச்சிட்டால் பணவீக்கம் அதிகமாகும்.

சரிந்த ஜி.டி.பி, முடங்கிய தொழில், திணறிய அரசு... 2020-ல் இந்தியப் பொருளாதாரத்தில் நடந்தவை என்ன?

மேலும், பணத்தின் மதிப்பானது விலைகள் அதிகரிப்பதன் காரணமாக வீழ்ச்சியடைவதால், வணிகம் தொடர்பான முடிவுகளை மேற்கொள்வதும், முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் சிரமமானதாக மாறும். நம்பகத்தன்மையும் குறையும். இது பொருளாதாரத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

கடன் வாங்கி சமாளிக்கலாம்!

ஒரு நாடு, அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, அதற்கு தேவையான நிதியைக் கடனாகப் பெற்றோ, வரியாக வசூலித்தோ செலவு செய்ய வேண்டும். அப்படியில்லாமல், அரசின் தேவைகளுக்கான நிதிக்கு, புதிய பணத்தாள்களை அச்சிட்டு செலவழிக்க ஆரம்பித்தால், அது பிற நாடுகளுக்கு எதிராகச் செய்யப்படும் விஷயமாக மாறும்.

கடன்
கடன்

உதாரணமாக, பெரும்பாலான நாடுகள் அமெரிக்க டாலரை அதிக அளவில் இருப்பு வைத்திருக்கின்றன. இந்தச் சமயத்தில், அமெரிக்க அராசாங்கம் நிதி நெருக்கடியைச் சமாளிக்க அதிக அளவில் டாலரை அச்சிட்டால், டாலரின் மதிப்பு தானாகக் குறையும். இது டாலரை இருப்பு வைத்திருக்கும் நாடுகளுக்கு ஆபத்தாக மாரும். டாலரின் வர்த்தகமாகும் பொருள்களை வாங்கும்போது, உதாரணமாக, கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும்போது அதிக அளவில் டாலர்களை செலவழிக்க வேண்டி இருக்கும்.

கொரோனா:``பொறுப்பற்று செயல்படுகிறது மத்திய அரசு" - நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் தாக்கு!

இந்த நடவடிக்கையால் உள்நாட்டில் ரூபாயின் மதிப்பு குறையும். விலைவாசி உயரும். இது நியாயமாக, நேர்மையாகப் பணம் சம்பாதித்து வைத்திருக்கும் மக்களின் பணத்துக்கு ஆபத்தாக மாறும். எனவே, பொருளாதார சரிவை சரி செய்வதற்காக இந்திய அரசு உடனடியாகப் பணத்தாள்களை அச்சிடாமல், உள்நாட்டு உற்பத்தி அளவைக் கணக்கிட்டு அதற்கு ஏற்றாற்போல ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது சரியாக இருக்கும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு