Published:Updated:

`4,00,000 சதுர அடி; 5 லட்சம் மின்சார வாகன இலக்கு!’ - ஓசூரில் அமைகிறது பிரமாண்ட தொழிற்சாலை

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஏற்பட்டது. இதன் அடிப்படையில், தமிழகத்தின் ஓசூர் பகுதியில் சுமார் 4,00,000 சதுர அடிக்கு பிரமாண்ட தொழிற்சாலையை நிறுவவுள்ளது ஏத்தெர் எனர்ஜி நிறுவனம்.

ஏத்தெர் எனர்ஜி ஸ்கூட்டர்
ஏத்தெர் எனர்ஜி ஸ்கூட்டர்

இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்திலும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. சமீபத்தில் தமிழக அரசு சார்பில் மின்சார பேருந்துத் திட்டம் தொடங்கப்பட்டது. அதேபோல், மின்சார ஆட்டோ சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனம்
மின்சார வாகனம்

இந்நிலையில் பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஏத்தெர் எனர்ஜி என்னும் மின்சார வாகனம் தயாரிக்கும் நிறுவனம் தமிழகத்தில் பிரமாண்ட தொழிற்சாலையைத் தொடங்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஏற்பட்டது. இதன் அடிப்படையில், தமிழகத்தின் ஓசூர் பகுதியில் சுமார் 4,00,000 சதுர அடிக்கு பிரமாண்ட தொழிற்சாலையை நிறுவவுள்ளது ஏத்தெர் எனர்ஜி நிறுவனம். அடுத்த சில வருடங்களில் இந்நிறுவனம் மேலும் 30 நகரங்களில் தங்களின் தொழிற்சாலைகளை நிறுவுவதற்குத் திட்டமிட்டுள்ளது.

ஏத்தெர் எனர்ஜி நிறுவனம்
ஏத்தெர் எனர்ஜி நிறுவனம்

இந்தப் புதிய நிறுவனம் தொடர்பாகப் பேசிய அந்நிறுவனத்தின் சி.இ.ஓ தருண் மேஹ்தா, ``மின்சார வாகனங்களுக்கான தேவை என்பது வரும் காலங்களில் மிக அதிகமாக இருக்கும். அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய உற்பத்தியைப் பெருக்குவது அவசியம். தமிழகம் ஆட்டோமொபைல் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. பெங்களூருவுக்குப் பக்கத்தில் ஓசூர் இருப்பதால் வசதியாக இருக்கிறது” என்றார்.

புதிய கொள்கைகள்... சலுகைகள்... வேகமெடுக்குமா மின்சார வாகன உற்பத்தி?

இந்தப் புதிய தொழிற்சாலை மூலம் வேலைவாய்ப்பும் உருவாகும் எனக் கூறப்படுகிறது. `அடுத்த 5 ஆண்டுகளில் மின்சார வாகனங்கள் தொடர்பான பயிற்சிபெற்ற திறமைவாய்ந்த 4,000 பணியாளர்கள் தேவைப்படுவார்கள்' என்கிறது ஏத்தெர் நிறுவனம். இந்நிறுவனம் தற்போது ஆண்டுக்கு 35,000 முதல் 40,000 மின்சார ஸ்கூட்டர்களைத் தயாரிக்கிறது. புதிய தொழிற்சாலையின் உற்பத்தி தொடங்கப்பட்டால் ஆண்டுக்கு 5 லட்சம் மின்சார ஸ்கூட்டர்கள் வரை உருவாக்க முடியுமாம்.