Published:Updated:

டெஸ்ட்டிங்கில் MG Hector எஸ்யூவி... என்ன எதிர்பார்க்கலாம்?

காரின் பின்பக்கத்தில் பெரிய Overhang இருப்பதை வைத்துப் பார்க்கும்போது, கேபின் இடவசதி அசத்தலாக இருக்கலாம்.

டெஸ்ட்டிங்கில் MG Hector எஸ்யூவி... என்ன எதிர்பார்க்கலாம்?
டெஸ்ட்டிங்கில் MG Hector எஸ்யூவி... என்ன எதிர்பார்க்கலாம்?

Hector... இந்த மிட்-சைஸ் எஸ்யூவிதான், MG மோட்டார் இந்தியா நிறுவனத்தின் முதல் மாடலாக இருக்கப்போகிறது! இதைப் பற்றி நாம் ஏற்கெனவே பார்த்துவிட்டோம் என்றாலும், தற்போது கூடுதல் தகவல்கள் மற்றும் ஸ்பை படங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. புனேவில் இருக்கும் தாலேகான் நகரத்தில் டெஸ்ட் செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோது அதனைப் படம் பிடித்திருக்கிறார், புனேவைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகரான தினேஷ் பாஸ்கரன். 2019-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் Hector களமிறங்குவதற்கான சாத்தியங்கள் அதிகம். 

டிசைன் மற்றும் கேபின் எப்படி இருக்கும்?

அகலமான தேன்கூடு ஸ்டைல் க்ரில்லின் நடுவே, MG லோகோ வீற்றிருக்கும். டாடா ஹேரியர் போலவே, பானெட்டுக்கு அடியே மெலிதான LED DRL (ஆடி கார்களில் இருப்பதுபோன்ற Swiping இண்டிகேட்டர் உடன்) மற்றும் அதற்குக் கீழே LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட் இருக்கிறது. 17 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், Shark Fin Antenna, ரூஃப் ரெயில், LED டெயில் லைட்ஸ், இண்டிகேட்டர்கள் உடனான ரியர் வியூ மிரர்கள், ரியர் வைப்பர் மற்றும் Defogger எனக் காரின் வெளிப்புறத்தில் மாடர்ன் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. காரின் பின்பக்கத்தில் பெரிய Overhang இருப்பதை வைத்துப் பார்க்கும்போது, கேபின் இடவசதி அசத்தலாக இருக்கலாம். CR-V மற்றும் டூஸான் உடன் ஒப்பிடும்போது, 5 சீட்டர் எஸ்யூவியான Hector-ன் நீளம்/ உயரம் அதிகம். 'Largest in Class' என்ற அடைமொழி இதற்குப் பொருந்தும்.

க்ரோம் - லெதர் - தொடுவதற்கு மென்மையான ப்ளாஸ்டிக்ஸ் ஆகியவற்றுடன், கேபின் செம ஸ்டைலாக இருக்கும் என நம்பலாம். லேட்டஸ்ட் கார்களைப் போலவே, Hector எஸ்யூவி வசதிகளில் எகிறியடிக்கும் எனத் தெரிகிறது. ஆரம்ப மாடலிலேயே சிறிய சன்ரூஃப் இருந்தால், டாப் வேரியன்ட்டில் பெரிய Panaromic சன்ரூஃப் இருக்கிறது! காரின் நீளம் போல, டச் ஸ்க்ரீன் சிஸ்டமும் ‘Largest in India' வகையில் இருக்கும். அதாவது Portrait வகை 10.4 இன்ச் டச் ஸ்க்ரீனில் இன்ஃபோ -டெயின்மென்ட் தேவைகளுடன் கிளைமேட் கன்ட்ரோல் ஏசியையும் ஆபரேட் செய்யமுடியும். 360 டிகிரி கேமரா போனஸ். 4 ஸ்பீக்கர் - 4 Tweeter - 1 Sub Woofer என டாடா ஹேரியருக்குச் சவால் விடுகிறது Hector-ன் Harman Infinity ஆடியோ சிஸ்டம்!

வசதிகள் மற்றும் இன்ஜின் ஆப்ஷன் என்னென்ன?

Six-Way Power Adjustable டிரைவர் சீட், ஆடியோ மற்றும் டெலிஃபோன் கன்ட்ரோல்களுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், புஷ் பட்டன் ஸ்டார்ட், கிலெஸ் என்ட்ரி, க்ரூஸ் கன்ட்ரோல், TPMS, லெதர் சீட்கள், க்ரோம் வேலைப்பாடுகளுடன் கூடிய ஏசி வென்ட் மற்றும் சென்டர் கன்சோல், பின்பக்க ஏசி வென்ட்கள், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், TFT MID டிஸ்பிளே என எக்கச்சக்க வசதிகள் இருப்பது பெரிய ப்ளஸ். பாதுகாப்பு வசதிகளைப் பொறுத்தவரை 4 வீல்களுக்கும் டிஸ்க் பிரேக் - ABS - EBD - Brake Assist - Auto Vehicle Hold உள்ளன. ஆரம்ப மாடலில் 2 காற்றுப்பைகள் இருந்தால், டாப் மாடலில் அதிக காற்றுப்பைகள் இருக்கலாம். 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வரவுள்ளது Hector. 

இரண்டுமே 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் கிடைக்கும் என்பது நைஸ். CR-V மற்றும் டூஸானின் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்கள், முறையே 154bhp மற்றும் 155bhp பவரை வெளிப்படுத்துகின்றன. ஆனால் CR-Vயின் 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் 120bhp பவரையே வெளிப்படுத்தும் நிலையில், டூஸானின் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் தருவதோ 185bhp பவர்! எனவே பர்ஃபாமென்ஸ் விஷயத்தில் Hector அதிரடிக்கலாம். ஆனால் இது முன்னே சொன்ன கார்களைப் போல ஆல் வீல் டிரைவ் அமைப்புடன் வருமா என்பது போகப்போகத் தெரியும். 75% உள்நாட்டுப் பாகங்களுடன், குஜராத்தின் Halol நகரத்தில் அமைந்திருக்கும் SAIC நிறுவனத்தின் கார் தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்படவிருக்கும் Hector, அட்டகாசமான விலையைக் கொண்டிருக்கலாம்.