Published:Updated:

டூப்ளிகேட் RC வேண்டுமா? பல்ஸர் VS R15, ஹேட்ச்பேக் VS செடான்... கேள்வி பதில்!

ஹோண்டா WR-V தவிர மற்ற அனைத்து மாடல்களிலுமே, பெட்ரோல் இன்ஜினில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இருக்கிறது. டாடா நெக்ஸான் மற்றும் மாருதி சுஸூகி டிசையரில் AMT இருந்தால், தனது பிரிமியம் ஹேட்ச்பேக் பொசிஷனிங்குக்கு ஏற்ப பெலினோவில் CVT உள்ளது.

டூப்ளிகேட் RC வேண்டுமா? பல்ஸர் VS R15, ஹேட்ச்பேக் VS செடான்... கேள்வி பதில்!
டூப்ளிகேட் RC வேண்டுமா? பல்ஸர் VS R15, ஹேட்ச்பேக் VS செடான்... கேள்வி பதில்!

கடந்த மூன்று ஆண்டுகளாக, மாருதி சுஸூகி ஆல்டோ காரைப் பயன்படுத்தி வருகிறேன். தற்போது 15 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில், புதிதாக மிட்சைஸ் செடான் ஒன்றை வாங்கலாம் என முடிவுசெய்துள்ளேன். எனக்கு பாதுகாப்பு வசதிகள், மைலேஜ், பராமரிப்புச் செலவுகள், சொகுசு ஆகியவை மிகவும் முக்கியம். எந்த காரை வாங்கலாம்?  - அருள் லாரன்ஸ், சென்னை. 

உங்கள் தேவைகளை வைத்துப் பார்க்கும்போது, ஹூண்டாய் வெர்னா - மாருதி சுஸூகி சியாஸ் - ஹோண்டா சிட்டி ஆகிய செடான்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வுசெய்யலாம். ஆனால், உங்களுக்கு பெட்ரோல்/டீசல் மாடல்களில் எது வேண்டும் என்பதை நீங்கள் சொல்லவில்லை. இருப்பினும், உங்கள் காரின் மாதாந்தரப் பயன்பாடு 2000-2500 கிமீ முதல் இருந்தால் மட்டுமே டீசல் காரை வாங்கவும். இல்லையெனில், பெட்ரோல் காரே போதுமானது.

முன்பு சொன்ன கார்களில் உங்களுக்கு பெட்ரோல் மாடல் வேண்டுமென்றால் ஹோண்டா சிட்டியையும், டீசல் மாடல் என்றால் ஹூண்டாய் வெர்னாவையும் டிக் அடிக்கலாம். கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க மிட்சைஸ் செடான் வேண்டுமென்றால், மாருதி சுஸூகி சியாஸைப் பரிசீலிக்கலாம்.

ஹோண்டா ஷைன் பைக்கில் இருக்கும் 125சிசி இன்ஜின், Optimax என்ற பெயரைக்கொண்டுள்ளது. அதன் அர்த்தம் என்ன? எங்கு தேடியும் அதற்கான பதில் கிடைக்கவில்லை. டிசைன் பொறியாளரான நான், எனது திறமையை மற்றவர்களுக்கு எப்படி எடுத்துரைப்பது? தவிர, கஸ்டமைசேஷன் செய்யப்பட்ட பைக்குக்கு அனுமதி வாங்குவது எப்படி?  - ஆ. பிரதீப், இமெயில். 

Optimax இன்ஜின் என்பது, அதன் பெயருக்கு ஏற்ப பர்ஃபாமன்ஸ் மற்றும் மைலேஜை சரிசமமான விதத்தில் ரைடருக்கு வழங்குவது. எனவே, இந்த 125சிசி இன்ஜின் அதற்கேற்ப டியூன் செய்யப்பட்டிருக்கும் என்பது, ஹோண்டா ஷைனை ஓட்டியவர்களுக்குத் தெரியும். உங்களுக்கு Adobe, CFD, Catia, Ansys, Pro-E, Solid Works Auto Cad போன்ற டிசைன் சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்தத் தெரியுமெனில், அதைப் பயன்படுத்தி வரையப்பட்ட கார் பாகங்கள் / கார் மாடல்களை நீங்கள் மற்றவர்களுக்குக் காட்டலாம். அதில் உங்களின் கையொப்பம் வித்தியாசமான பாணியில் இருப்பதை உறுதிசெய்யவும். கஸ்டமைசேஷன் செய்யப்பட்ட எந்தவிதமான வாகனத்தையுமே முன்பதிவு செய்வது என்பது சட்டவிரோதமானது.

நான்கு ஆண்டுகளாக, மாருதி சுஸூகி வேகன்-ஆர் காரைப் பயன்படுத்திவருகிறேன். தற்போது ப்ரீமியம் ஹேட்ச்பேக்/காம்பேக்ட் செடான் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுக்கு அப்கிரேடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். அது ஐந்து பேருக்கு (3 Adult, 2 Children) ஏற்ற சொகுசான இடவசதியைக் கொண்டிருப்பது அவசியம். எனக்கு பெட்ரோல் - ஆட்டோமேட்டிக் மாடலே தேவை என்பதால், மைலேஜ் ஒரு குறையில்லை. ஆனால், அது நெடுஞ்சாலைகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படும். எனவே, அதிக பாதுகாப்பு வசதிகள் மற்றும் குறைவான பராமரிப்புச் செலவுகளை அந்த கார் கொண்டிருக்க வேண்டும். மாருதி சுஸூகி டிசையர்/பெலினோ, டாடா நெக்ஸான். ஹோண்டா WR-V ஆகியவற்றில் எதை வாங்கலாம்? இதில் எதைத் தேர்வுசெய்வது என்பதில் எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. - பாலமுருகன், சேலம். 

நீங்கள் குறிப்பிட்ட மாடல்களில் ஹோண்டா WR-V தவிர மற்ற அனைத்து மாடல்களிலுமே, பெட்ரோல் இன்ஜினில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இருக்கிறது. டாடா நெக்ஸான் மற்றும் மாருதி சுஸூகி டிசையரில் AMT இருந்தால், தனது ப்ரீமியம் ஹேட்ச்பேக் பொசிஷனிங்குக்கு ஏற்ப பெலினோவில் CVT உள்ளது. க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் சேஃப்ட்டி ரேட்டிங் வாங்கிய நெக்ஸான் நல்ல சாய்ஸாகத் தெரிந்தாலும், போட்டியாளர்களைவிட அதன் மைலேஜ் குறைவாகவே இருக்கிறது. தவிர, AMT கியர்பாக்ஸும் பெஸ்ட் எனச் சொல்ல முடியாது. ஏற்கெனவே நீங்கள் மாருதி சுஸூகி கார்களுக்குப் பழக்கப்பட்டுவிட்டதால், பெலினோ அல்லது டிசையர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்வுசெய்யலாம். இரண்டுமே ஒரே Heartect பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படுவதால், இவற்றில் இருப்பது ஒரே பெட்ரோல் இன்ஜின்தான் (1.2 K-சீரிஸ்). எனவே, காரின் வடிவமைப்பு மற்றும் எடையில் கொஞ்சம் வித்தியாசம் இருப்பதால், மைலேஜில் சிறிய வேறுபாடு இருக்கலாம். வசதிகள் மற்றும் விலையில் இரண்டுமே சமநிலை வகிக்கின்றன. கொஞ்சம் காத்திருக்க முடியும் என்றால், ஹூண்டாய் களமிறக்கப்போகும் Venue காம்பேக்ட் எஸ்யூவி/டாடா அல்ட்ராஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக் ஆகிய கார்களைக்கூட நீங்கள் பரிசீலிக்கலாம். 

தொழில் நிமித்தமாக ஐஷர் லோடு கேரியர் லாரியைப் பயன்படுத்திவருகிறேன். அதன் RC புக்கைத் தொலைத்துவிட்டேன். தற்போது RTO அலுவலகத்தில் டூப்ளிகேட் RC புக் பெறுவது எப்படி? என்னென்ன ஆவணங்கள் அதற்கு வேண்டும்? - விக்கி, ஃபேஸ்புக்.

உங்கள் வாகனம் முன்பதிவு செய்யப்பட்ட RTO அலுவலகத்துக்குச் சென்று, அங்கே `Form 26' படிவத்தை வாங்கி நிரப்பவும். அதனுடன் Original முதல் தகவல் அறிக்கை (FIR), வாகனத்தின் இன்ஷூரன்ஸ் Copy, மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் Copy, வீட்டு முகவரிக்கான சான்று Copy, போக்குவரத்துக் காவல்துறை மற்றும் Enforcement Wing-இடமிருந்து கமர்ஷியல் வாகனங்களுக்காக வழங்கப்படும் Challan Clearence, கமர்ஷியல் வாகனத்துக்கான Tax Clearence, பான் கார்டு Copy ஆகியவை இணைத்துக் கொடுக்கவும். இதற்காக 50 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை வாகனத்தின் திறன் மற்றும் வகைக்கு ஏற்ப தொகை வசூலிக்கப்படும். 

எனது பட்ஜெட் 1.5 லட்சம் ரூபாய். நீண்ட தூரப் பயணங்களுக்கு ஏற்புடைய பைக் ஒன்றை வாங்க விரும்புகிறேன். அதில் ஏபிஎஸ் இருப்பது அவசியம். பஜாஜ் பல்ஸர் NS200, யமஹா YZF-R15 V3.0 ஆகியவற்றில் எதை வாங்கலாம்? - முத்து, காஞ்சிபுரம்.

நீங்கள் குறிப்பிட்ட இரண்டுக்குமே லிக்விட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் - Twin Spar ஃப்ரேம் - டெலிஸ்கோபிக் ஃபோர்க்/மோனோஷாக் சஸ்பென்ஷன் - இருபுறமும் டிஸ்க் பிரேக்ஸ் & டியூப்லெஸ் டயர்கள் என, பல ஒற்றுமைகள் இருக்கின்றன. ஏப்ரல் 1 முதலாக, 125சிசி-க்கும் அதிகமான பைக்குகளில் ஏபிஎஸ் கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. உங்கள் பட்ஜெட்டைவிட அதிக விலையில் கிடைக்கும் YZF-R15 V3.0 பைக்கில் ஃபுல் ஃபேரிங், ஸ்லிப்பர் கிளட்ச், அலுமினியம் ஸ்விங் ஆர்ம், அகலமான பின்பக்க டயர், டூயல் சேனல் ஏபிஎஸ், LED ஹெட்லைட்ஸ், டிஜிட்டல் மீட்டர், VVA தொழில்நுட்பம் போன்ற அதிக வசதிகள் இருக்கின்றன. என்றாலும் இதன் ஸ்போர்ட்டியான ரைடிங் பொசிஷன், அனைவருக்கும் நீண்ட நேர/தூரப் பயணங்கள் செய்வதற்கு ஏற்றபடி இருக்குமா என்பது சந்தேகமே.

மேலும் இதன் பராமரிப்புச் செலவுகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்பதை நினைவில்கொள்ளவும். இங்குதான் பஜாஜ் பல்ஸர் NS200 முன்னிலை பெறத் தொடங்குகிறது. கூடுதல் செயல்திறன்மிக்க 200சிசி இன்ஜின் இதன் பெரிய ப்ளஸ் என்பதுடன், விலை மற்றும் பராமரிப்புச் செலவுகளில் இது யமஹாவைவிடக் குறைவு. ஆனால், இதன் அதிக எடை மற்றும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ், சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். எனவே, டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டு முடிவெடுக்கவும்.