Published:Updated:

க்ரெட்டா VS வென்யூ... எந்த ஹூண்டாய் எஸ்யூவி பெஸ்ட்?!

காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் DCT கொண்ட ஒரே காராக வென்யூ திகழ்கிறது. இந்த நிறுவனத்தின் Bluelink Infotainment System, முதன்முறையாக இந்த காம்பேக்ட் எஸ்யூவி-யில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

க்ரெட்டா VS வென்யூ... எந்த ஹூண்டாய் எஸ்யூவி பெஸ்ட்?!
க்ரெட்டா VS வென்யூ... எந்த ஹூண்டாய் எஸ்யூவி பெஸ்ட்?!

எத்தனை காலம்தான் ஒரு புதிய காரை ஸ்பை படங்கள், வீடியோக்கள், டீசர்களில் மட்டுமே பார்ப்பது? ஆம், பலரின் நீண்டகால காத்திருப்புக்கான விடையாக, கடந்த ஏப்ரல் 17-ம் தேதி MV Angriya - Cruise Shipல் தனது வென்யூ (Venue) காம்பேக்ட் எஸ்யூவி-யை, இந்தியாவில் வித்தியாசமான முறையில் அறிமுகப்படுத்தியது ஹூண்டாய். உலகளவில் இந்த நிறுவனத்தின் சிறிய சைஸ் எஸ்யூவி-யான இது, நம் ஊரில் விட்டாரா பிரெஸ்ஸா - நெக்ஸான் - XUV 3OO - எக்கோஸ்போர்ட் ஆகிய கார்களுடன் போட்டியிடுகிறது. கார் ஆர்வலர்களுக்கு ஹூண்டாயின் முதல் காம்பேக்ட் எஸ்யூவி-யில் என்ன இருக்கும் என்பது ஓரளவுக்குத் தெரியும் என்றாலும், ஒரு சாமான்ய கார் வாடிக்கையாளருக்கு இது, குட்டி க்ரெட்டா போலவே தெரியும்! காம்பேக்ட் எஸ்யூவி ப்ரியர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களையும் வென்யூ கொண்டிருப்பதால், க்ரெட்டா எந்த மாதிரியான மக்களைக் கவரும்? எனவே, ஹூண்டாயின் எஸ்யூவி-களில் ஒன்றை வாங்கும் முடிவில் இருப்பவர்களுக்கு, இந்தக் கட்டுரை பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். 

டிசைன் மற்றும் சைஸ்

க்ரெட்டா VS வென்யூ... எந்த ஹூண்டாய் எஸ்யூவி பெஸ்ட்?!

4 மீட்டருக்கு உட்பட்ட காம்பேக்ட் எஸ்யூவி-யாக இருப்பதால், எதிர்பார்த்தபடியே மிட் சைஸ் எஸ்யூவி-யான க்ரெட்டாவைவிட சிறிதாகக் காட்சியளிக்கிறது வென்யூ. எனவே, இரண்டையும் அருகருகே நிற்கவைத்துப் பார்க்கும்போது, வென்யூவைவிட 275மி.மீ அதிக நீளம் - 10மி.மீ அதிக அகலம் - 75மி.மீ அதிக உயரம் - 90மி.மீ அதிக வீல் பேஸைக்கொண்டுள்ளது க்ரெட்டா. எனவே, மேலோட்டமாகப் பார்க்கும்போதே, வென்யூவைவிட க்ரெட்டா அதிக இடவசதியைக்கொண்டிருக்கும் என்பது தெளிவாகிறது. தனது காம்பேக்ட் எஸ்யூவி-யின் பூட் ஸ்பேஸ் மற்றும் கிரவுண்டு க்ளியரன்ஸ் குறித்த விவரங்களை ஹூண்டாய் இன்னும் வெளியிடவில்லை. இந்த நிறுவனத்தின் லேட்டஸ்ட் டிசைன் கோட்பாடுகள்படி வென்யூ வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விற்பனைக்கு வந்த மாடல் என்பதாலும், அதிக கார்கள் சாலையில் இருப்பதாலும், க்ரெட்டாவின் டிசைன் கொஞ்சம் டல்லடிக்கிறது. 

வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள்

க்ரெட்டா VS வென்யூ... எந்த ஹூண்டாய் எஸ்யூவி பெஸ்ட்?!

இரண்டுமே ஹூண்டாய் கார்கள் என்பதால், வசதிகளில் பஞ்சமில்லை. ஆனால் புதிய மாடல் என்பதால், கிட்டத்தட்ட க்ரெட்டாவில் இருக்கும் பல சிறப்பம்சங்கள் வென்யூவிலும் உள்ளன. இந்த நிறுவனத்தின் Bluelink Infotainment System, முதன்முறையாக இந்த காம்பேக்ட் எஸ்யூவி-யில் அறிமுகப்படுத்தப்படுகிறது. நாளடைவில், வரப்போகும் எலான்ட்ரா மற்றும் டூஸான் பேஸ்லிஃப்ட், புதிய கிராண்டு i10 மற்றும் எக்ஸென்ட் ஆகிய கார்களில் இது வழங்கப்படும். க்ரெட்டாவில் இந்த வசதி இல்லை. எனினும், அடுத்த ஆண்டில் வெளிவரும் புதிய மாடலில் இது நிச்சயமாக இருக்கும். இதில் 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இருந்தால், வென்யூவில் இருப்பதோ, 8 இன்ச் டச் ஸ்க்ரீன். அதேபோல, வென்யூவில் 16 இன்ச் அலாய் வீல்கள் இருந்தால், க்ரெட்டாவில் இருப்பதோ 17 இன்ச் அலாய் வீல்கள்! ஆனால், இரண்டிலுமே LED DRL உடனான புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், Diamond Cut அலாய் வீல்கள், எலெக்ட்ரிக் Sunroof, Cruise கன்ட்ரோல், Wireless மொபைல் சார்ஜிங், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே கனெக்ட்டிவிட்டி, Arkamys ஆடியோ சிஸ்டம், ரியர் ஏசி வென்ட், 6 காற்றுப்பைகள் ஆகியவை பொதுவானவை. எப்படி வென்யூவின் டாப் வேரியன்ட்டில் Bluelink ஸ்டாண்டர்டு அம்சமோ, க்ரெட்டாவின் டாப் வேரியன்ட்டில் Ventillated முன்பக்க சீட்ஸ் மற்றும் 6-Way பவர் அட்ஜஸ்ட் உடனான டிரைவர் சீட் ஆகியவை உண்டு. இதனால் தனது புதிய ஹூண்டாய் எஸ்யூவி-யில் அதிக வசதிகளை எதிர்பார்ப்பவர்கள், Mid வேரியன்ட் க்ரெட்டாவுக்குப் பதிலாக Top வேரியன்ட் வென்யூவை டிக் அடிப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. 

இன்ஜின் - கியர்பாக்ஸ்

க்ரெட்டா VS வென்யூ... எந்த ஹூண்டாய் எஸ்யூவி பெஸ்ட்?!

பெட்ரோல் இன்ஜின்களைப் பொறுத்தவரை, க்ரெட்டாவில் ஒரேயொரு இன்ஜின் ஆப்ஷன்தான். இந்த 1.6 லிட்டர் - 4 சிலிண்டர் VTVT இன்ஜின் (123bhp பவர் - 15.1kgm டார்க்), 6 ஸ்பீடு மேனுவல்/ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. வென்யூவில் இரு வகையான பெட்ரோல் இன்ஜின்கள் வழங்கப்பட்டிருப்பது ப்ளஸ். எலீட் i20 காரில் இருக்கும் அதே 1.2 லிட்டர் Kappa பெட்ரோல் இன்ஜின் (83bhp பவர் - 11.5kgm டார்க்) - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி ஒன்று என்றால், முற்றிலும் புதிய 1.0 லிட்டர் T-GDi டர்போ பெட்ரோல் இன்ஜின் - 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அமைப்பு உண்டு. இந்த 3 சிலிண்டர் இன்ஜினில், கூடுதலாக 7 ஸ்பீடு DCT (Dual Clutch Automatic) ஆப்ஷனும் உண்டு. இது அளவில் சிறிதாக இருந்தாலும், க்ரெட்டாவின் பெரிய 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜினைவிட அதிக டார்க்கை வெளிப்படுத்துகிறது. மேலும், க்ரெட்டாவிலும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (Torque Converter) உண்டு என்றாலும், அது வென்யூவில் இருப்பதுபோன்ற மாடர்ன் கியர்பாக்ஸ் அல்ல. எனவே, காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் DCT கொண்ட ஒரே காராக வென்யூ திகழ்கிறது. 

க்ரெட்டா VS வென்யூ... எந்த ஹூண்டாய் எஸ்யூவி பெஸ்ட்?!

எப்படி வென்யூவில் இரு வகையான பெட்ரோல் இன்ஜின்கள் இருக்கின்றனவோ, அதேபோல க்ரெட்டாவில் இரு டர்போ டீசல் இன்ஜின்கள் உண்டு. 1.4 லிட்டர் CRDi இன்ஜின் - 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணி, 90bhp பவர் - 22kgm டார்க்கைத் தருகிறது. இதே செட்-அப்தான், வென்யூவிலும் வழங்கப்படுகிறது. அளவில் பெரிய 1.6 லிட்டர் CRDi இன்ஜின், 128bhp பவர் - 26kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இது 6 ஸ்பீடு மேனுவல்/ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களைக் கொண்டுள்ளது ப்ளஸ். ஏனெனில், வென்யூவை நீங்கள் டீசல் இன்ஜின்-ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் காம்போவில் இப்போதைக்கு வாங்க இயலாது. இதனால் தனது ஹூண்டாய் டீசல் எஸ்யூவி பவர்ஃபுல்லாக இருக்க வேண்டும் என்பவர்கள், க்ரெட்டாவுக்கு ஓட்டளிப்பதைப் பார்க்கலாம். ஒருவேளை பெட்ரோல் என்றால் நிலை மாறலாம். 

விலை - வேரியன்ட்கள்

க்ரெட்டா VS வென்யூ... எந்த ஹூண்டாய் எஸ்யூவி பெஸ்ட்?!

மே 21, 2019 அன்று தனது முதல் காம்பேக்ட் எஸ்யூவி-யான வென்யூவை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இருக்கிறது ஹூண்டாய். அளவில் சிறிய காரான இது, எதிர்பார்த்தபடியே க்ரெட்டாவைவிட குறைவான விலையிலே அறிமுகமாகும். க்ரெட்டாவின் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைகள் 10-15.65 லட்சம் ரூபாய் என்றளவில் இருக்கும்போது, வென்யூவின் எக்ஸ் ஷோரூம் விலை 8-12 லட்சம் ரூபாயாக இருப்பதற்கான வாய்ப்பிருக்கிறது. சில சந்தர்ப்பங்களில், இரு கார்களின் வேரியன்ட்களும் ஒரே மாதிரியான விலையைக்கொண்டிருக்கும் சூழல் ஏற்படலாம். எனவே, முன்பே சொன்னதுபோலவே க்ரெட்டாவின் மிட் வேரியன்ட் விலையில் வென்யூவின் டாப் வேரியன்ட்டைக்கூட வாங்கும் நிலை வரலாம். ஆனால், டர்போ பெட்ரோல் இன்ஜின் - DCT கூட்டணி, Bluelink சிஸ்டம் என சிறப்பம்சங்களில் வென்யூ அதிரடித்தாலும், பவர்ஃபுல் டீசல் இன்ஜின் - டீசல் மாடலில் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் - அதிக இடவசதி - பெரிய சைஸ் கார் என வரும்போது க்ரெட்டாவைத் தவிர்க்க முடியாது.