Published:Updated:

பொருளாதார மந்தநிலையால் உற்பத்தியைக் குறைக்கும் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள்!

auto mobile
auto mobile ( vikatan )

வாகனங்களின் விற்பனை குறைந்திருப்பதால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தயாரிப்பைக் குறைத்துக்கொள்வது, பணியாளர்களுக்கு கட்டாய விடுமுறை அளிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் தங்களது இழப்பை ஈடுகட்டும் முயற்சியில் ஈடுபடுகின்றன.

இந்தியாவில் தற்போது நிலவிவரும் பொருளாதார மந்தநிலை, ஆட்டோமொபைல் துறையில் கடந்த சில ஆண்டுகளாகப் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியது. தற்போது அந்தப் பாதிப்பு வெகுவாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு, மக்களிடையே பணப்புழக்கம் குறைந்திருப்பது, வாகனங்களுக்கான விலை உயர்வு, அதிகப்படியான சுங்கக்கட்டணம், வாடகைக்கார்களின் பயன்பாடு அதிகரிப்பு எனப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

auto mobile
auto mobile
vikatan

ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட சரிவு, முதலில் வாகன விற்பனையில் ஈடுபடும் டீலர்ஷிப்புகளைப் பாதித்தன. அதனால் கடந்த மூன்று ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகன டீலர்ஷிப்புகள் தமிழகத்தில் மூடப்பட்டன. குறிப்பாக, 60–க்கும் மேற்பட்ட கார் டீலர்ஷிப்புகள் மூடப்பட்டன. இதைச் சரிக்கட்ட வாகனத் தயாரிப்பைக் குறைத்துக்கொள்ளும் நடவடிக்கையில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் இறங்கியுள்ளன.

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தயாரிப்பைக் குறைத்துக்கொள்வது, பணியாளர்களுக்கு கட்டாய விடுமுறை அளிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம், தங்களது இழப்பை ஈடுகட்டும் முயற்சியில் ஈடுபடுகின்றன.

டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் டிவிஎஸ் குழும நிறுவனங்களான சுந்தரம் கிளேட்டன் மற்றும் லூகாஸ் டிவிஎஸ் ஆகியவற்றில், வாகன உற்பத்தி தற்காலிகமாகக் குறிப்பிட்ட தேதிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நிறுவனத்துக்கு வருமான இழப்பைத் தடுப்பது, பணியாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்படுவதைத் தடுப்பது ஆகிய காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

auto mobile
auto mobile
vikatan

ஏற்கெனவே மஹிந்திரா, சுஷூகி, டொயொட்டா அசோக் லேலண்ட் ஆகிய நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைத்துக் கொண்டிருக்கின்றன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜாம்ஷெட்பூர் தொழிற்சாலையில் வணிகப் பயன்பாட்டு வாகனங்களின் உற்பத்தியை இரண்டு நாள்களுக்கு நிறுத்துவதாக அறிவித்தது. அசோக் லேலண்ட் நிறுவனம் கடந்த இரண்டு மாதங்களில் 9 நாள்களுக்கு உற்பத்தியை நிறுத்தியது.

டூ-வீலர் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் தனது தயாரிப்புக்கூடங்களை நான்கு நாள்கள் மூடுவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கிளைட்டான், லூகாஸ் டிவிஎஸ் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புக்கூடத்தில் இரண்டு நாள்களுக்கு உற்பத்தியை நிறுத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

cars
cars
vikatan

இந்த நிறுவனங்கள் அனைத்துமே, வாகனங்களின் தேவைப்பாடு நுகர்வோரிடையே குறைந்திருப்பதையே காரணமாகக் குறிப்பிட்டுள்ளன. பொருளாதார மந்த நிலையே விற்பனைக்குறைவுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. அடுத்து திருவிழா சீசன் தொடங்கவுள்ளதால் வாகன விற்பனை மீண்டெழக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அடுத்த கட்டுரைக்கு