Published:Updated:

ஸ்கூட்டர், க்ரூஸர், ஸ்க்ராம்ப்ளர்.... டூவீலரில் இத்தனை வகைகளா?

ஸ்கூட்டர், க்ரூஸர், ஸ்க்ராம்ப்ளர்.... டூவீலரில் இத்தனை வகைகளா?

டூவீலர்களில் இத்தனை வகைகளா? எனக்கு ஸ்ப்ளெண்டர் அல்லது ஆக்டிவாவே போதும்ப்பா...! என நீங்கள் வியப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஸ்கூட்டர், க்ரூஸர், ஸ்க்ராம்ப்ளர்.... டூவீலரில் இத்தனை வகைகளா?

டூவீலர்களில் இத்தனை வகைகளா? எனக்கு ஸ்ப்ளெண்டர் அல்லது ஆக்டிவாவே போதும்ப்பா...! என நீங்கள் வியப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

Published:Updated:
ஸ்கூட்டர், க்ரூஸர், ஸ்க்ராம்ப்ளர்.... டூவீலரில் இத்தனை வகைகளா?

டூ-வீலர் Alias பைக்.... தற்கால மனிதனின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்று! இதன் பெயருக்கு ஏற்றபடியே இரு சக்கரங்களைக் கொண்ட இந்த வாகனம், பலவகைகளில் கிடைக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ரைடரை மனதில்வைத்து வடிவமைக்கப்படுகின்றன; எனவே புதிதாக டூவீலர்/ஸ்கூட்டர் வாங்க உள்ள அனைவருக்கும், தனக்கு எந்த மாதிரியான பைக் தேவை என்பது பற்றிய தெளிவை, இந்தக் கட்டுரை உங்களுக்கு வழங்கும் என நம்புகிறேன்.  

மாடர்ன் க்ளாஸிக் பைக்ஸ்:

பழமையும் புதுமையும் கலந்த கலவைதான் இந்த வகை பைக்குகள். இதற்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் காலம்சென்ற கான்டினென்ட்டல் ஜிடி 535 பைக்கை உதாரணமாகச் சொல்லலாம். வழக்கமான வட்ட வடிவ ஹெட்லைட், இரட்டை டயல்களைக் கொண்ட அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், நீளமான பெட்ரோல் டேங்க், கஃபே ரேஸர் தோற்றம் ஆகிய க்ளாசிக் அம்சங்களுடன் - ஃப்யூல் இன்ஜெக்‌ஷன், பிரெம்போ டிஸ்க் பிரேக்ஸ், பைரலி டயர்கள், பையோலி ஷாக் அப்சார்பர் என மாடர்ன் வசதிகளுடன் இந்த பைக் கெத்து காட்டியது தெரிந்ததே. ஆனால் இத்தகைய ப்ளஸ் பாயின்ட்களைக் கொண்டிருந்தும், அதிக விலை மற்றும் எடை - அதிர்வுகள் - பிராக்டிக்காலிட்டி ஆகியவற்றில் பின்தங்கியதால். மக்களிடையே கான்டினெட்டல் ஜிடி 535 பைக் நிலையான வரவேற்பைப் பெறவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அட்வென்ச்சர் டூரர்:

பைக்கில் டூர் செல்லும்போது, எப்படிப்பட்ட இடத்திற்கும் நாம் செல்ல நேரலாம். அது தார்ச் சாலையாகவோ, சாலையே இல்லாத இடமாகவோ இருக்கலாம். இந்த இடத்தில்தான் இவ்வகை பைக்குகள் முக்கியத்துவம் பெறுகின்றன. எப்படிப்பட்ட நிலப்பரப்பையும் சமாளிக்கும் விதமாக லாங் டிராவல் சஸ்பென்ஷன், தாழ்வான இருக்கை, உயரமாகப் பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் ஹேண்டில்பார், ஆன்/ஆஃப் ரோடு டயர்கள், பொருள்களை வைக்க வசதி என இவை அசத்துகின்றன. ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் இதற்கான உதாரணம். ஆஃப் ரோடிங் மற்றும் பிராக்டிக்காலிட்டியில் இந்த பைக் அசத்தினாலும், ஆன்ரோட்டில் அதிக எடை மற்றும் குறைவான பவர் எனும் கூட்டணியால், இது கொஞ்சம் பின்தங்கி விடுகிறது. 

ஸ்க்ராம்ப்ளர்:

இது அட்வென்ச்சர் பைக்குளின் நீட்சிதான்; ஆம், சாலைப் பயன்பாட்டுக்கு வடிவமைக்கப்பட்ட ஒரு ஸ்ட்ரீட் பைக்கை, அனைத்து வகை நிலப்பரப்புக்கும் ஏற்றவிதமாக மாற்றுவதே ஸ்க்ராம்ப்ளர். ஏரி பரப்பு, சேறு/கற்கள் நிறைந்த பகுதி, திருப்பங்கள் நிறைந்த சாலைகள் என எதுவாக இருந்தாலும், அசராமல் ஈடுகொடுப்பதே இந்த வகை பைக்குகளின் திறன். எனவே ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள், பாடி பேனல் - வசதிகள் - எடை ஆகியவற்றில் குறைவாகவே இருக்கும். டுகாட்டி நிறுவனத்தின் ஸ்க்ராம்ப்ளர் டெஸர்ட் ஸ்லெட் பைக்கை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். 

ஸ்போர்ட்ஸ் டூரர்:

ஒரு ஸ்போர்ட்ஸ் பைக்கின் பர்ஃபாமென்ஸையும், டூரர் பைக்கின் பிராக்டிக்காலிட்டியையும் சேர்த்துப் பிசைந்ததுதான் இவ்வகை பைக்குகள். எனவே நீண்ட தூரப் பயணங்களுக்குச், சிறந்தத் தோழனாக இருப்பவை ஸ்போர்ட்ஸ் டூரர்கள்தான்; ஸ்ட்ரீட் பைக்கான Z650-யில் இருந்து உருவான கவாஸாகி நின்ஜா 650 பைக்கே இதற்கான உதாரணம். இதன் டெக்னிக்கல் விபரங்கள், ஒரு மிட் லெவல் ஸ்போர்ட்ஸ் பைக்குக்குச் சமமாக இருக்கின்றன. என்றாலும், ஆரம்ப மற்றும் மிதவேகப் பயன்பாட்டுக்கு ஏற்றபடி டியூன் செய்யப்பட்ட இன்ஜின், பவர்ஃபுல் ஹெட்லைட்ஸ், சொகுசான சீட்டிங் பொசிஷன் மற்றும் சீட், பெரிய விண்ட் ஷீல்ட், பொருள்களை வைக்க இடம், பெரிய பெட்ரோல் டேங்க் என இதன் அம்சங்கள், டூரிங் பைக்குகளை நினைவுபடுத்தும்படி அமைந்திருக்கின்றன. விலை மற்றும் பர்ஃபாமென்ஸ் ப்ளஸ்ஸாக இருந்தாலும், பராமரிப்புச் செலவு மைனஸாக இருக்கிறது. 

டூரர்:

டூவீலர்களின் செடான் என டூரர் பைக்குகளைக் கைகாட்டலாம். சில கார்களே பொறாமைப்படும் அளவுக்கு, இதில் இருக்கும் சிறப்பம்சங்களின்  பட்டியல் மிகப்பெரிது. அலுங்காமல் குலுங்காமல் பயணங்களை அதன் போக்கில் மேற்கொள்பவர்களுக்கு, இவை செம காம்பினேஷன். ஹோண்டா நிறுவனத்தின் கோல்ட்விங் பைக்கில் 6 சிலிண்டர் இன்ஜின் - ட்வின் க்ளட்ச் கியர்பாக்ஸ், ரைடிங் மோடுகள், மியூசிக் சிஸ்டம், ஏர்பேக், ஏபிஎஸ், க்ரூஸ் கன்ட்ரோல், கிலெஸ் இக்‌னீஷன், அட்ஜஸ்டபிள் சஸ்பென்ஷன், டிஜிட்டல் ஸ்க்ரீன், LED லைட்டிங் என இதில் இருக்கும் வசதிகள் அப்பப்பா....! 26.85  - 28.49 லட்சம் என இதன் (டெல்லி எக்ஸ்-ஷோரூம்) விலையும், பைக்கைப் போலவே ரொம்பப் பெரிசுதான். 

க்ரூஸர்:

டூரர்களின் மென்மையான மறுபக்கம்தான் க்ரூஸர்கள். இரண்டுமே நெடுஞ்சாலைகளை மனதில்வைத்து தயாரிக்கப்பட்டிருந்தாலும், ரெட்ரோ பாணி டிசைனில் இவை ஸ்கோர் செய்கின்றன. மேலும் இதன் உரிமையாளரின் விருப்பத்துக்கு ஏற்றபடியான மாடிஃபிகேஷன்களை, இந்தவகை பைக்குகளில் செய்வது மிகவும் சுலபம்! ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் ஸ்ட்ரீட் 750 பைக்தான் இதற்கான உதாரணம். இந்தியாவில் அந்நிறுவனம் அதிகமாக விற்பனை செய்யும் பைக் அதுதான்!

ஸ்போர்ட்ஸ் பர்ஃபாமென்ஸ் பைக்ஸ்:

டூவீலர் துறையின் ஒட்டுமொத்த வித்தையும் வெளிப்படுவது இந்த வகை பைக்குகளில்தான். ஏனெனில் ரேஸர்கள் முதல் பணக்காரர்கள் வரையிலான மக்களுக்கு, இது அவர்களின் திறமைக்கும் பணத்துக்குமான அடையாளமாக இருப்பவை; எனவே மோட்டோ ஜிபி மற்றும் உலக சூப்பர் பைக் சாம்பியன்ஷிப் ஆகிய போட்டிகளில் பங்குபெறும் பைக்குகளை அடிப்படையாகக் கொண்டே, ஃபுல் ஃபேரிங் கொண்ட ஸ்போர்ட்ஸ் பர்ஃபாமென்ஸ் பைக்குகள் வடிவமைக்கப்படுகின்றன. எனவே ரேஸ் டிராக் மற்றும் வளைவுகள் நிறைந்த சாலை என எதுவாக இருந்தாலும், இவற்றின் பர்ஃபாமென்ஸ் மற்றும் ஹேண்ட்லிங், வேற லெவலில் இருக்கும். இதற்கு சமீபத்தில் பைக் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய கவாஸாகி நிறுவனத்தின் ZX-10R பைக்கை உதாரணமாகச் சொல்லலாம். 

ஸ்ட்ரீட் நேக்கட் பைக்ஸ்:

டூவீலர் செக்மென்ட்டில், எப்போதுமே டிரெண்டிங்கில் இருப்பவை நேக்கட் பைக்ஸ்தான். நெரிசல்மிக்க நகரப் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு இவை தயாரிக்கப்படுவதால், ஸ்ட்ரீட் பைக்குகள் எனவும் இவை அழைக்கப்படுகின்றன. ஒரு பைக்கை வளைத்து நெளித்து ஓட்டுவதற்கு, அது எடை குறைவாக இருப்பது அவசியம். எனவே ஃபுல் ஃபேரிங் இல்லாத ஸ்போர்ட்ஸ் பைக்குகளாக இவை இருக்கின்றன. என்றாலும், நெடுஞ்சாலகளில் வேகமாகச் செல்லும்போது, எதிர்காற்று முகத்தில் அறைவது பாதகமாக இருக்கிறது. ஆனால் ஸ்ட்ரீட் பைக்குகளின் கட்டுமஸ்தான டிசைன், அதிரடியான பர்ஃபாமென்ஸ், துல்லியமான கையாளுமை, லேட்டஸ்ட் வசதிகள் என இதன் ப்ளஸ்களும் அதிகம். டிரையம்ப் நிறுவனத்தின் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் இதற்கான உதாரணம்.   

ஹைப்பர் ஸ்போர்ட்ஸ் பைக்ஸ்:

சுருங்கச் சொல்வதென்றால், வேகத்தை மட்டும் கருத்தில்கொண்டு தயாரிக்கப்படுபவைதான் இவை; டிராக் ரேஸ் போட்டிகளில் முதன்மையான, அதாவது 0 - 100கிமீ வேகத்தை... இதை நீங்கள் படிக்கத் தொடங்கும் நேரத்திலேயே தான்டிவிடும் திறன், ஹைப்பர் ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு இருக்கின்றன (2 அல்லது 3 விநாடிதான்)! சூப்பர்சார்ஜர் கொண்ட கவாஸாகி நிறுவனத்தின் நின்ஜா H2R பைக் பற்றிச் சொல்லவேண்டுமென்றால், அது 0 - 100கிமீ வேகத்தை 2.5 விநாடிகளில் எட்டுவதுடன், அதிகபட்சமாக 400கிமீ வேகம் செல்கிறது! அந்த வேகத்தில் பைக்கின் நிலைத்தன்மை முக்கியம் என்பதால், அது தொடர்பான அம்சங்கள் அனைத்தும் இங்கே இடம்பெற்றிருக்கும். எனவே இவ்வகை பைக்குகளின் எடை மற்றும் விலை, சற்று அதிகமாகவே இருக்கும். மேலும் தினசரி பயன்பாட்டைப் பற்றியெல்லாம் யோசிக்கக்கூட முடியாது மக்களே!

ஸ்கூட்டர்:

ஒரு வீட்டில் உள்ள அனைவருக்கும் ஏற்ற வாகனம் என ஸ்கூட்டரை நிச்சயம் முன்மொழியலாம். ஒரு காலத்தில் மொபெட்கள் மற்றும் ஸ்டெப்-த்ரூக்கள் பெற்றிருந்த இடத்தை, இப்போது ஸ்கூட்டர்கள் ஆக்ரமித்திருக்கின்றன. நம் ஊரின் நெரிசல்மிக்க சாலைகள் மற்றும் குடும்பத் தேவைகள் ஆகியவற்றுக்குச் சளைக்காமல் இவை ஈடுகொடுக்கின்றன. ''ஃபர்ஸ்ட் கியரைப் போட்டுவிட்டு, க்ளட்ச்சைப் பிடிச்சிக்கிட்டு வண்டி ஓட்டுவது செம கடுப்பு'' - ''வொய்ஃப்பும், பொன்ணும் தவிர நானும் ஓட்டுற மாதிரி ஒரு வண்டி வாங்கனும்டா'' என உங்கள் மனதின் குரல் இருந்தால், ஸ்கூட்டர்கள்தான் உங்களுக்கு ஏற்ற சாய்ஸ்! இப்போது இளைஞர்கள் தொடங்கி முதியவர்கள் வரை ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துவதால், அதில் ஒருவர் எதிர்பார்க்கும் விஷயங்களும் மாறத்தொடங்கிவிட்டன. இதனாலேயே இளசுகளுக்கு என்றால் டியோ அல்லது என்டார்க், மிடில் ஏஜ் ஆட்களுக்கு என்றால் ஆக்டிவா அல்லது ஜூபிட்டர், உயரம் குறைவான அல்லது மெலிந்த உடல் அமைப்பைக் கொண்டவர்களுக்கு ஸ்கூட்டி ஜெஸ்ட் அல்லது ஆக்டிவா i என விதம்விதமாக ஸ்கூட்டர்கள் வரிசைகட்டி அணிவகுக்க ஆரம்பித்துவிட்டன.  

முதல் தீர்ப்பு

டூவீலர்களில் இத்தனை வகைகளா? எனக்கு ஸ்ப்ளெண்டர் அல்லது ஆக்டிவாவே போதும்ப்பா...! என நீங்கள் வியப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதனுடன் சில டிப்ஸ்களையும் உங்களுக்கு வழங்க நான் கடமைப்பட்டுள்ளேன். இதை முடிந்த வரைக்கும் பின்பற்றுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன் மக்களே!

* ஸ்ப்ளெண்டர், ஆக்டிவாவில் கோயம்பேடு வேண்டுமானால் தினசரி போய்வரலாம்.... கன்னியாகுமாரியெல்லாம் போகக்கூடாது பாஸ்! அப்படி செய்தால், வாகனம் தனது செயல்திறனை விரைவாகவே இழந்துவிடும்; பர்ஸும் தனது கனத்தை இழந்துவிடும்.

* 'நான் சிட்டிக்குள் மட்டும்தான் டூவீலர் யூஸ் பண்ணுவேன்... மற்றபடி எனக்கு எல்லாமே கார்தான்' என்பவர் நீங்கள் என்றால், ராயல் என்ஃபீல்டு போன்ற பெரிய பைக்குகளை வாங்குவதன் உண்மையான பலனை நீங்கள் பெறாமல் போவதற்கான சாத்தியங்கள் அதிகம். கெத்துக்காக அதை வாங்கிவிட்டு, 'மைலேஜ் வரவில்லை, மெயின்டனென்ஸ் ஜாஸ்தியா இருக்கு' எனப் பின்னர் நண்பர்களிடம் புலம்புவதில் உங்களுக்கு எந்த பயனும் இருக்கப்போவதில்லை.

*ஒரே ஏரியாவில் இருக்கும் உங்கள் நண்பருக்கும் உங்களுக்கும், ஒரே ஏரியாவில் ஆஃபீஸ் இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அவ்வப்போது ஒரே பைக்கில் இருவரும் போய்வந்தால், நட்பும் வளரும்.... பணமும் சேமிக்கலாம்.... சுற்றுச்சூழலையும் காப்பாற்றலாம்.

*பெர்ஃபாமென்ஸ் பைக்குகளை வைத்துக்கொண்டு, சிக்னலில் தங்களை வாலன்டினோ ராஸியாக ஃபீல் செய்பவர்கள் அதிகம்! ஒரு சிக்னலில் இருந்து அடுத்த சிக்னலுக்கு யார் முதலில் போகப்போகிறார்கள் என்பதில், எரிபொருள் வேஸ்ட் ஆவதுதான் என்ட் ரிசல்ட். மேலும் நேரான சாலையில், தேவையில்லாமல் வளைத்து நெளித்து ஸ்டன்ட் அடிப்பதைத் தவிர்க்கலாம், எனவே தேவைக்கேற்ப ஆக்ஸிலரேட்டரைப் பயன்படுத்தி, கச்சிதமாக பிரேக் பிடித்தால் பைக் ஹேப்பி!