Published:Updated:

லேட்டஸ்ட் விதிகளால் நிறுத்தப்படவிருக்கும் கார்கள் என்னென்ன?!

ஒரு காரின் டிமாண்ட் நாளடைவில் சரிந்தாலும், அதன் உற்பத்தி குறையுமே தவிர, அதற்கு மூடுவிழா நடத்தப்படுவதற்கான சாத்தியம், இந்திய கார் சந்தையில் அரிதான நிகழ்வுதான்!

லேட்டஸ்ட் விதிகளால் நிறுத்தப்படவிருக்கும் கார்கள் என்னென்ன?!
லேட்டஸ்ட் விதிகளால் நிறுத்தப்படவிருக்கும் கார்கள் என்னென்ன?!

ஐப்பான்... உலக அளவில் அதிக வாழ்நாளைக் கொண்ட மனிதர்கள் வாழும் நாடாக இருக்கிறது. ஆனால், அதிக வாழ்நாளுடன்கூடிய கார்கள் அதிகமாக இருக்கும் நாடாக இந்தியா திகழ்கிறது. இது என்ன புதுசா இருக்கே என்கிறீர்களா? அதற்கான உதாரணங்கள் ஏராளமாக இருக்கிறது பாஸ்! மேற்கு வங்காளத்தில் உள்ள உத்தர்பராவில், 1948 முதல் 2014 வரை தயாரிக்கப்பட்ட ஹிந்துஸ்தான் அம்பாஸடர்தான், நீண்ட நாள்கள் உற்பத்தியில் இருந்த கார் என்ற பெருமையைக் கொண்டிருக்கிறது! 'இந்தியாவை 4 சக்கரங்களில் சுழலவைத்த கார்' என்ற அழியாப் புகழைத் தன்வசம் வைத்திருக்கும் மாருதி 800 காரை உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால், அது 30 வருடங்கள் (1983-2013) தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இதே நிறுவனத்தின் ஆம்னி மற்றும் ஜிப்ஸியும், முறையே 35 மற்றும் 34 வருடங்களாக உற்பத்தியில் உள்ளன. ஹேரியர் - நெக்ஸான் - ஹெக்ஸா - டியாகோ என மாடர்ன் கார்கள் ஒருபுறம் இருந்தாலும், டாடா மோட்டார்ஸ் சுமோ (25 ஆண்டுகள்) மற்றும் சஃபாரி (21 ஆண்டுகள்) எனப் பாரம்பரியமான மாடல்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. 1998-ம் ஆண்டில் தோன்றிய இண்டிகா, 2018-ம் ஆண்டில் 20 வயதை எட்டியவுடன் மறைந்துவிட்டது. 1st Gen ஹூண்டாய் சான்ட்ரோவுக்கு வயது 16 (1998-2014).

ஒரு காரின் டிமாண்ட் நாளடைவில் சரிந்தாலும், அதன் உற்பத்தி குறையுமே தவிர, அதை நிறுத்திவிடும் சாத்தியம், இந்திய கார் சந்தையில் அரிதான நிகழ்வு! ஆனால், தற்போது புதிய மாடல்களால் அதிகரிக்கும் போட்டி - மேம்படுத்தப்பட்ட மாசு விதிகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் எனச் சூழல் கொஞ்சம் கடுமையாக மாறுவதால், கார் தயாரிப்பாளர்கள் தமது கார்களை அப்டேட்டாக வைத்துக்கொள்வது அவசியமாகிறது. மாசு விதிகளால் ஒரு காரின் அறிமுகம் மற்றும் பேஸ்லிஃப்ட் மாடலுக்கு இடையேயான கால அவகாசம் குறைந்திருக்கிறது என்றாலும், அதன் உற்பத்தி எப்போதும் நிறுத்தப்படவில்லை. மாறாக, பழைய கார்களில் புதிய இன்ஜின்கள் இடம்பெயர்ந்துகொண்டிருந்தன. இதேபோன்றதொரு பிரச்னை அம்பாஸடருக்கு வந்தபோது, கான்டஸாவில் இருந்த இசுஸூவின் 1.8 லிட்டர் MPFi பெட்ரோல் இன்ஜினை அதில் சேர்த்து, சுலபமாக தீர்வைக் கண்டிருந்தது ஹிந்துஸ்தான்.  

ஆனால், பாதுகாப்பு விதிமுறைகளால், விரைவில் இந்திய கார் சந்தையில் காட்சிகள் மாற உள்ளன. வரும் ஏப்ரல் 1 - 2019 முதல், கார்களில் ஏபிஎஸ் - டிரைவர் காற்றுப்பை கட்டாயமாக்கப்படுகிறது. தவிர, அக்டோபர் 1 - 2019 முதலாக, அனைத்து கார்களுக்கும் க்ராஷ் டெஸ்ட் அத்தியாவசியமாக்கப்படுகிறது. எனவே, நீண்ட நாள்களாக உற்பத்தியில் இருக்கும் 13 கார்களின் ஒரேடியாக நிறுத்தப்பட இருக்கின்றன. இந்த விதிகள் அக்டோபர் 1, 2017 அன்றே அமலுக்கு வந்துவிட்டாலும், அனைத்து கார்களுக்கும் இந்த விதிக்கு ஏற்ப மாற்றமடைவதற்கு 2 ஆண்டுகள் காலக்கெடு வழங்கப்பட்டது. நீண்ட நாள்களாகப் பெரிய மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படும் கார்களின் ப்ளாட்ஃபார்ம், தேவையான மாற்றங்களைச் செய்யமுடியாத நிலையில் இருக்கும் என்பதே அதன் உற்பத்தி நிறுத்தப்படுவதற்கான காரணி. இதனால், குறைவான பாதுகாப்பு அளவுகளைப் பயணிகளுக்கு வழங்கக்கூடிய சில கார்கள் வெளியேற்றப்படும் என்றாலும், வரலாற்றுச் சிறப்புமிக்க சில கார்கள் நம்மை விட்டுச் செல்கின்றன என்பதையும் இந்த இடத்தில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

ஃபியட் புன்ட்டோ (2009-2019), ஃபியட் லினியா (2008-2019)

ஹோண்டா பிரியோ (2011-2019) மற்றும் ஹூண்டாய் இயான் (2011-2019)

மஹிந்திரா E2O (2013-2019), மஹிந்திரா நுவோஸ்போர்ட் (2009-2019), மஹிந்திரா வெரிட்டோ (2011-2019), மஹிந்திரா ஸைலோ (2009-2019)

மாருதி சுஸூகி ஆம்னி (1984-2019), மாருதி சுஸூகி ஜிப்ஸி (1985-2019)

டாடா நானோ (2008-2019), டாடா சஃபாரி (1998-2019), டாடா சுமோ (1994-2019)

இந்தப் பட்டியலில் மஹிந்திராவின் பொலேரோ மற்றும் தார், டாடாவின் ஹெக்ஸா, மாருதி சுஸூகியின் ஆல்ட்டோ மற்றும் ஈக்கோ ஆகியவையும் சிக்கலாம். ஸ்கார்ப்பியோ மற்றும் TUV 3OO ஆகிய கார்கள் தயாரிக்கப்படும் மஹிந்திராவின் Gen-3 லேடர் சேஸியில், முற்றிலும் புதிய கார் கட்டமைக்கப்படும். அடுத்த ஆண்டு அறிமுகமாகப்போகும் இந்த எஸ்யூவி, புதிய பாடி மற்றும் பாதுகாப்பு வசதிகளைக்கொண்டிருக்கும். இப்படி புதிய விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட உள்ள அடுத்த தலைமுறை காரின் டெஸ்ட்டிங்கை, மஹிந்திரா ஏற்கெனவே தொடங்கிவிட்டது. ஆனால், அடுத்த பொலேரோ குறித்து இப்போதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. 

அதேபோல, அடுத்த ஆண்டின் நடுவே, ஹெக்ஸாவின் உற்பத்தியை நிறுத்த டாடா யத்தனித்திருக்கிறது. ஏனெனில், ஏப்ரல் 1 – 2020 முதலாக அமலுக்கு வரவிருக்கும் BS-6 மாசு விதிகள் மற்றும் Pedestrian Protection விதிகளுக்கு ஏற்ப அந்த எஸ்யூவியை மாற்றியமைக்க, அதிக முதலீடு தேவைப்படலாம். ஆரியாவாகப் பிறந்து, ஹெக்ஸாவாக வளர்ந்து - இப்படி எம்ந்வியில் இருந்து எஸ்யூவி-யாக மாறிய கார், நம்மை விட்டுச் செல்லவிருக்கிறது! 

மேலும், ஆல்ட்டோ மற்றும் ஈக்கோ ஆகிய கார்களும் க்ராஷ் டெஸ்ட் விதிகளில் பாஸ் மார்க் வாங்காது என்பதால், அவை புதிய அவதாரத்தில் வரவிருக்கின்றன. இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாக உள்ள புதிய ஈக்கோவின் ஆரம்ப வேரியன்ட், ஆம்னியின் இடத்தைப் பிடித்துக்கொள்ளும். வேகன்-ஆரை தொடர்ந்து, மாற்றியமைக்கப்பட்ட Heartect ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்படவிருக்கிறது புதிய ஆல்ட்டோ. எனவே, கார் விற்பனையில் தனது முன்னிலையைத் தக்கவைத்துக்கொள்ள மாருதி சுஸூகி தெளிவான திட்டங்களை வைத்திருக்கிறது. இந்தப் பட்டியலில், விற்பனையில் பின்தங்கியிருக்கும் சில கார்கள் பின்னாளில் வரலாம்.