Published:Updated:

"2020-க்கு மேல் இந்தியாவில் டீசல் கார்களை தயாரித்து விற்பது சிரமம்!" - ஃபோக்ஸ்வாகன் தலைவர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"2020-க்கு மேல் இந்தியாவில் டீசல் கார்களை தயாரித்து விற்பது சிரமம்!" - ஃபோக்ஸ்வாகன் தலைவர்
"2020-க்கு மேல் இந்தியாவில் டீசல் கார்களை தயாரித்து விற்பது சிரமம்!" - ஃபோக்ஸ்வாகன் தலைவர்

சமீபத்தில், சென்னைக்கு வந்திருந்த ஃபோக்ஸ்வாகன் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் ஸ்டெஃபன் நாப்பைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் இந்தியாவில் ஃபோக்ஸ்வாகனின் எதிர்காலத் திட்டங்கள் பற்றி பேசினோம். அதில் சில... 

* தான் விற்பனை செய்யும் கார்களின் விலையையும், பராமரிப்புச் செலவுகளையும் குறைக்கும் நடவடிக்கைகளில் ஃபோக்ஸ்வாகன் இறங்கியிருக்கிறது. தற்போது நாங்கள் இந்தியாவில் விற்பனை செய்யும் சில கார்களின் விலை, வெளிநாடுகளில் இருப்பதைவிட அதிகமாக இருக்கிறது. ஏனெனில், சர்வதேசச் சந்தைகளில் அறிமுகமாகப் போகும் ஒரு காரை, முதலில் இடதுபக்க ஸ்டீயரிங் அமைப்பைத்தான் வழங்குவோம். பின்னர் அதற்கு ஏற்படும் டிமாண்டைப் பொறுத்துதான், இந்தியா போன்ற வலதுபக்க ஸ்டீயரிங் அமைப்பிற்கு அதனை மாற்றுவோம்.

* இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனையாகும் கார்களாக இருப்பினும், அவை சர்வதேசச் சூழ்நிலைகளுக்கு ஏற்பவே உற்பத்தி செய்யப்படுகின்றன. அதாவது சர்வதேச சந்தைகளில் கிடைக்கும் மாடல் 200 கிமீ வேகத்தில் க்ரூஸ் செய்யக்கூடிய திறனைப் பெற்றிருப்பது அவசியம்; ஆனால், இந்திய நெடுஞ்சாலைகள் அந்தளவுக்கு இருக்கின்றனவா என்பது கேள்விக்குறியே. அதேபோல சர்வதேச கார்களில் இருக்கும் பேட்டரி, -50 டிகிரியிலும் கூட இயங்கும். இது இந்திய கார்களில் தேவைப்படாது. இப்படி நம் நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப கார்களை மாற்றியமைக்கும்போது, அவற்றின் விலை தானாகவே குறையும்.

* போலோ மற்றும் வென்ட்டோ ஆகிய கார்களின் புதிய தலைமுறை மாடல்களை, ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் வரை, தற்போது விற்பனையில் இருக்கும் மாடல்கள்  சின்னச்சின்ன மாற்றங்களுடன் தொடர்ந்து விற்பனையில் இருக்கும். ஏனெனில், ஏறக்குறைய 10 ஆண்டுகள் ஆன கார்களாக இருப்பினும், தமது வகையிலே தவிர்க்க முடியாத கார்களாக போலோ மற்றும் வென்ட்டோ திகழ்கின்றன. வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் இரண்டாம் தலைமுறை போலோ, 4 மீட்டருக்கும் அதிகமான நீளத்தில் இருக்கிறது. எனவே அதனை இந்தியாவுக்குக் கொண்டுவரும்போது, அதற்கு அதிக வரி செலுத்த நேரிடும். எனவே 4 மீட்டர் நீளத்துக்கு ஏற்ப புதிய தலைமுறை போலோவை மாற்றியமைத்து இந்தியாவில் களமிறக்குவதற்கு, 2020 அல்லது 2021 ஆண்டு வரை வரை காத்திருக்க நேரிடும். புதிய வென்ட்டோ மற்றும் போலோ GT TSI/GT TDI மாடல்களைப் பின்னர் பார்ப்போம்.

* ஏப்ரல் 1, 2020 முதலாக நாட்டில் அமலுக்கு வரவிருக்கும் BS-6 மாசு விதிகள் பற்றிய ஆலோசனையில் இறங்கியுள்ளோம். ஒவ்வொரு மாதமும் விற்பனையாகும் போலோ கார்களில் 5%தான் டீசல் மாடல்கள்! எனவே சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தும் டீசல் மாடல்களை ஒட்டுமொத்தமாக நிறுத்திவிட்டு, தொடர்ச்சியாக டிமாண்டில் இருக்கும் பெட்ரோல் மாடல்களைத் தயாரிப்பதற்கான சூழல் ஏற்படலாம். ஏனெனில் தற்போது இருக்கும் டீசல் இன்ஜின்களை BS-6 மாசு விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்துவதற்கு, அதிக தொழில்நுட்பம் மற்றும் பணம் தேவைப்படும். எனவே இது நிறுவனத்தின் திட்டங்களுக்குப் பாதகமாக அமையலாம். 

* எலெக்ட்ரிக் கார்களின் மீது அவ்வளவு ஆர்வம் இல்லை. மத்திய அரசாங்கம் நல்ல முடிவை எடுத்திருந்தாலும், திட்டங்கள் மற்றும் வருங்காலம் பற்றிய எந்த முடிவும் இதுவரை எட்டப்படவில்லை. மேலும் அதற்குத் தேவையான சார்ஜிங் ஸ்டேஷன் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆகியவை குறித்து எந்த தெளிவும் இல்லை. எங்களைப் பொறுத்தவரை, கார்கள் வெளியிடும் மாசைக் குறைப்பதற்கு, ஹைபிரிட் கார்கள் சரியான சாய்ஸாக இருக்கும். ஆனால் இந்திய மக்கள் தொழில்நுட்பத்திற்கான விலையைக் கொடுக்கத் தயாராக இருந்தால் எதுவும் சாத்தியப்படலாம். ஒருவேளை நாங்கள் எலெக்ட்ரிக் கார்களைத் தயாரிக்க முன்வந்தால், அது எங்கள் நிறுவனத்தின் பெயரைப் பறைசாற்றும் விதமாக, மக்களுக்கான எலெக்ட்ரிக் காராகவே இருக்கும்!

* இந்தியா 2.0 ப்ராஜெக்ட்டை, ஸ்கோடா இந்தியா நிறுவனம்தான் வழிநடத்தப்போகிறது. மற்றபடி சேல்ஸ் & சர்வீஸ், மார்க்கெட்டிங் ஆகியவை, அந்தந்த நிறுவனங்களின் சார்பாகவே மேற்கொள்ளப்படும். இதன் வாயிலாக முதலில் வெளிவரப்போகும் கார், T-Cross எஸ்யூவியாக இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம். இது ஹூண்டாய் க்ரெட்டா, ரெனோ கேப்ச்சர், மாருதி சுஸூகி எஸ்-க்ராஸ் ஆகிய கார்களுடன் போட்டி போடும். அதேபோல MQB AO IN ப்ளாட்ஃபார்மில்தான், ஃபோக்ஸ்வாகன் குழும நிறுவனங்களின் இந்தியாவுக்கான கார்கள் அனைத்தும் தயாரிக்கப்படும். 7900 கோடி ரூபாய் முதலீட்டில், புனேவில் தொடங்கப்படவிருக்கும் டிசைன் சென்டர் இதில் பெரும்பங்கு வகிக்கும். டிசைன், கட்டுமானம், வசதிகள், இன்ஜின் ஆப்ஷன்கள் ஆகியவை இந்திய சந்தைக்கு ஏற்ப இருக்கும். உற்பத்திச் செலவுகள் குறைவதால், கார்களின் விலையும் தானாகக் குறையும். தற்போது இந்தியாவின் 104 நகரங்களில் 121 டீலர்கள் இருக்கும் நிலையில், புதிய தயாரிப்புகளுக்கு ஏற்ப அதன் எண்ணிக்கையை உயர்த்தும் முடிவில் இருக்கிறோம்.

* நாங்கள் விற்பனை செய்யும் கார்களை வாங்கும் 90% மக்கள், முதன்முறையாகக் கார் வாங்குபவர்களாக இருக்கிறார்கள். இதை எங்கள் கார்களின் தொழில்நுட்பம், தரம், பாதுகாப்பு, ஓட்டுதல் அனுபவத்துக்குக் கிடைத்த பரிசாகவே பார்க்கிறோம். மேலும், இந்தியாவில் இருக்கும் பல ஜெர்மனிய நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, ஃபோக்ஸ்வாகன்தான் பலராலும் எட்டிப்பிடிக்கக்கூடிய இடத்தில் இருக்கிறது. எங்கள் கார்களின் மாசு குறித்து NGT எழுப்பிய சந்தேகத்துக்குப் பதில் என்னவென்றால், அந்த பிரச்னையில் ரீ-கால் செய்யபட்ட 3.25 லட்ச கார்களில் 84% கார்களில், சாஃப்ட்வெர் அப்டேட் வாயிலாகவே தீர்வைக் கண்டுபிடித்துவிட்டோம். தற்போது 2% குறைவான சந்தை மதிப்பைக் கொண்டிருந்தாலும், 2025-க்குள்ளாக அதை 5% ஆக அதிகரிப்பதே எங்கள் நோக்கம். அதற்கேற்ப புனேவில் இருக்கும் ஃபோக்ஸ்வாகன் தொழிற்சாலையில் வருட உற்பத்தியை, 1.8 லட்சத்தில் இருந்து 2 லட்சமாக உயர்த்தப்படும். மேலும் தற்போது கார்களில் இருக்கும் உள்நாட்டு உதிரிபாகங்களின் எண்ணிக்கை 82% ஆக இருக்கிறது. இதை எதிர்காலத்தில் 90% ஆக அதிகரிக்கும் முடிவில் இருக்கிறோம்.   

* உலகளவில் பிரபலமான Child Parts கோட்பாடுகளை, இந்தியாவில் பிரகடனப்படுத்த இருக்கிறோம். இதன்படி இப்போது உங்கள் காரின் ரியர் வியூ மிரரின் கவர்  உடைந்திருக்கிறது என எடுத்துக் கொள்வோம். இப்போதைய சூழலில், முழு செட்டையும் மாற்றுவதே வாடிக்கை. ஆனால், புதிய கோட்பாட்டின்படி, கவர் மட்டுமே தனியாகக் கிடைக்க வழி செய்திருப்போம் என்பதால், அதை மட்டும் மாற்றி, ஒட்டுமொத்தக் காரின் பராமரிப்புச் செலவுகளையும் கட்டுக்குள் கொண்டு வரமுடியும். மேலும், தமிழகத்தில் இருக்கும் எங்களின் 11 ஷோரூம்களில், volkswagen Express Service Facility வசதி 6 ஷோரூம்களில் இருக்கிறது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு