Published:Updated:

அனைத்து கார்களிலும் ஏர்பேக், அனைத்து டூ வீலர்களிலும் ஏ.பி.எஸ்.! - 2019 அப்கிரேட்ஸ்

அனைத்து கார்களிலும் ஏர்பேக், அனைத்து டூ வீலர்களிலும் ஏ.பி.எஸ்.! - 2019 அப்கிரேட்ஸ்
News
அனைத்து கார்களிலும் ஏர்பேக், அனைத்து டூ வீலர்களிலும் ஏ.பி.எஸ்.! - 2019 அப்கிரேட்ஸ்

இந்தியச் சாலைகளில், ஒரே நாளில் மட்டும் சராசரியாக 1,317 விபத்துகள் நிகழ்ந்து, அதில் 413 பேர் இறந்துள்ளனர்; அதாவது ஒரு மணி நேரத்துக்கு 55 விபத்துகள் - அதில் 17 பேர் மரணமடைந்துள்ளனர்!


2019... இந்த ஆண்டில்தான், இந்திய ஆட்டோமொபைல் துறை, தன்னைப் புதிய விதிமுறைகளுக்குத் தகவமைத்துக்கொள்ள இருக்கிறது. அதாவது ஏப்ரல் 2019 முதலாக, 125சிசி-க்கும் அதிகமான டூ-வீலர்களில் ஏபிஎஸ் கட்டாயமாக்கப்பட உள்ளது. இதுவே, அக்டோபர் 2019 முதலாக, அனைத்து பாசஞ்சர் வகை வாகனங்களில் 2 காற்றுப்பைகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட உள்ளது. இது ஏப்ரல் 2020-ம் ஆண்டில் வரவிருக்கும் BS-6 வாகன மாசு விதிகளுடன் ஒப்பிடும்போது சிறிதாகத் தெரிந்தாலும், வாகனப் பாதுகாப்பு விஷயத்தில் இது பெரிய மைல்கல்லாகவே பார்க்கப்படுகிறது. இந்தப் பாதுகாப்பு அம்சங்களுக்கான சந்தை மதிப்பு, 7500 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஏன் பாதுகாப்பு அம்சங்கள் தேவை?

இந்தக் கட்டுரையை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும்போதே, இந்தியாவில் எங்காவது ஒரு நகரத்தில் விபத்து நிகழ்ந்து, அதில் யாருக்காவது காயம் அல்லது மரணம் நிகழ்ந்திருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன; 2017 India Road Crash விவரங்கள் இன்னும் வெளிவராத நிலையில், 2016-ம் ஆண்டுக்கான விவரங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம். இந்தியச் சாலைகளில், ஒரே நாளில் மட்டும் சராசரியாக 1,317 விபத்துகள் நிகழ்ந்து, அதில் 413 பேர் இறந்துள்ளனர்; அதாவது ஒரு மணி நேரத்துக்கு 55 விபத்துகள் - அதில் 17 பேர் மரணமடைந்துள்ளனர்! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz


இதனாலேயே அரசாங்கம் - ஆட்டோமொபைல் நிறுவனங்கள் - உதிரிபாக உற்பத்தியாளர்கள் ஆகியோரை இந்தப் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கியதன் விளைவே, முந்தைய பத்தியில் சொல்லப்பட்ட விஷயம். இதனால் வாகனப் பாதுகாப்பு - சாலை பராமரிப்பு - மக்களிடையே விழிப்புஉணர்வு ஆகியவை முன்னெடுத்துச் செல்லப்படும் என நம்பலாம். அதற்கேற்ப வாகனத் தயாரிப்பாளர்கள் பலரும், தமது தயாரிப்புகளில் பாதுகாப்பு அம்சங்களை அனைத்து வேரியன்ட்களிலும் ஸ்டாண்டர்டாகவோ ஆப்ஷனலாகவோ வழங்கிவருவதைப் பார்க்க முடிகிறது. மேலும் விபத்தினால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் விதமாக, காரின் கட்டுமானம் அமைக்கப்படுவதும் வரவேற்கத்தக்க விஷயம். 

கார்களில் காற்றுப்பைகள்!

பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 1, 2017 முதலாகவே, விபத்தின்போது டிரைவரைத் தாக்காத விதத்தில் ஸ்டீயரிங் அமைப்பின் வடிவமைப்பு (Collapsible Steering Column - Standard: AIS 096/UN Equivalent: UN ECE R12), 1500 கிலோ GVW கொண்ட கார்கள் மற்றும் சிறியரக வாகனங்களில் கட்டாயமாக இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. காற்றுப்பையுடன் முன்னே சொன்ன ஸ்டீயரிங் அமைப்பு பொருத்தப்பட்ட வாகனம், 50கிமீ வேகத்தில் செலுத்தப்பட்டு, Frontal Crash Test மேற்கொள்ளப்பட்டிருந்தது. முன்னே சொன்ன அம்சம், 1500 கிலோ GVW-க்கும் குறைவான வாகனங்களில், அக்டோபர் 1, 2019 முதலாகக் கட்டாயமாக்கப்படஉள்ளது. இதனால் சிறியரக வாகனங்களிலும், ஓட்டுநருக்கு மட்டுமாவது காற்றுப்பை உறுதியாகியிருக்கிறது. 


2017-2018 நிதியாண்டில் விற்பனையான 3.28 மில்லியன் பாசஞ்சர் வாகனங்களில், 21.74 லட்சம் கார்கள் - 9.22 லட்சம் எஸ்யூவிகள் - 1.92 லட்சம் வேன்கள் அடக்கம். மேலும் இந்த செக்மென்ட், வருங்காலத்தில் 8 சதவிகித வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 2016-ம் ஆண்டின் புள்ளி விவரங்களின்படி, 23 சதவிகித விபத்துகள் பாசஞ்சர் வாகனங்களாலேயே நிகழ்ந்திருக்கின்றன. இதனால் அடுத்த 16 மாதங்களில், இந்த வகை வாகனங்களில் 2 காற்றுப்பைகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட உள்ளன. இதனால் காற்றுப்பைகளைத் தயாரிப்பவர்களுக்கு, 2,000 முதல் 2,400 கோடி ரூபாய்க்கான வர்த்தகம் கிடைக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. ஒரு காற்றுப்பையின் விலை, உற்பத்தியாளரைப் பொறுத்து (Takata, Autoliv, Rane TRW, UNO Minda-Toyoda Gosei, KSS Abhishek Safety Systems), 6,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் என்றளவில் இருக்கிறது. ஏர்பேக் இயங்குவதற்கான கன்ட்ரோல் அமைப்பை, Bosch மற்றும் Denso ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன.  நிலைமை இப்படியிருந்தாலும், என்ட்ரி லெவல் கார்களில் இன்னுமே ஓட்டுநருக்கான காற்றுப்பை மட்டுமே ஆப்ஷனலாகக் கிடைக்கிறது. அதுவும் டாப் வேரியன்ட்களில் மட்டுமே! 


ஆனால், போட்டியாளர்களைவிட முன்னணியில் இருப்பதற்கு, பாதுகாப்பு அம்சங்களையே அஸ்திரமாகப் பயன்படுத்தும் சூழல், தற்போது வாகன உற்பத்தியாளர்களிடையே நிலவுகிறது. இதற்கு ஃபோர்டு ப்ரிஸ்டைல் மற்றும் எக்கோஸ்போர்ட், ஹூண்டாய் எலீட் ஐ20 மற்றும் வெர்னா, ஹோண்டா சிட்டி ஆகிய கார்களின் டாப் வேரியன்ட்களில் வழங்கப்படும் 6 காற்றுப்பைகளை, இதற்கான உதாரணமாகச் சொல்லலாம். தவிர வாடிக்கையாளர்கள் மத்தியிலும், பாதுகாப்பு அம்சங்கள் குறித்த விழிப்புஉணர்வு ஏற்பட்டிருக்கிறது. மேலும், சாலை கட்டமைப்பும் விரிவடைந்து வருவதால், நெடுஞ்சாலையில் ஒவ்வொரு வாகனத்தின் சராசரி வேகமும் அதிகரித்திருக்கிறது. இதனால் புதிய வாகனங்களில் காற்றுப்பைகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. தற்போதைய சூழ்நிலையில், ஒற்றைக் காற்றுப்பை பொருத்தப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 68% எனவும், இரட்டை காற்றுப்பைகள் பொருத்தப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 57% ஆகவும் இருக்கிறது.

டூ-வீலர்களில் ஏபிஎஸ்/சிபிஎஸ்!

டிரெண்டிங்கில் இருக்கும் டூ-வீலர் செக்மென்ட்டில், 125சிசி-க்கும் குறைவான டூ-வீலர்களில் சிபிஎஸ் (Combi Braking system) ; 125சிசி-க்கும் அதிகமான டூ-வீலர்களில் ஏபிஎஸ் (anti-lock brake system) ஆகியவை, கடந்த ஏப்ரல் 1, 2018 முதலாகக் கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றன. இது புதிதாக அறிமுகமான டூ-வீலர்களில் உடனடியாக நடைமுறைக்கு வந்திருந்தாலும், ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் வாகனங்களில் ஏபிஎஸ்/சிபிஎஸ் பொருத்தப்படுவதற்கு, ஏப்ரல் 1, 2019 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான சந்தை மதிப்பு, 4,000 முதல் 5,000 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ்/சிபிஎஸ் அமைப்பின் விலை, உற்பத்தியாளரைப் பொறுத்து (Bosch, Continental,Endurance) 1,500 முதல் 2,000 ரூபாய் என்றளவில் இருக்கிறது. 2017-2018 நிதியாண்டில் 25 மில்லியன் டூ-வீலர்கள் விற்பனையான நிலையில், 14 சதவிகித வளர்ச்சியை இந்த செக்மென்ட் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டூ-வீலர்களின் பாதுகாப்பும் கவனத்தில் கொள்ளப்படுவது என்பது பெரிய ப்ளஸ்.

வாகனங்களின் வருங்காலம் எப்படி இருக்கும்?

வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்படுவதால், விபத்துகள் மற்றும் அதில் இறக்கும் மக்களின் எண்ணிக்கை குறையும் சாத்தியங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் இன்னமும், தமது வாகனத்தில் பாதுகாப்பு அம்சங்களுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக, ஆக்ஸசரிஸ்களில் அந்தப் பணத்தைச் செலவழிப்பதை இன்னமும் பார்க்க முடிகிறது. ஆனால், தற்போது பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயமாக்கப்பட உள்ளதால், வாகனங்களின் விலை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த விழிப்புஉணர்வு அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், பாதுகாப்பு அம்சங்களைக் குறித்த நேரத்தில் வாகன உற்பத்தியாளர்களுக்கும் வழங்கக்கூடிய நெருக்கடியில், அந்தந்த நிறுவனங்கள் இருக்கின்றன என்பதே உண்மை.