Published:Updated:

அம்பாஸடர், பத்மினி, மாருதி 800 ... இந்திய சாலைகளின் சாகச பொக்கிஷங்கள்!

20 ஆண்டுகாலமாக இந்தியச் சாலைகளில் பவனிவந்த இண்டிகாவுக்கு மூடுவிழா நடத்திவிட்டது டாடா மோட்டார்ஸ். விரைவில் நானோ விஷயத்திலும் அந்த முடிவுக்கு அந்நிறுவனம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நீண்டநாள்களாக உற்பத்தியில் இருந்த கார்களைப் பற்றிப் பார்ப்போமே எனத் தோன்றியதன் விளைவே, இந்தக் கட்டுரை!

அம்பாஸடர், பத்மினி, மாருதி 800 ... இந்திய சாலைகளின் சாகச பொக்கிஷங்கள்!
அம்பாஸடர், பத்மினி, மாருதி 800 ... இந்திய சாலைகளின் சாகச பொக்கிஷங்கள்!

இங்கு இருக்கும் 10 கார்களில், நிச்சயமாக ஒருமுறையாவது அதில் அனைவரும் பயணித்திருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கும். ஏனெனில், இந்திய ஆட்டோமொபைல் துறையைக் கட்டமைத்து, பிறகு மாற்றியமைத்த பெருமை இங்கு இருக்கும் ஒவ்வொரு காருக்கும் உண்டு! 

ஹிந்துஸ்தான் அம்பாஸடர் (1958-2014) - 56 ஆண்டுகள்

நமது வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த காருடன் ஒவ்வொரு விதமான அனுபவம் இருக்கும். அதாவது வீட்டில் இருக்கும் அன்றைய தாத்தா - பாட்டி தொடங்கி இன்றைய மில்லினியல் யுகம் வரை! பின்னே, 56 ஆண்டுகால வாழ்க்கை என்றால் சும்மாவா! 1958-ல் லேண்ட்மாஸ்டராக தனது வாழ்வைத் தொடங்கி, அந்தக் கால பணக்காரர்களின் அடையாளமாக மாறி, காலப்போக்கில் அரசியல்வாதிகளின் சாரதியாக வலம்வந்து, பிறகு வாடகை டாக்ஸியாகவே உருமாறி, தனது வாழ்வை  2014-ல் முடித்துக்கொண்டது அம்பாஸடர். `Amby' எனச் செல்லமாக அழைக்கப்படும் இந்த கார், இந்தியர்களால் மறக்க முடியாத ஓர் அங்கம்!

ப்ரீமியர் பத்மினி (1964-1998) - 34 ஆண்டுகள்

அம்பாஸடருக்குப் போட்டியாக 1964-ல் களம்கண்ட இந்த கார், ஃபியட் நிறுவனத்தின் 1100 டிலைட் காரின் ஜெராக்ஸ்தான்! பிறகு 1972-ல் அதே காரை அடிப்படையாகக்கொண்டு `பிரசிடென்ட்' என்ற பெயரில் ஒரு மாடலை அறிமுகப்படுத்தியது. இதுதான் நாளடைவில் `பத்மினி' எனப் பெயர்மாற்றம் கண்டு, 1980-களின் இறுதிக்கட்டம் வரை இந்தியர்களின் அபிமானத்துக்குரிய காராக இருந்துவந்தது. அதுவும் மும்பையையும் அந்தக் கறுப்பு - மஞ்சள் கலந்த பத்மினி காரையும் நம்மால் பிரித்துப் பார்க்கவே முடியாது!

தமிழகத்தைப் பொறுத்தவரை, `அம்பாஸடர் பெருசா இருக்கு. எனக்குச் சின்னதா ஒரு கார் வேணும்' என்பவர்களுக்கும், அந்தக் கால டாக்டர் - வழக்குரைஞர்களின் குதிரையாக இருந்தது பத்மினி என்றால் அது மிகையாகாது. அதுவும் பழைய சோழவரம் ரேஸ் டிராக்கில், சீறிப்பாய்ந்த பெருமையும் பத்மினிக்கு உண்டு!

மாருதி ஆம்னி (1984 - தற்போது வரை) - 34 ஆண்டுகளைத் தாண்டி...

1984-ல் வெளிவந்த இந்த கார், வேன் என்றே அறியப்பட்டது. சில காலத்துக்குப் பிறகே, `ஆம்னி' என இதற்குப் பெயர் சூட்டியது மாருதி. நாமகரணம் மாறினாலும், அடையாளத்தை மாற்ற முடியவில்லையே! ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குப் பயணிகளையோ, பொருள்களையோ, குறைந்த செலவில் கொண்டுசெல்லும் ஓர் இயந்திரமாகவே ஆம்னி பார்க்கப்பட்டது / பார்க்கப்படுகிறது. 5 சீட் மற்றும் 8 சீட் ஆப்ஷன்களில் விற்பனையாகிக்கொண்டிருக்கும் இது, கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க காராகவே இருக்கிறது. ஆனால் வசதி, பாதுகாப்பு, சொகுசு ஆகியவற்றில் இன்னமும் மாறாமல் இருக்கிறாயே ஆம்னி!

மாருதி ஜிப்ஸி (1985 - தற்போது வரை) - 33 ஆண்டுகளைத் தாண்டி...

இந்தியாவுக்கு 4 வீல் டிரைவின் மகத்துவத்தை உணரச்செய்ததில், ஜிப்ஸியின் பங்கு மிகப்பெரியது. காம்பேக்ட்டான காராக இருப்பினும், எஸ்யூவி என்கிற கெத்து இருந்ததாலேயே, இத்தனை காலம் அதனால் நீடித்து நிற்க முடிந்திருக்கிறது. ராலிகளுக்குச் செல்பவர்களின் முதல் சாய்ஸ் - காவல்துறை மற்றும் ராணுவத்தால் தவிர்க்க முடியாத ஒரு கார் என ஜிப்ஸி, பெட்ரோல் இன்ஜினுடன் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆஃப்ரோடிங்கில் கில்லியாக இருப்பதால், தார் எஸ்யூவி-க்கு அடுத்தபடியாக இன்றும் பலரின் செல்லமாக ஜிப்ஸி இருந்துவருகிறது. இதில் கிடைக்கும் அந்த மெக்கானிக்கல் ஃபீலிங், இன்றைய கார்களில் காணக் கிடைக்காதது.

மாருதி 800 (1986-2014) - 28 ஆண்டுகள்

`இந்தியாவை நான்கு சக்கரங்களில் சுழலவைத்த கார்'... இது ஒன்றே போதும், மாருதி 800 காரின் புகழைச் சொல்ல! டூவீலர்களில் குடும்பமாக நெருக்கியடித்துக்கொண்டு சென்றுகொண்டிருந்த மிடில் க்ளாஸ் வர்க்கத்தை, கார்களில் சொகுசாகப் பயணிக்கவைத்த பெருமை, மாருதி 800 காருக்கே உரியது.

1986-ல் தொடங்கி இன்று வரை பலர் முதன்முறையாக ஸ்டீயரிங் வீலைப் பிடித்தது, இந்த காருடையதாகத்தான் இருக்கும். 30 ஆண்டுகாலம் மாருதி - மாருதி உத்யோக் - மாருதி சுஸூகி என அந்த நிறுவனத்தின் பரிணாம வளர்ச்சியின் முகமாக இருந்த இந்த கார், 2014-ல் தனது மூச்சை நிறுத்திக்கொண்டது. ஆனால், யூஸ்டு கார் செக்மென்ட்டில் மவுசு குறையாத காராக இன்றும் நம்மிடையே உழன்றுகொண்டிருக்கிறது, மாருதி 800.

டாடா சுமோ (1994 முதல் தற்போது வரை) - 24 ஆண்டுகளைத் தாண்டி...

கடலால் சூழப்பட்ட நகரங்களுக்குக் குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் டூர் அடிப்பது வாடிக்கை என்றால், நிச்சயம் ஒருமுறையாவது நீங்கள் டாடா சுமோவில் சென்றிருப்பீர்கள். 1994-ல் உதயமான சுமோ, இடவசதிக்கும் கட்டுமானத்துக்கும் பெயர்பெற்ற ஒரு எஸ்யூவி. கால ஓட்டத்துக்கு ஏற்ப பல மாற்றங்களைச் சந்தித்திருந்தாலும், அதிக சீட் - அதிக பிராக்டிக்காலிட்டி - பாக்ஸ் போன்ற வடிவமைப்பு, கொடுக்கும் காசுக்கு மதிப்பு என்கிற தனது அடிப்படையிலிருந்து சற்றும் விலகாமல், சுமோ இன்றும் சுழன்றுகொண்டிருக்கிறது. அன்று இந்த கார் செய்ததை இன்று பல கார்கள் செய்கின்றன என்றாலும், சுமோவுக்கான மார்க்கெட் அப்படியேதான் இருக்கிறது. என்ன... சினிமாவிலும் நிஜத்திலும் ரெளடிகளுக்கான காராக இருந்ததுதான், இந்தியக் குடும்பங்களிலிருந்து சுமோ சற்றே விலகியதற்கான காரணம்.

டாடா சஃபாரி (1998 முதல் தற்போது வரை) - 20 ஆண்டுகளைத் தாண்டி...

இண்டிகாவின் சகாப்தம் முடிந்துவிட்டது... ஆனால், அந்த காரைப்போலவே 20 ஆண்டுகளாக டாடா உற்பத்தி செய்துகொண்டிருக்கும் மற்றொரு கார்தான் சஃபாரி. `இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் எஸ்யூவி' என்ற அடைமொழிக்குச் சொந்தக்கா(ர)ரான சஃபாரி, கார் ஓட்டுபவரை `King of Road' என்கிற உணர்வை அளித்ததுடன், சொகுசான ஓட்டுதல் தரத்துக்கும் பெயர்பெற்றது. இதனாலேயே தேர்தல் நேரத்தில் சூறாவளிச் சுற்றுப்பயணம் (!) மேற்கொள்ளும் அரசியல்வாதிகளின் விருப்பமாக இருந்துவருகிறது. காலத்துக்கு ஏற்ப மாறியிருக்கிறது என்றாலும், தனது சுயத்தை இழக்காத மற்றொரு தயாரிப்புதான் சஃபாரி. ஆனால், தற்போதைய பெயரைப்போலவே (சஃபாரி ஸ்டார்ம்), விலை விஷயத்தில்தான் ஏகத்துக்கும் இந்த எஸ்யூவி மாறியிருக்கிறது. தன்னைச் சுற்றி இப்போது பல புதிய தயாரிப்புகள் வந்துவிட்டாலும், சஃபாரிக்கு என ஒரு வட்டம் இருந்துகொண்டே இருக்கிறது. அந்தக் கம்பீரம்... சான்ஸே இல்ல!

மஹிந்திரா பொலேரோ (2000 முதல் தற்போது வரை) - 18 ஆண்டுகளைத் தாண்டி...

மில்லினியம் ஆண்டில் தொடக்கத்தில் அறிமுகமான இந்த எஸ்யூவி, இந்தியாவின் கிராமப்புறச் சாலைகளை மனதில்வைத்து தயாரிக்கப்பட்டது. அதனாலேயே இன்றும் அங்கு இருப்பவர்களின் ஏகோபித்த வரவேற்பை பொலேரோ சம்பாதித்துக்கொண்டிருக்கிறது. இதில் தேவையான மாற்றங்களை, தேவையான நேரத்தில் மஹிந்திரா செய்துகொண்டே இருந்ததால், இன்றும் ஒவ்வொரு மாதமும் அதிகம் விற்பனையாகும் டாப்-20 கார்களின் பட்டியலில் ஓர் இடத்தை இந்த எஸ்யூவி பெற்றிருக்கிறது.

கட்டுறுதியான அதேசமயம் காம்பேக்ட்டான எஸ்யூவி வேண்டுமா? -  `Old is Gold' என்கிற சொலவடைக்கான தீர்வாக பொலேரோ இருக்கிறது. தவிர, இது காவல்துறை தொடங்கி அரசு அதிகாரிகளின் அதிகாரபூர்வ வாகனமாகவும் ஆகிவிட்டது!

மாருதி வெர்ஸா (2001 முதல் தற்போது வரை) - 17 ஆண்டுகளைத் தாண்டி...

வெர்ஸா என்ற பெயரில் வெளிவந்த இதுதான், மாருதியின் முதல் மாடர்ன் எம்பிவிக்கான விதை. ஆனால் பாவம், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனால்கூட, வெர்ஸாவின் வீழ்ச்சியைத் தடுக்க முடியவில்லை என்பதே முரண்! அதனால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ஈக்கோ என்ற பெயரில் இந்த எம்பிவி-யை மாற்றியமைத்து, `கொஞ்சம் பெரிய பவர்ஃபுல்லான ஆம்னி வேண்டும்' என்பவர்களுக்கு ஏற்றபடி பொசிஷன் செய்தது மாருதி. அதனால் பொருள்களை இடமாற்றும் வாகனமாகவும் டாக்ஸியாகவும் வெற்றி கண்டிருக்கிறது ஈக்கோ. இன்னும் சொல்லப்போனால், மாருதியின் வெற்றி வரலாற்றில் சின்னதாகத் தெரியும் கறுப்புச் சரித்திரம்தான் இது.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ (2002 முதல் தற்போது வரை) - 16 ஆண்டுகளைத் தாண்டி...

சஃபாரியைப் பற்றிச் சொல்லும்போது, ஸ்கார்ப்பியோவைக் கண்டுக்காமல் இருக்க முடியுமா? கமர்ஷியல் மற்றும் யுட்டிலிட்டி வாகனங்களைத் தயாரித்துக்கொண்டிருந்த மஹிந்திராவுக்கு, `எங்களுக்கு எஸ்யூவி-களைத் தயாரிக்கவும் தெரியும்' என ஆணித்தரமாக நிரூபிக்க உதவியது ஸ்கார்ப்பியோதான்! இன்றளவிலும் வித்தியாசமான ஒரு முயற்சியாக, ஒரு காருக்கான உதிரிபாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் கூட்டு உழைப்பால் உற்பத்திசெய்யப்பட்ட கார், எனக்கு நினைவுதெரிந்து இதுவாகத்தான் இருக்கும்.

அந்தச் சமயத்தில் ஸ்கார்ப்பியோவின் அசெம்ப்ளி லைன், டிசைன், பணம் மட்டும்தான் மஹிந்திராவின் முதலீடாக இருந்தது. பொலேரோவைப்போலவே, இந்த எஸ்யூவி-யையும் நவீனப்படுத்திக்கொண்டே இருந்ததால், 2002 தொடங்கி இன்று வரை மஹிந்திராவின் பெயர் சொல்லும் பிள்ளையாக இருந்துவருகிறது ஸ்கார்ப்பியோ. `ஏழைகளின் எஸ்யூவி' என்ற பெயர், இதற்கு ரொம்ப காலம் நீடித்தது. ஆனால், சஃபாரி போலவே இதன் விலையும் நாளடைவில் எகிறிவிட்டது. தவிர, இது அரசியல்வாதிகளின் அறிவிக்கப்படாத காராகவும் மாறிவிட்டது என்பதே நிதர்சனம்.