Published:Updated:

டெஸ்ட்டிங்கில் நிஸான் கிக்ஸ்.... என்ன எதிர்பார்க்கலாம்?!

போட்டிமிகுந்த இந்திய கார் சந்தையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கும் முயற்சியாகவே, டிரெண்டிங்கில் இருக்கும் எஸ்யூவி செக்மென்ட்டில் கிக்ஸ் காரை இறக்குகிறது நிஸான்.

டெஸ்ட்டிங்கில் நிஸான் கிக்ஸ்.... என்ன எதிர்பார்க்கலாம்?!
டெஸ்ட்டிங்கில் நிஸான் கிக்ஸ்.... என்ன எதிர்பார்க்கலாம்?!

ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸூகி எஸ்-க்ராஸ், ஹோண்டா BR-V, மஹிந்திரா XUV 5OO, ஜீப் காம்பஸ், டாடா ஹெக்ஸா ஆகிய கார்களுக்குப் போட்டியாக, வருகின்ற ஜனவரி 2019-ல் நிஸான் அறிமுகப்படுத்தப் போகும் கிக்ஸ் எஸ்யூவியை பற்றி, அதன் டிசைனர் அல்ஃபோன்ஸோ அல்பைஸா கூறியதைப் பார்த்தோம். சர்வதேச சந்தைகளில் இடதுபக்க ஸ்டீயரிங் அமைப்புடன் இந்த கார் விற்பனை ஆகும் நிலையில், தற்போது தமிழகத்தில் வலதுபக்க ஸ்டீயரிங் அமைப்புடன் கிக்ஸ் டெஸ்ட் செய்யப்படுவது தெரியவந்துள்ளது.

வேலூரில் இருக்கும் பல்லிகொண்டா சுங்கச் சாவடி அருகே இதைப் படம்பிடித்திருக்கிறார், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகரான ஆ. திலக். ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, கார் பார்ப்பதற்கு பிரிமியமான V-ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் சர்வதேச மாடலை போலவே இருப்பது தெரிகிறது.  

டிசைன் மற்றும் வசதிகளில் என்ன ஸ்பெஷல்?

இது டஸ்ட்டர்/டெரானோ, லாஜி, கேப்ச்சர் தயாரிக்கப்படும் அதே பட்ஜெட் MO ப்ளாட் ஃபார்மில் தயாரிக்கப்பட உள்ளது. ஆனால் டஸ்ட்டரில் இருந்து டெரானோ உருவானதைப் (Badge Engineering)போல இல்லாமல், தனக்கெனப் பிரத்யேக பாடி ஷெல்லுடன் கிக்ஸ் களமிறங்குகிறது. மேலும், இது முன்னே சொன்ன கார்களைவிட அதிக நீளத்தைக் கொண்டிருக்கும் என்பதுடன், இந்தியாவில் நிஸானின் விலையுயர்ந்த காராக பொசிஷன் செய்யப்படும்.

எனவே, உலகளவில் டிசைனுக்குப் பெயர்பெற்ற கிக்ஸ் இந்தியாவுக்கு வரும்போது, நீளமான பானெட் - தடிமனான வீல் ஆர்ச் - கறுப்பு நிற பில்லர்கள் - Contrast கலர் ஆப்ஷன் - க்ராஸ்ஓவர் கூபே டிசைன் - ரூஃப் ரெயில் - டயமண்ட் கட் அலாய் வீல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என நம்பலாம். கேபினும் சர்வதேச மாடலைப் போலவே வடிவமைக்கப்படும் என்பதுடன், ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி மற்றும் 360 டிகிரி கேமரா உடனான 7 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம் - அனலாக் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் - க்ளைமேட் கன்ட்ரோல்களுடன் ஏசி - பலவித கன்ட்ரோல்களுடன் , கூடிய ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல் - டூயல் டோன் ஃப்னிஷ் - புஷ் பட்டன் ஸ்டார்ட் - டிராக்‌ஷன் கன்ட்ரோல்களுடன் - 4 காற்றுப்பைகள் ஆகிய மாடர்ன் வசதிகள் இருப்பது போனஸ். 

இன்ஜின் - கியர்பாக்ஸ் மற்றும் விலை எப்படி இருக்கும்?

டஸ்ட்டர்/டெரானோ மற்றும் கேப்ச்சர் ஆகிய கார்களில் இருக்கும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல்/டீசல் இன்ஜின் ஆப்ஷன்களே இடம்பெற்றுள்ளன. 106bhp பவரை H4K பெட்ரோல் இன்ஜின் வெளிப்படுத்தினால், 110bhp பவரை K9K டீசல் இன்ஜின் வெளிப்படுத்துகிறது. பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல்/CVT மற்றும் டீசல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல்/AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். போட்டிமிகுந்த இந்திய கார் சந்தையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கும் முயற்சியாகவே, டிரெண்டிங்கில் இருக்கும் எஸ்யூவி செக்மென்ட்டில் கிக்ஸ் காரை இறக்குகிறது நிஸான்.

அதற்கேற்ப முதல் வருடத்தில் 30 ஆயிரம் கிக்ஸ் கார்களை இந்தியாவில் விற்பனை செய்யவும், இங்கிருந்து சர்வதேச சந்தைகளுக்கு 20 ஆயிரம் கிக்ஸ் கார்களை ஏற்றுமதி செய்யும் திட்டத்தில் அந்த நிறுவனம் இருக்கிறது. எனவே, போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, விலை விஷயத்தில் நிஸான் உஷாராகவே இருக்கும். அதற்கு உள்நாட்டு உதிரிபாகங்கள் - உள்நாட்டு உற்பத்தி கைகொடுக்கும். 

பாதுகாப்பில் கிக்ஸ் பெறும் ரேட்டிங் என்ன?

லத்தின் NCAP அமைப்பு, கடந்த ஆண்டின் இறுதியில், சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படும் கிக்ஸ் எஸ்யூவியை க்ராஷ் டெஸ்ட் பரிசோதனைக்கு உட்படுத்தியது. பிரேசிலில் லேட்டஸ்ட்டான V-ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்ட இந்தக் கார், ஒட்டுமொத்தமாக (AOP - COP - Lateral Impact) 4 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றது. 2 காற்றுப்பைகள், ABS, ESC, Pretensioner உடனான சீட் பெல்ட், குழந்தைகளுக்கான ISOFIX சீட் மவுன்ட் ஆகிய பாதுகாப்பு அம்சங்களைப் பெற்றிருந்தது.

'காரின் கட்டுமானம் மற்றும் கால் வைக்கும் பகுதி இன்னும் கொஞ்சம் திடமாக இருந்திருந்தால், Adult Occupant Protection-ல் 5 ஸ்டார் ரேட்டிங் சாத்தியம்; பக்கவாட்டுப் பகுதி உறுதியாக இருக்கிறது. அதேபோல, காற்றுப்பைகளை தேவைப்பட்டால் De-Activate செய்வதற்கான ஸ்விட்ச் மற்றும் ISOFIX வார்னிங் லைட் ஆகியவை இருந்திருந்தால், Child Occupant Protection-ல் 5 ஸ்டார் ரேட்டிங் சாத்தியம்' என லத்தின் NCAP அமைப்பு தெரிவித்தது. ஆனால், இந்தியாவில் வெளிவரப்போகும் கிக்ஸ், அப்டேட் செய்யப்பட்ட Low Cost MO ப்ளாட் ஃபார்மில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதில் தயாரிக்கப்பட்ட மற்ற கார்களான ரெனோ டஸ்ட்டர் மற்றும் லாஜி ஆகியவை 3 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றிருக்கின்றன. எனவே, அடுத்த ஆண்டில் அமலுக்கு வரவிருக்கும் புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப கிக்ஸ் தயாரிக்கப்படும் என்பதால், அது பாதுகாப்பில் அதிக ஸ்கோர் செய்தாலும் ஆச்சர்யம் இல்லை!