Published:Updated:

``இந்தியாவில் BS-6 என்பது சவாலானது" - டெய்ம்லர் பஸ் இந்தியா! #Daimler

ராகுல் சிவகுரு
``இந்தியாவில் BS-6 என்பது சவாலானது" - டெய்ம்லர் பஸ் இந்தியா! #Daimler
``இந்தியாவில் BS-6 என்பது சவாலானது" - டெய்ம்லர் பஸ் இந்தியா! #Daimler

டெய்ம்லர் இந்தியா கமர்ஷியல் வாகனம் நிறுவனத்துக்குக் கீழே இயங்கும் டெய்ம்லர் பஸ் இந்தியப் பிரிவு, கடந்தாண்டில் மட்டும் 1,555 வாகனங்களை (பஸ், லக்ஸூரி கோச், சேஸி எல்லாம் சேர்த்து) விற்பனை செய்திருந்தது. இது 2017-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 72% வளர்ச்சி என்பதுடன், 13 பஸ் சந்தைகளுக்கான ஏற்றுமதியும் 50% அதிகரித்து 616 வாகனங்கள் என்றளவில் இருந்தது. சீனாவுக்கு அடுத்தபடியாக (1.3 லட்சம் பஸ்), இந்தியாதான் உலகளவில் இரண்டாவது பெரிய பஸ் சந்தை (40,000 பஸ்). 

``நாங்கள் இந்தியாவுக்கு வந்து 3 ஆண்டுகளே ஆகியிருந்தாலும், உலகளவில் எங்களுக்கு ஐந்தாவது பெரிய சந்தையாக இது மாறியிருக்கிறது. கடந்த ஆண்டில் விற்பனை இலக்குடன், பொருளாதார இலக்கையும் எட்டிவிட்டோம். வருங்காலத்தில் எங்கள் வாகனங்கள், BS-6 தொழில்நுட்பத்துடன் கூடிய உலகத்தரமான வாகனங்களாக இருக்கும். சர்வதேச அளவில் யூரோ-4ல் இருந்து யூரோ-6க்கு வர 7 ஆண்டுகள் பிடித்திருக்கிறது என்றால், இந்தியாவில் இது வெறும் 4 ஆண்டுகளே'' என்றார், டெய்ம்லர் பஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான தாமஸ் ஃப்ரிக்கி. 

இந்த ஆண்டில் 9,16,24 டன் சேஸிகள் தவிர எந்தப் புதிய அறிமுகங்களும் இந்த நிறுவனத்திலிருந்து இருக்காது என்றாலும், 9 டன் பஸ் (School, Staff, Tourist) - மெர்சிடீஸ் பென்ஸின் 15 மீட்டர் மல்ட்டி ஆக்ஸில் லக்ஸூரி பஸ் - 9,16,24 டன் பஸ்களுக்கான சேஸி ஆகியவற்றை BS-6 மாசு விதிகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் பணிகளில் டெய்ம்லர் பஸ் இந்தியா நிறுவனம் ஈடுபட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இவர்களின் சர்வதேச வாகனங்களில் ஏற்கெனவே யுரோ-6 தொழில்நுட்பம் இருப்பதால், அதை இந்தியாவுக்கு ஏற்ப மாற்றியமைப்பதே பிரதான பணியாக இருக்கும். எனவே BS-4 வாகனத்துடன் ஒப்பிடும்போது, 95% Localisation செய்யப்பட்ட BS-6 வாகனத்தின் விலை 5-20% வரை அதிகமாக இருக்கலாம்.