Published:Updated:

பிரெஸ்ஸா, XUV3OO, நெக்ஸான், எக்கோஸ்போர்ட் பீ கேர்ஃபுல்... வருகிறது ஹூண்டாய் Venue..!

இந்த மாதம் 17-ம் தேதி தொடங்கும் நியூயார்க் இன்டர்நேஷனல் ஆட்டோ ஷோவில் Venue அதிகாரப்பூர்வமாக அறிமுகமாக உள்ளது. அதேநாளில் இந்தியாவிலும் இது வெளிவரும் என்பதுடன், இந்த காம்பேக்ட் எஸ்யூவிக்கான ஆன்லைன் புக்கிங்கும் தொடங்கிவிடும்!

பிரெஸ்ஸா, XUV3OO, நெக்ஸான், எக்கோஸ்போர்ட் பீ கேர்ஃபுல்... வருகிறது ஹூண்டாய் Venue..!
பிரெஸ்ஸா, XUV3OO, நெக்ஸான், எக்கோஸ்போர்ட் பீ கேர்ஃபுல்... வருகிறது ஹூண்டாய் Venue..!

2016-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹூண்டாய் காட்சிப்படுத்திய காம்பேக்ட் எஸ்யூவி டிசைன் கான்செப்ட்தான், கார்லினோ. QXi என்ற குறியிட்டுப் பெயரைக்கொண்ட இது, தற்போது இறுதிக்கட்ட டெஸ்ட்டிங்கில் உள்ளது. Venue எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த காம்பேக்ட் எஸ்யூவியை, இன்னும் சில மாதங்களில் விற்பனைக்குக் கொண்டுவர இருக்கிறது ஹூண்டாய். இதன் டீசர் மற்றும் அதிகாரபூர்வமற்ற படங்கள் இணைய உலகில் வைரலாகப் பரவிவரும் நிலையில், மேலும் சில ஸ்பை படங்கள் கிடைத்திருக்கின்றன. கார் டெஸ்ட்டிங்கில் இருக்கும்போது அதைப் படம்பிடித்திருக்கிறார்கள், மோ.வி வாசகர்களான விக்னேஷ் மற்றும் ஷெரின். Venue-வில் என்ன இருக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.

டிசைன் மற்றும் வசதிகள்

தனது முதல் காம்பேக்ட் எஸ்யூவியை, லேட்டஸ்ட் டிசைன் கோட்பாடுகளின்படி வடிவமைத்திருக்கிறது ஹூண்டாய். இந்த நிறுவனத்தின் கோனா, சான்டா ஃபீ, Pallisade மற்றும் டாடா ஹேரியர் ஆகிய எஸ்யூவிகளைப்போல, காரின் முன்பக்கத்தில் LED DRL மேலேயும் - புரொஜெக்டர் ஹெட்லைட்கள் கீழேயும் உள்ளன. அகலமான க்ரோம் கிரில், Diffuser உடனான பம்பர்கள், ரூஃப் ரெயில், டைமண்ட் கட் அலாய் வீல், LED டெயில் லைட்ஸ் இருக்கின்றன. காரின் பக்கவாட்டுப் பகுதியில் கதவு பில்லர்கள் மற்றும் ஜன்னல்களின் வடிவமைப்பு, க்ரெட்டாவை நினைவுபடுத்தும்படி அமைந்திருக்கின்றன. இது பாக்ஸ் போன்ற Venue-க்கு நிச்சயம் பிளஸ்தான். மற்ற ஹூண்டாய் கார்களைப்போலவே இந்த காம்பேக்ட் எஸ்யூவி-யிலும் அதிகப்படியான வசதிகளை எதிர்பார்க்கலாம். Tilt & Telescopic ஸ்டீயரிங் வீல் அதற்கான முதல் உதாரணம். 

ஸ்பை படங்களைப் பார்க்கும்போது ஆண்டிராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உடனான டச் ஸ்கிரீன், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, கலர் MID உடனான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பலவித கன்ட்ரோல்களுடன்கூடிய புதிய லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல், புஷ் பட்டன் ஸ்டார்ட், இண்டிகேட்டர்கள் மற்றும் எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் உடனான ரியர் வியூ மிரர்கள், ரிவர்ஸ் கேமரா எனப் பட்டியல் நீள்கிறது. விலை அதிகமான க்ரெட்டாவிலேயே டிஸ்க்/டிரக் பிரேக் சிஸ்டம்தான் இருக்கும் நிலையில், Venue-வில் நான்கு வீல்களுக்கும் டிஸ்க் பிரேக் உள்ளது.

XUV 300-க்குப் போட்டியாக, இந்த காம்பேக்ட் எஸ்யூவியின் டாப் வேரியன்ட்டில் முன்பக்க வென்டிலேட்டட் சீட்கள், சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங், க்ரூஸ் கன்ட்ரோல், 7 காற்றுப்பைகள் போன்ற ப்ரீமியம் வசதிகள் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம். MG Hector போலவே இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திலும் எக்கச்சக்க அம்சங்கள் இருக்கின்றன. காரின் கறுப்பு நிற டேஷ்போர்டின் சென்டர் கன்சோலில், Floating பாணியில் டச் ஸ்க்ரீன் வைக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டில் சில்வர் நிற வேலைப்பாடுகள், ஃபிட் அண்டு ஃபினிஷ், மெட்டீரியல்களின் தரம் ஆகியவை நீட் & நைஸ். முன்பக்கம் & பின்பக்கம் என இரண்டு சீட்களிலும் ஆர்ம்ரெஸ்ட் உண்டு. ஸ்டோரேஜ் ஸ்பேஸும் பக்கா. 2 காற்றுப்பைகள், ஏபிஎஸ், பார்க்கிங் சென்சார்கள் ஸ்டாண்டர்டு.  

இன்ஜின் - கியர்பாக்ஸ்

ஹூண்டாயின் காம்பேக்ட் எஸ்யூவியில் 100bhp பவர் & 17.2kgm டார்க்கை வெளிப்படுத்தும் புதிய 1.0 லிட்டர் - 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தவிர, வெர்னாவில் இருக்கும் 1.4 லிட்டர் - 4 சிலிண்டர் பெட்ரோல்/டீசல் இன்ஜின்கள் என மொத்தம் மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கும். இதில் இரண்டு பெட்ரோல் இன்ஜின்களும் ஒரே பவரை வெளிப்படுத்தினாலும், எதிர்பார்த்தபடியே டர்போ பெட்ரோல் இன்ஜினின் டார்க் மற்றும் மிட் ரேஞ்ச் பர்ஃபாமன்ஸ் சிறப்பாக இருக்கும் எனத் தெரிகிறது. எலீட் i20 மற்றும் க்ரெட்டாவில் ஏற்கெனவே பலருக்குப் பழக்கமான 1.4 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின், ஸ்மூத்தான செயல்திறனுக்குப் பெயர்பெற்றது.  1.4 லிட்டர் NA இன்ஜின்கள் இரண்டுமே, 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளன.

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் - 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் கூட்டணியுடன் களமிறங்கும். ஹூண்டாயின் இந்திய வரலாற்றில் இது முதல் DCT என்பதுடன், காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வரும் ஒரே கார், Venue-தான். ஃபோர்டு எக்கோஸ்போர்ட்டின் பேஸ்லிஃப்ட்டுக்கு முந்தைய மாடலின் எக்கோபூஸ்ட் வெர்ஷனில், ட்வின் க்ளட்ச் கியர்பாக்ஸ் ஆப்ஷனைக்கொண்டிருந்தது. 

விலை மற்றும் புக்கிங் விவரங்கள்

இந்த மாதம் 17-ம் தேதி தொடங்கும் நியூயார்க் இன்டர்நேஷனல் ஆட்டோ ஷோவில் இந்த கார் அதிகாரபூர்வமாக அறிமுகமாக உள்ளது. அதே நாளில் இந்தியாவிலும் இது வெளிவரும் என்பதுடன், ஆன்லைன் புக்கிங்கும் தொடங்கிவிடும் எனத் தெரிகிறது. நம் ஊரின் போட்டிமிகுந்த இந்திய கார் சந்தையில், மே மாதத்தில் உத்தேசமாக 7.5 லட்சம் -  11 லட்சம் விலையில் Venue விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஃபோர்டு எக்கோஸ்போர்ட், மஹிந்திரா XUV 300 ஆகிய காம்பேக்ட் எஸ்யூவிகளுக்கு கடும் போட்டி காத்திருக்கிறது. என்றாலும் காரின் தொழில்நுட்பம், வசதிகள், இன்ஜின் ஆப்ஷன்களை வைத்துப் பார்க்கும்போது, Venue-வின் விலை எக்கோஸ்போர்ட் மற்றும் XUV 3OO ஆகிய காம்பேக்ட் எஸ்யூவி-களுக்கு நெருக்கமாக இருக்கும் எனத் தோன்றுகிறது.