Published:Updated:

டெஸ்ட்டிங்கில் ஹூண்டாயின் புதிய கிராண்ட் i10... என்ன எதிர்பார்க்கலாம்?

டெஸ்ட்டிங்கில் ஹூண்டாயின் புதிய கிராண்ட் i10... என்ன எதிர்பார்க்கலாம்?
டெஸ்ட்டிங்கில் ஹூண்டாயின் புதிய கிராண்ட் i10... என்ன எதிர்பார்க்கலாம்?

டெஸ்ட்டிங்கில் ஹூண்டாயின் புதிய கிராண்ட் i10... என்ன எதிர்பார்க்கலாம்?

சான்ட்ரோ (AH2)... 'கபாலி' படத்தில் ரஜினிகாந்த் சொல்வதுபோல இந்தியாவில் கம்பேக் கொடுக்க இருக்கும் இந்த காரை, வரும் அக்டோபர் 23, 2018 அன்று அறிமுகப்படுத்த இருக்கிறது ஹூண்டாய். மேலும் QXi என்ற புனைப்பெயரில், ஃபோர்டு எக்கோஸ்போர்ட் - மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா - மஹிந்திரா TUV 3OO - டாடா நெக்ஸான் ஆகிய காம்பேக்ட் எஸ்யூவிகளுக்குப் போட்டியாக ஒரு காரை (கார்லினோ) உலக அளவில் டெஸ்ட்டிங்கில் இருக்கிறது. இந்நிலையில், மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்டுக்குப் போட்டியாக, அடுத்த தலைமுறை கிராண்ட் i10 காரை சத்தமில்லாமல் டெஸ்ட் செய்துவருகிறது ஹூண்டாய்.

இதுவும் உலக அளவில் டெஸ்ட்டிங்கில் இருந்தாலும், அடுத்த ஆண்டில் இது உலகச் சந்தைகளில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக நெடுஞ்சாலைகளில் டெஸ்ட் செய்யப்பட்டபோது, அதைப் படம்பிடித்திருக்கிறார், கோவையைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகரான எஸ். கோகுல் பிரசாந்த். ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, பெரிய சான்ட்ரோ போலவே இருக்கிறது. ஆனால் உற்றுநோக்கும்போது, அளவுகள் மற்றும் டிசைனில் மாற்றம் இருப்பது தெரிகிறது. தற்போது விற்பனையில் இருக்கும் கிராண்ட் i10, கூடுதல் இடவசதியை கருத்தில்கொண்டு, சர்வதேச சந்தைகளில் இருக்கும் மாடலைவிட 40 மி.மீ அதிக நீளத்தைக் கொண்டிருப்பது தெரிந்ததே! எனவே, அதே பாணியில் இந்த காரும் வடிவமைக்கப்படலாம்.

சர்வதேச அளவில் வெளியான எலான்ட்ரா பேஸ்லிஃப்ட் போலவே, புதிய கிராண்ட் i10 காரின் முன்பக்கம் அமைந்திருக்கிறது. அறுகோண வடிவ கிரில், அகலமான ஹெட்லைட்ஸ் மற்றும் டெயில் லைட்ஸ், மெலிதான பனி விளக்குகள் ஆகியவற்றை இதற்கான உதாரணமாகச் சொல்லலாம். தற்போதைய மாடலே சிறப்பம்சங்களில் எகிறியடிக்கும் நிலையில், புதிய மாடல் இன்னும் அசத்தும் என நம்பலாம். ஸ்பை படங்களில் இருப்பது, டாப் வேரியன்ட்டாக இருக்கலாம்; இதில் இடம்பெற்றிருக்கும் டயமண்ட் கட் அலாய் வீல்கள், பிரேக் லைட் உடன்கூடிய பின்பக்க ஸ்பாய்லர், கறுப்பு நிற பில்லர்கள், இண்டிகேட்டர்களுடன் கூடிய ரியர் வியூ மிரர்கள் ஆகியவை இதை உறுதிப்படுத்துகின்றன.  ஸ்விஃப்ட்டின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் இருக்கின்றன. 

எனவே, சான்ட்ரோவைத் தொடர்ந்து, கிராண்ட் i10 காரிலும் AMT ஆப்ஷனை ஹூண்டாய் வழங்குவதற்கான சாத்தியங்கள் அதிகம்! BS-6 மாசுக்கட்டுப்பாடு மற்றும் புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த கார் தயாரிக்கப்படலாம். எனவே, தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைவிட இதன் விலை அதிகமாகவே இருக்கும். இந்த கார் இந்தியாவுக்கு வருவதால், இதை அடிப்படையாகக் கொண்டுள்ள பிக்கான்ட்டோ (Picanto) காரை கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவுக்குக் கொண்டுவரலாம். இது அளவில் காம்பேக்ட்டாக இருப்பதுடன், கூடுதலாக ஒரு Cross Hatch வெர்ஷனையும் கொண்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு