Published:Updated:

மூடப்பட்ட 100 டீலர்ஷிப்புகள்... தடுமாறும் ஆட்டோமொபைல் மார்க்கெட்... காரணம் என்ன?!

டீலர்ஷிப் தொழிலைப் பொறுத்தவரை மூன்று வகையில்தான் அவர்களால் லாபம் சம்பாதிக்க முடியும். வாகன விற்பனையில் லாபம், சர்வீஸ் லாபம், இன்ஷூரன்ஸ், வாகன ஃபைனான்ஸ் லாபம்.

கார்கள்
கார்கள்

வீழ்ந்துகொண்டேயிருக்கிறது ஆட்டோமொபைல் மார்க்கெட். கடந்த ஆறு மாதங்களாக விற்பனையில் கடும் சரிவு. இந்த ஆண்டு மட்டுமல்ல தொடர்ந்து நான்கைந்து ஆண்டுகளாகவே சரிவைச் சந்திக்கிறது ஆட்டோமொபைல் துறை. இதனால் கார், பைக், கமர்ஷியல் வாகனங்களை விற்பனை செய்துவரும் பல டீலர்ஷிப்புகள் மூடப்பட்டுவருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகன டீலர்ஷிப்புகள் மூடப்பட்டிருக்கின்றன. இதில் கார் டீலர்ஷிப்புகள் மட்டும் 65 மூடப்பட்டிருக்கின்றன.

வாகன டீலர்ஷிப் தொழிலைப் பொறுத்தவரை மூன்று வகையில்தான் அவர்களால் லாபம் சம்பாதிக்க முடியும். முதலாவது வாகனத்தின் விற்பனையில் கிடைக்கக்கூடிய லாபம். இரண்டாவது வாகனம் சர்வீஸுக்கு வரும்போது கிடைக்கக்கூடிய லாபம். மூன்றாவது இன்ஷூரன்ஸ், வாகன ஃபைனான்ஸ் உள்ளிட்ட இதர விஷயங்களிலிருந்து கிடைக்கக்கூடிய லாபம்.

இந்த மூன்றில் வாகனத்தின் விற்பனையிலிருந்து கிடைக்கக்கூடிய லாபமானது மிகவும் குறைவு என்கின்றன கார் டீலர்ஷிப் நிறுவனங்கள். ஒரு காரை விற்பனை செய்தால் 3 - 5 சதவிகிதம்தான் தங்களுக்கு லாபம் கிடைக்கிறது என்கிறார்கள். அதாவது 5 லட்சம் ரூபாய் காரை விற்பனை செய்தால் 15,000 ரூபாய் மட்டுமே டீலர்ஷிப்புக்குக் கிடைக்கும் என்கிறார்கள். அதனால் சர்வீஸ் மற்றும் இன்ஷூரன்ஸிலிருந்து கிடைக்கக்கூடிய லாபத்தை வைத்தே டீலர்ஷிப்பை நடத்த வேண்டியிருப்பதாகவும், விற்பனை குறையும்போது தானாகவே சர்வீஸ் மற்றும் இன்ஷூரன்ஸ் லாபங்கள் குறைகின்றன என்றும் நிறுவனங்கள் சொல்கின்றன.

இப்போது சென்னை அல்லது சென்னையின் புறநகர்களில் ஒரு டீலர்ஷிப் ஆரம்பிக்க வேண்டுமென்றால் குறைந்தது 2 முதல் 5 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய வேண்டியிருக்கும். டீலர்கள் நேரடியாகப் பணம்கொடுத்து கம்பெனியிலலிருந்து கார்/பைக்குகளை வாங்குவது இல்லை. அவர்கள் வங்கியில் இருந்து லோன் எடுத்துதான் கார்/பைக்குகளை வாங்கி ஷோரூமில் நிறுத்துகிறார்கள். இதை இன்வென்ட்ரி லோன் என்று சொல்கிறார்கள். ஒரு கார் அல்லது பைக் கம்பெனியில் இருந்து டீலர்ஷிப்புக்கு வந்து இரண்டு வாரத்துக்குள் விற்பனையாகிவிட வேண்டும். அதற்கு மேல் வாகனம் டீலர்ஷிப்பில் தங்கினால் அந்தக் கார்/பைக்குக்கான வட்டி அதிகரிக்க ஆரம்பித்துவிடும். இப்போது இதிலும் பிரச்னை ஆரம்பித்திருக்கிறது. சில வங்கிகள் சில தயாரிப்பு நிறுவனங்களுக்குக் கொடுக்கும் இன்வென்ட்ரி லோனை நிறுத்தியிருக்கிறது.

பைக் டீலர்ஷிப்புகளைப் பொறுத்தவரை பணியாளர்களின் சம்பளம் குறைந்தபட்சம் 5,000 ரூபாய். அதிகபட்சம் 40,000 ரூபாய். கார் டீலர்ஷிப்புகளைப் பொறுத்தவரை வேலையாட்களின் சம்பளம் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாயைத் தொடுகிறது. குறைந்துவரும் லாபம், உயரும் ஊழியர்களின் சம்பளம், டீலர்ஷிப்புகளை நடத்துவதற்கான நிர்வாகச்செலவுகள் எல்லாம் சேர்ந்து டீலர்களின் கழுத்தை நெரிப்பதாகச் சொல்கிறார்கள்.

டேவிட்
டேவிட்

இதுகுறித்து சென்னை ஓ.எம்.ஆரில் உள்ள மாருதி நெக்ஸா டீலர்ஷிப்பின் பொது மேலாளர் டேவிட்டிடம் பேசினேன். ''விற்பனை குறைந்துகொண்டே போவதுதான் டீலர்ஷிப்புகள் மூடப்படுவதற்கான காரணம் என்று பொதுவில் சொல்லிவிட முடியாது. லாபம் குறைந்திருக்கிறது. ஆனால், ஒட்டுமொத்தமாக நஷ்டம் என்று இல்லை. இப்போது நஷ்டத்தை சந்தித்திருப்பவர்கள் பெரும்பாலும் டீலர்ஷிப் தொழிலுக்குப் புதிதாக வந்தவர்களாகத்தான் இருப்பார்கள். இவர்கள் குறைந்தகாலத்தில் லாபம் ஈட்டிவிட முடியும் என நினைக்கிறார்கள். அது ஆட்டோமொபைல் மார்க்கெட்டில் முடியாது. இங்கே நீண்டகாலம் தாக்குப்பிடித்தால் மட்டுமே லாபம் சம்பாதிக்க முடியும். சென்னை அண்ணாசாலையில் இருக்கும் ஒரு கார் ஷோரும் மாதத்துக்கு 150 வாகனங்களாவது விற்பனை செய்தால்தான் பிரேக் ஈவன் செய்ய முடியும். இந்த எண்ணிக்கை மாதமாதம் குறைந்துகொண்டேபோகும்போது டீலர்கள் சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள்'' என்றார்.

முன்பு நான் மாதத்துக்கு 6 கார்கள் விற்பனை செய்வேன். ஆனால், இப்போது 2 கார்கள் விற்பனை செய்வதே பெரும் சவாலாக இருக்கிறது. சம்பளத்தைத்தாண்டி இன்சென்டிவ்ஸ்தான் எங்களைப் போன்றவர்களைக் காப்பாற்றும். விற்பனைக் குறைவதால் இன்சென்ட்டிவ்வும் குறைகிறது.
கார் ஷோரூம் விற்பனைப் பிரதிநிதி
ரங்கநாதன்
ரங்கநாதன்

கடந்த ஐந்தாண்டுகளாகப் பிரபல ஷோரூம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்யும் ஒருவரிடம் பேசினேன். ''பொதுவாகவே டீலர்ஷிப்புக்கு வரும் வாக் இன் இப்போது குறைந்துவிட்டது. தினமும் மாலை 6 - 8 மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்தான் டீலர்ஷிப்புகளுக்கு மக்கள் வருவார்கள். ஒரு மாதத்துக்குப் பார்த்தால் முன்பெல்லாம் 400 - 500 வாக் இன்கள் இருக்கும். அது இப்போது வெகுவாகக் குறைந்துவிட்டது. முன்பு நான் மாதத்துக்கு 6 கார்கள் விற்பனை செய்வேன். ஆனால், இப்போது 2 கார்கள் விற்பனை செய்வதே பெரும் சவாலாக இருக்கிறது. சம்பளத்தைத்தாண்டி இன்சென்டிவ்ஸ்தான் எங்களைப் போன்றவர்களைக் காப்பாற்றும். விற்பனைக் குறைவதால் இன்சென்ட்டிவ்வும் குறைகிறது. இப்படியேபோனால் இந்த வேலையில் தாக்குப்பிடிக்க முடியாது'' என்றார் அவர்.

சென்னையில் காய்கறி/பழங்கள் விற்பனை செய்து வந்த பிரபல நிறுவனம் ஒன்று ஜப்பானிய கார் நிறுவனத்தின் டீலர்ஷிப்பை தொடங்கியது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் வரை டீலர்ஷிப்பை நடத்தியவர்கள், மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க டீலர்ஷிப்பை மூடினார்கள். இப்போது சென்னையைச் சேர்ந்த நிறுவனங்களைவிட வெளிமாநிலங்களில் டீலர்ஷிப்புகளை நடத்திவரும் நிறுவனங்கள்தான் பெரும்பாலும் சென்னையில் டீலர்ஷிப்புகளை எடுக்கின்றன.

உதாரணத்துக்கு, ஹைதரபாத்தில் பிரபலமாக இருக்கும் டீலர்ஷிப் நிறுவனம் சென்னையில் டீலர்ஷிப் தொடங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் சென்னையில் தொழில்தொடங்குகிறது. அவர்களுக்கு ஒரு டீலர்ஷிப்பில் நஷ்டம் ஏற்பட்டால்கூட சில ஆண்டுகள் தாக்குப்பிடித்து நடத்துகிறார்கள்.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாகச் சென்னையில் ஜெய் ஆட்டோஸ் என்கிற பெயரில் பஜாஜ் டீலர்ஷிப் நடத்திவரும் ரங்கநாதனிடம் பேசினேன்.

இனி டீசல் கார்கள் வாங்குவது நஷ்டமா? - கார் மார்க்கெட்டின் கள நிலவரம் என்ன?!

''டீலர்ஷிப் பிசினஸ் என்பது டர்ன் ஓவர் அடிப்படையில்தான் நடக்கிறது. ஒரு வண்டி டீலர்ஷிப்புக்குள் வந்தால் அது வெளியே கஸ்டமரிடம் போக வேண்டும். இது எவ்வளவு நாள்களுக்குள் நடக்கிறது என்பதில்தான் லாபம்/நஷ்டம் இருக்கிறது. டீலர்ஷிப் தொழில் என்பது இப்போது சரிவில் இருக்கிறது. இதற்கு முன்பும் இதுபோன்ற சூழல்களை சந்தித்திருக்கிறோம். இது மீண்டும் வேகமெடுக்கும். ஆனால், 2020 முடிவுவரை ஆட்டோமொபைல் மார்க்கெட் இறக்கத்தில்தான் இருக்கும் என்பது என் கணிப்பு.

டீலர்ஷிப்புகள் லாபம் குறையும்போது அதற்கேற்ப சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். பிசினஸ் அதிகமாக இருக்கும்போது வேலைக்கு பலபேரை எடுத்திருப்போம். லாபம் குறையும்போது பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டியிருக்கும். 25 பேர் வைத்து செய்கிற வேலையை 15 பேர்வைத்து செய்ய வைக்கலாம். அதற்காக 25 பேர் இருக்கும் இடத்தை 5 பேராகக் குறைக்க முடியாது. வட்டிவிகிதம் குறைவாக இருக்கும் வங்கியிடம் இருந்து கடன் வாங்கலாம்.

எல்லாவற்றுக்கும் மேல் வாடிக்கையாளரை திருப்திபடுத்துவதில் கவனம் செலுத்தினால் சரிவிலிருந்து தப்பிக்கலாம். ஷோரூமுக்கு வரும் வாடிக்கையாளரை சிறப்பாகக் கவனித்து, அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து, அவரது வாகனத்தை நன்றாக சர்வீஸ் செய்துகொடுத்தாலே அவர் நம் ஷோரூமுக்கான விளம்பரதாரராக மாறிவிடுவார். அதனால் வாடிக்கையாளர் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்'' என்றார்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ஆட்டோமொபைல் தொழிலில் முன்பு இருந்த லாபம் இல்லை என்பதைத்தான் பல டீலர்கள் சொல்கிறார்கள். குடும்பத்தொழிலாக 30 - 40 ஆண்டுகளாக டீலர்ஷிப் தொழிலில் இருப்பவர்களால்தான் இப்போதையச் சூழலை சமாளிக்க முடிகிறது என்பதே உண்மை. ஆட்டோமொபைல் துறை எலெக்ட்ரிக்கை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இப்போதைய காலகட்டத்தில் கொஞ்சம் பொறுத்திருந்துதான் இத்தொழிலில் முதலீடு செய்ய வேண்டும்.