Published:Updated:

எஸ்யூவி, குவாட்ரிசைக்கிள், ஸ்கூட்டர், ஹேட்ச்பேக்... எது வேண்டும் உங்களுக்கு?

என்னுடைய பட்ஜெட் 10 லட்ச ரூபாய். எனவே டாப் வேரியன்ட்தான் வேண்டும். காரின் பெர்ஃபாமென்ஸ் சிறப்பாகவும், அதன் தோற்றம் யூத்புல்லாகவும் இருக்க வேண்டும்.

எஸ்யூவி, குவாட்ரிசைக்கிள், ஸ்கூட்டர், ஹேட்ச்பேக்... எது வேண்டும் உங்களுக்கு?
எஸ்யூவி, குவாட்ரிசைக்கிள், ஸ்கூட்டர், ஹேட்ச்பேக்... எது வேண்டும் உங்களுக்கு?

நான் ஏற்கெனவே மஹிந்திராவின் XUV 500 கார் வைத்திருந்தேன். தற்சமயம் ஹூண்டாய் க்ரெட்டாவைப் பயன்படுத்துகிறேன். இப்போது புதிதாக 7  சீட்டர் எம்பிவி  ஒன்று வாங்கும் எண்ணத்தில் உள்ளேன். நாங்கள் இருவரும் சராசரியாக மாதத்துக்கு 1000 - 1500 கி.மீ வரை பயணிக்கக்கூடியவர்கள். நாங்கள் வசிப்பது ஒரு சிறிய கிராமம் என்பதால், பெரிய ஊருக்கு என்றால் 5 கி.மீயும் - நகரம் என்றால் 60 கிமீ முதல் 150 கிமீ தூரமும் செல்லவேண்டியிருக்கும். நான் டொயோட்டா இனோவா வாங்கலாமா அல்லது மஹிந்திரா மராத்ஸோ வாங்கலாமா? இதே மாதிரி வேறு வாகனங்கள் இருக்கின்றனவா? பல சமயங்களில் நானும், சில சமயங்களில் ஓட்டுநரும் காரை ஓட்டுவோம். - பெயர் சொல்ல விரும்பாத மோ.வி வாசகர்.

உங்கள் காரின் பட்ஜெட்டை நீங்கள் குறிப்பிடாவிட்டாலும், தேவைகளைத் தெளிவாகச் சொல்லிவிட்டீர்கள். எனவே, நீங்கள் ஏற்கெனவே பயன்படுத்திய கார்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, மஹிந்திரா மராத்ஸோ நல்ல சாய்ஸாக இருக்கும். இது நீங்கள் வைத்திருந்த கார்களுடன் ஒப்பிடும்போது ஏறக்குறைய அதே சைஸில் இருப்பதால், நகரத்தில் ஒரு பெரிய காரை ஓட்டும் உணர்வு ஏற்படாது. க்ராஷ் டெஸ்ட்டில் மராத்ஸோ 4 ஸ்டார் ரேட்டிங் வாங்கியிருப்பதுடன், 7/8 சீட் ஆப்ஷன்களுடனும் கிடைக்கிறது. இதில் தேவையான சிறப்பம்சங்கள் மற்றும் இடவசதி, மனநிறைவைத் தரும் பர்ஃபாமன்ஸ் மற்றும் மைலேஜ், சிறப்பான தரம் மற்றும் டிசைன் என ஆல்ரவுண்டர் பேக்கேஜாக அசத்துகிறது. ஆனால், உங்கள் காரின் மாதாந்தரப் பயன்பாடு சராசரியாகவே இருப்பதால், மாருதி சுஸூகி எர்டிகாவின் பெட்ரோல் மாடலையும் நீங்கள் பரிசிலிக்கலாம். இது மராத்ஸோவைவிட விலை குறைவு என்றாலும், நல்ல சாய்ஸ்தான். 

புதிதாக கார் வாங்கும் முடிவில் இருக்கிறேன். பெட்ரோல் மாடல்தான் வேண்டும். டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV 300, ஹூண்டாய் எலீட் i20 ஆக்டிவ் ஆகியவற்றில் எதை வாங்கலாம்? - என். வேல்மாணிக்கம். 

காம்பேக்ட் எஸ்யூவி/க்ராஸ் ஓவர் வகை கார்களை நீங்கள் விரும்புவது தெரிகிறது. ஆனால், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வாகனங்களின் பெட்ரோல் மாடல்கள், டீசல் மாடலுடன் ஒப்பிடும்போது குறைவான மைலேஜையே தருகின்றன என்பதை நினைவில்கொள்ளவும். இருப்பினும் உங்கள் தேவைகளை வைத்துப் பார்க்கும்போது, ஹூண்டாய் புதிதாக வெளியிடப்போகும் venue காம்பேக்ட் எஸ்யூவிக்காக நீங்கள் காத்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. இதில் வழக்கமான 1.4 லிட்டர் பெட்ரோல்/டீசல் இன்ஜின் தவிர, 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினும் வரப்போகிறது. ஒருவேளை நீங்கள் சொல்லிய கார்களில் ஒன்றை தேர்வுசெய்வதாக இருந்தால், XUV 3OO நல்ல சாய்ஸாக இருக்கும். ஏறக்குறைய இதே விலைதான் என்பதால், எக்கோபூஸ்ட் இன்ஜினுடன் வரக்கூடிய ஃபோர்டு எக்கோஸ்போர்ட்டையும் நீங்கள் பரிசீலிக்கலாம்.

ரெனோ க்விட் காரே 2.75 லட்சம் ரூபாய்க்குக் கிடைக்கும்போது, பஜாஜின் சிறிய குவாட்ரிசைக்கிள் வகை வாகனமும் ஏறத்தாழ அதே விலைக்கு வெளிவந்திருக்கிறது. இதன் விலை ரொம்ப அதிகமோ... இதன் விற்பனை எப்படி இருக்கும்? - வாசு, இமெயில். 

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ரெனோ க்விட் காரின் சென்னை எக்ஸ்ஷோரூம் விலையே 2.72 லட்சம் ரூபாயில் இருந்துதான் தொடங்குகிறது. எனவே, நீங்கள் காரை வாங்கும்போது இதன் விலை 3.4 லட்சம் ரூபாயை நெருங்கியிருக்கும். 2.63 லட்சம் ரூபாய்க்கு வெளிவந்திருக்கும் பஜாஜ் க்யூட், மூன்று சக்கர வாகனங்களுக்கான மாற்றாக பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. மேலும், வர்த்தகரீதியிலான நகர்ப்புறப் பயன்பாட்டை மனதில்வைத்து தயாரிக்கப்பட்டுள்ளதால், இதில் காற்றுப்பைகள் - ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு வசதிகள் இல்லை என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். எனவே, இது குறைவான பராமரிப்புச் செலவுகள், நல்ல மைலேஜ், எளிதான ஓட்டுதல், பன்முகத்திறன் ஆகியவற்றில் அசத்தினாலும், காருக்கு பதில் இது சரியாக இருக்கும் எனச் சொல்ல முடியாது.

நான் எனது பணிநிமித்தமாக, ஸ்கூட்டரில் துணி பண்டல்களை பின் சீட்டிலும், கால் வைக்கும் இடத்திலும் வைத்து எடுத்துச் செல்லவேண்டியிருக்கும். தற்போது புதிதாக ஸ்கூட்டர் வாங்க முடிவெடுத்துள்ளேன். எனக்கு அதிக மைலேஜ், நீடித்த ஆயுள் ஆகியவை முக்கியம். ஹோண்டா ஆக்டிவா 5G அல்லது சுஸுகி ஆக்ஸஸ் 125 ஆகிய இரண்டில் எதை வாங்கலாம்? எனக்கு மிகவும் குழப்பமாக உள்ளது. - பாலாஜி, இமெயில்.

 உங்கள் தேவைகளை வைத்துப் பார்க்கும்போது, நீங்கள் குறிப்பிட்டதில் ஹோண்டா ஆக்டிவா நல்ல சாய்ஸாக இருக்கும். ஒவ்வொரு மாதமும் 2.5 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனையாவதன் அடிப்படையில், இதன் மீதான நம்பகத்தன்மை & தரம் - பிராண்டு & ரீசேல் மதிப்பு ஆகியவற்றைப் புரிந்துகொள்ளலாம். இது முழுக்க மெட்டல்பாடியைக் கொண்டுள்ளதால், ஸ்கூட்டரின் கட்டுமானம் அவ்வளவு எளிதாக உருக்குலையாது. மேலும், நீண்ட நாள்களாக விற்பனையில் இருக்கும் வாகனம் என்பதால், இதன் உதிரிபாகங்களை எளிதாக வாங்க முடியும். தவிர, எந்த மெக்கானிக்காக இருந்தாலும் இதை எளிதாகப் பழுதுபார்க்க முடியும் என்பது ப்ளஸ். ஆக்ஸஸைவிட இதன் விலையும் குறைவு என்றாலும், அதிக பவர் - குறைந்த  எடை - சிறப்பான ஓட்டுதல் மற்றும் சொகுசு ஆகியவற்றில் சுஸூகி ஆக்ஸஸ்தான் முன்னிலை வகிக்கிறது. ஆனால், இதன் முன்பக்க பாடி பிளாஸ்டிக்காலும், பின்பக்கம் மெட்டல்பாடியையும் கொண்டுள்ளது.

என்னுடைய பட்ஜெட் 10  லட்சம் ரூபாய். எனவே, டாப் வேரியன்ட்தான் வேண்டும். காரின் பர்ஃபாமன்ஸ் சிறப்பாகவும், அதன் தோற்றம் யூத்ஃபுல்லாகவும் இருக்க வேண்டும். என்னுடைய சாய்ஸ் ஹூண்டாய் எலீட் i20; இது சரியானதா என்பதுடன் இதற்கு நிகரான காரை கூறவும். - திராவிடமணி அமுதா, இமெயில்.

உங்கள் தேவைகளை வைத்துப் பார்க்கும்போது, நீங்கள் குறிப்பிட்ட ஹூண்டாய் எலீட் i20 நல்ல தேர்வுதான். ஆனால், உங்களுக்குத் தேவையானது பெட்ரோலா டீசலா என்பதை நீங்கள் குறிப்பிடவில்லை. எனவே, மாதத்துக்கு 2,000 கி.மீ-க்குமேல் காரைப் பயன்படுத்துவீர்கள் என்றால் மட்டுமே, டீசல் மாடலை வாங்கவும். இல்லையெனில், பெட்ரோல் மாடலே போதுமானது. தோராயமாக இதே விலையில் கிடைக்கும் மாருதி சுஸூகி பெலினோ பேஸ்லிஃப்ட் காரையும் நீங்கள் பரிசிலிக்கலாம். இதில் பர்ஃபாமன்ஸ் விரும்பிகளுக்கான RS மாடல் கிடைப்பது ப்ளஸ்.

என்னிடம் பஜாஜ் பல்ஸர் 150சிசி பைக் இருக்கிறது. அதை நான் இந்தியாவுக்கு வரும் சமயத்தில் மட்டுமே (ஆண்டுக்கு ஒரு மாதம்) உபயோகப்படுத்துவேன். மீதமிருக்கும் 11 மாதங்களும் வீட்டில்தான் பைக் நிற்கும். எனவே, அதைப் பராமரிப்பது எப்படி? - மஹம்மது ஆரிஃப், அபுதாபி.

முதலில் டேங்க்கில் இருக்கும் பெட்ரோலை முழுவதுமாக இறக்கிவிடவும். பிறகு கார்புரேட்டர் - ஃப்யூல் லைனில் இருக்கும் பெட்ரோலையும் வெளியே எடுத்துவிட வேண்டும். பேட்டரி கனெக்‌ஷனை எடுத்துவிட்ட பிறகு, நிழலான இடத்தில் பைக்கை மெயின் ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிடவும். அதேபோல, டயர்களுக்கு அடியே பவுடரைத் தூவிவிட வேண்டும். மிகவும் முக்கியமாக, பைக்குக்கு கவர் போட்டுவிடுவது நலம். ஒருவேளை இது சாத்தியமில்லை என்றால், தினசரி பைக்கை ஸ்டார்ட் செய்துவிட்டு, ஐந்து நிமிடம் ஓடவிடலாம். 

 எனக்கு 9 சீட்டர் கார் வேண்டும். மஹிந்திராவின் TUV 3OO ப்ளஸ் காரை டெஸ்ட் டிரைவ் செய்துபார்த்தேன். அது எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால், இந்த காரை சாலைகளில் அதிகமாகப் பார்க்க முடியவில்லையே! எனவே, இந்த காரில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? இதை வாங்குவது நல்ல சாய்ஸாக இருக்குமா? உங்களுடைய பதிலுக்காகக் காத்திருக்கிறேன். - மிதுன், இமெயில்.

உங்கள் தேவைகளை நீங்கள் குறிப்பிடாவிட்டாலும், எம்பிவி வேண்டும் என்பது தெளிவாகிறது. டாக்ஸி மற்றும் சிறுநகர/கிராமப்புற பயன்பாட்டை மனதில்வைத்துத் தயாரிக்கப்பட்டிருக்கும் TUV 3OO ப்ளஸ், ஸைலோவுக்கு மாற்றாக பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. எனவே, இது இடவசதிமிக்க வாகனமாக இருந்தாலும், கடைசி வரிசை இருக்கையில் எந்தப் பாதுகாப்பு அம்சங்களும் இல்லாதது பெரிய மைனஸ். மேலும், இதன் டிசைன் அனைவருக்கும் பிடிக்குமா என்பது சந்தேகமே. இதனால்தான் காரின் விற்பனை மஹிந்திரா எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, கிட்டத்தட்ட இதே விலையில் கிடைக்கும் மாருதி சுஸூகி எர்டிகா அல்லது மஹிந்திரா மராத்ஸோ ஆகிய கார்களை நீங்கள் பரிசீலிக்கலாம்.