Published:Updated:

டூவீலர்களுக்கு 1,500 முதல் 6,000 வரை தள்ளுபடி... பஜாஜின் மாஸ்டர் பிளான்!

ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் போனஸ் வழங்கப்படுவது போல, தள்ளுபடிகளுடன் ஒவ்வொரு பைக்குக்கும் ஐந்தாண்டுக்கான வாரன்ட்டி மற்றும் கூடுதலாக 2 இலவச சர்வீஸ் ஆகியவையும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

Pulsar NS 160 TD
Pulsar NS 160 TD ( Bajaj Auto )

பண்டிகை காலத்தைக் கருத்தில்கொண்டு, ஏறக்குறைய தான் விற்பனை செய்யும் அனைத்து பைக்குகளுக்கும் (CT 100 பைக்கின் கிக் ஸ்டார்ட் மாடல்கள், V12, V15 தவிர) ஏராளமான தள்ளுபடிகளை அறிவித்திருக்கிறது பஜாஜ் ஆட்டோ. இந்தக் காலத்தில் ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் போனஸ் வழங்கப்படுவது போல, தள்ளுபடிகளுடன் ஒவ்வொரு பைக்குக்கும் ஐந்தாண்டுக்கான வாரன்ட்டி மற்றும் கூடுதலாக 2 இலவச சேவை ஆகியவையும் சேர்க்கப்பட்டிருப்பது (இதன் மதிப்பு தோராயமாக 1,200 ரூபாய்) வரவேற்கத்தக்க அம்சம். கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் பைக் விலைகள் அனைத்தும், சென்னை ஆன் ரோடு விலை. புதிய வாகனங்களின் விற்பனை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் சூழலில், இதுபோன்ற தள்ளுபடிகள் அதைச் சரிவிலிருந்து தாங்கிப்பிடிக்கும் என்றே சொல்லலாம்.

Vikatan

CT 100: KS Spoke, KS Alloy, ES Alloy என மொத்தம் மூன்று வேரியன்ட்களில் இந்த பைக் கிடைக்கிறது. முன்பு சொன்னதுபோலவே, இந்த பைக்கின் கிக் ஸ்டார்ட் கொண்ட மாடல்களின் விலையில் எந்தத் தள்ளுபடியும் கிடையாது! ஆனால் 5 ஆண்டுக்கான வாரன்ட்டி மற்றும் 2 இலவச சர்வீஸ் ஆகியவை கிடைக்கும். எலெக்ட்ரிக் ஸ்டார்ட் கொண்ட மாடலின் விலை 1,500 ரூபாய் குறைந்து, 52,506 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டிருக்கும் 102சிசி இன்ஜின், 7.7bhp பவர் மற்றும் 0.82kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது.

CT 110: KS & ES என இரு வேரியன்ட்களில் கிடைக்கும் இந்த பைக், 2,000 ரூபாய் தள்ளுபடியைப் பெற்றிருக்கிறது. அதன்படி கிக் ஸ்டார்ட் மாடலை 49,119 ரூபாய்க்கும், எலெக்ட்ரிக் ஸ்டார்ட் மாடலை 54,703 ரூபாய்க்கும் வாங்கமுடியும். இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கும் 115.45சிசி இன்ஜின் - 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி, 8.6bhp பவர் மற்றும் 0.98kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது.

பிளாட்டினா 100ES: இந்த பைக்கின் விலை 2,000 ரூபாய் குறைந்து, 59,777 ரூபாய்க்குக் கிடைக்கிறது. இதில் இருக்கும் 102சிசி இன்ஜின் - 4 ஸ்பீடு கியர்பாக்ஸ், 7.9bhp பவர் மற்றும் 0.83kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது.

பிளாட்டினா 110: டிரம் CBS, H-Gear (டிரம்/டிஸ்க்) என மொத்தம் மூன்று வேரியன்ட்களில் இந்த பைக் கிடைக்கிறது. இதில் CBS மாடல் 2,000 ரூபாய் தள்ளுபடியும், H-Gear மாடல் 2,500 ரூபாய் தள்ளுபடியும் பெற்றிருக்கின்றன; அதன்படி டிரம் CBS மாடலின் விலை 62,064 ரூபாய், H-Hear டிரம் மாடலின் விலை 64,709 ரூபாய், H-Gear டிஸ்க் மாடலின் விலை 67,428 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த 3 வேரியன்ட்களிலும் இருப்பது ஒரே 115.45சிசி இன்ஜின்தான் ( 8.6bhp பவர் மற்றும் 0.98kgm டார்க்) என்றாலும், டிரம் CBS மாடலில் 4 ஸ்பீடு கியர்பாக்ஸும்... H-Gear மாடலில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸும் இடம்பெற்றுள்ளன.

CT 100 ES
CT 100 ES
Bajaj Auto

டிஸ்கவர் 110: ஒரே டிரம் பிரேக் மாடலில் மட்டும் கிடைக்கக்கூடிய இந்த பைக்கில் இருப்பது, 8.6bhp பவர் மற்றும் 0.98kgm டார்க்கை வெளிப்படுத்தும் 115.45சிசி இன்ஜின் - 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் அமைப்பு. இது 2,000 ரூபாய் குறைந்து, 65,395 ரூபாய் என்ற விலையில் தற்போது கிடைக்கிறது.

டிஸ்கவர் 125: இதுவும் ஒரே டிஸ்க் பிரேக் மாடலில் மட்டுமே கிடைக்கும் நிலையில், இங்கும் 2,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை 75,325 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டிருக்கும் 124.5சிசி இன்ஜின், 11bhp பவர் மற்றும் 1.1kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது.

பல்ஸர் 125: 'லேட்டஸ்ட் & சிறிய பல்ஸர்' என்ற பெருமையைக் கொண்ட இந்த பைக் 2,500 ரூபாய் தள்ளுபடியைப் பெற்றிருக்கிறது. பல்ஸர் 150 பைக் இன்ஜினின் ஷார்ட் ஸ்ட்ரோக் வெர்ஷன்தான் இதில் இருக்கிறது. 124.4சிசி திறன்கொண்ட இது, 12bhp பவர் மற்றும் 1.1kgm டார்க்கைத் தருகிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இந்த பைக்கின் விலை 81,825 ரூபாய்.

பல்ஸர் 150: Neon, Standard, Twin Disc என மொத்தம் மூன்று வேரியன்ட்களில் கிடைக்கும் இந்த பைக்குகளில் இருப்பது, 14bhp பவர் மற்றும் 1.34kgm டார்க்கை வெளிப்படுத்தும் 149.5சிசி இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் அமைப்புதான்; இவை அனைத்துக்குமே 3,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி Neon மாடலின் விலை 89,017 ரூபாய், Standard மாடலின் விலை 1,00,711 ரூபாய், Twin Disc மாடலின் விலை 1,04,141 ரூபாய் ஆகும்.

Pulsar 125 Neon
Pulsar 125 Neon
Bajaj Auto
Pulsar NS 160 TD
Pulsar NS 160 TD
Bajaj Auto

பல்ஸர் 180HF: 220சிசி மாடலில் உள்ள செமி ஃபேரிங்குடன் கிடைக்கும் இந்த பைக்கும், 3,000 ரூபாய் தள்ளுபடியைப் பெற்றுள்ளது. இதில் பொருத்தப்பட்டிருக்கும் 178.6சிசி இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி, 17bhp பவர் மற்றும் 1.42kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இதன் விலை 1,12,989 ரூபாய் ஆகும்.

பல்ஸர் NS 160: NS 200 பைக்கின் மினி வெர்ஷனாக அறியப்படும் இதில் இருப்பது, 15.5bhp பவர் மற்றும் 1.46kgm டார்க்கைத் தரும் 160.3சிசி இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி. கூடவே ஆயில் கூலர் மற்றும் 4 வால்வ் அமைப்பு இருப்பது பெரிய ப்ளஸ். இந்த பைக்கும் 3,000 ரூபாய் தள்ளுபடியில் கிடைக்கிறது. Twin Disc ABS எனும் ஒரே வேரியன்ட்டில் கிடைக்கக்கூடிய இந்த பைக்கின் விலை 1,11,609 ரூபாய்.

பல்ஸர் 220, பல்ஸர் NS 200, பல்ஸர் RS 200: இந்த மூன்று பைக்குகளுமே, 3,800 ரூபாய் தள்ளுபடியில் கிடைக்கின்றன. 'வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும், இன்னும் உன்னை விட்டுப் போகல' என்ற பெருமையைக் கொண்ட பல்ஸர் 220 பைக்கில், 20.93bhp பவர் மற்றும் 1.86kgm டார்க்கை வெளிப்படுத்தும் 220சிசி ஆயில் கூல்டு இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி; இதுவே NS 200 மற்றும் RS 200 பைக்கில் இருக்கும் 199.5சிசி இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி, முறையே 23.5bhp பவர்/1.83kgm டார்க் (கார்புரேட்டர்) மற்றும் 24.5bhp பவர்/1.86kgm டார்க் (ஃப்யூல் இன்ஜெக்‌ஷன்) ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன. இவை லிக்விட் கூலிங் - 4 வால்வ் - 3 ஸ்பார்க் ப்ளக் போன்ற தொழில்நுட்பங்களைக் கொண்டிருப்பது செம. பல்ஸர் 220 பைக்கின் விலை 1,25,703 ரூபாய், NS 200 பைக்கின் விலை 1,31,769 ரூபாய், RS 200 பைக்கின் விலை 1,62,010 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Pulsar RS 200
Pulsar RS 200
Bajaj Auto

அவென்ஜர் 160, அவென்ஜர் க்ரூஸ்/ஸ்ட்ரீட் 220: அவென்ஜர் 160 பைக்கில் இருக்கும் 160சிசி இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி, 15bhp பவர் மற்றும் 1.35kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இதுவே க்ரூஸ், ஸ்ட்ரீட் என இரு வேரியன்ட்களில் கிடைக்கும் 220சிசி மாடல்களில் இருப்பது ஒரே 220சிசி இன்ஜின்தான்! இது 19bhp பவர் மற்றும் 1.75kgm டார்க்கைத் தருகிறது. 160சிசி மாடலுடன் ஒப்பிட்டால், இதில் ஆயில் கூலர் இருப்பது நைஸ். இந்த மூன்று பைக்குகளுமே, 3,000 ரூபாய் தள்ளுபடியில் கிடைக்கின்றன. அவென்ஜர் 160 மாடலின் விலை 98,614 ரூபாய், க்ரூஸ் 220 மற்றும் ஸ்ட்ரீட் 220 மாடல்களின் விலை 1,22,505 ரூபாய் ஆகும்.

டொமினார் D400: 'பஜாஜின் பவர்ஃபுல் & பிரிமியம் பைக்' என்ற பெயருக்குச் சொந்தக்காரரான இது, இருப்பதிலேயே அதிகமான தள்ளுபடியைப் பெற்றிருக்கிறது (6,000 ரூபாய் மக்களே)!

Avenger Street 160
Avenger Street 160
Bajaj Auto
பஜாஜ் D400
பஜாஜ் D400
Bajaj Auto

2,21,279 ரூபாய் விலையில் கிடைக்கக்கூடிய இந்த பைக்கில் இருப்பது,40bhp பவர் மற்றும் 3.5kgm டார்க்கைத் தரும் 373.3 சிசி இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் அமைப்பு; இதில் 4 வால்வ் - DOHC, லிக்விட் கூலிங், ஸ்லிப்பர் க்ளட்ச், 3 ஸ்பார்க் ப்ளக், Fi போன்ற மாடர்ன் அம்சங்கள் இருப்பது வெரி நைஸ். சமீப காலத்தில் அதிகப்படியான விலை உயர்வைப் பெற்ற நிலையில், இந்தத் தள்ளுபடி சரியான நேரத்தில் வந்திருக்கிறது என்றே சொல்லலாம். எனவே டொமினாரை வாங்கும் முடிவில் இருப்பவர்கள், இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!