Published:Updated:

``ராபிடோ வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்!'' - எச்சரிக்கிறது சென்னை காவல்துறை

ந.பொன்குமரகுருபரன்

ராபிடோ ஆப் மூலமாக, இருசக்கர வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவதற்கு போக்குவரத்து காவல்துறை தடை விதித்துள்ளது. இந்த ஆப் மூலமாக பொதுமக்கள் யாரும் பயணம் செய்ய வேண்டாமென்று சென்னை போக்குவரத்துக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

ராபிடோ
ராபிடோ

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு `ராபிடோ’ நிறுவனம் செயல்படுகிறது. `ஓலா, உபெர்’ போன்ற நிறுவனங்கள் கார்களை வைத்து பயண சேவையை அளிப்பது போன்று, இரு சக்கர வாகன `பைக் டாக்ஸி' சேவையை `ராபிடோ’ அளிக்கிறது. இதற்காக புக்கிங் சார்ஜாக 10 ரூபாயும், கி.மீ.க்கு 5 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும், தங்களது ஓட்டுநர் உரிமம், வாகன உரிமம் போன்ற விவரங்களை அளித்து, `ராபிடோ கேப்டன்’ ஆக தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம். ஒவ்வொரு பயணத்துக்கும் குறைந்தபட்சம் 20 ரூபாய் வருமானம் கிடைக்கும் என்பதால், இளைஞர்கள் பலரும் தங்களை இணைத்துள்ளனர்.

ராபிடோ கேப்டன்கள்
ராபிடோ கேப்டன்கள்

தமிழ்நாட்டில் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் வாகனங்கள், போக்குவரத்து விதிப்படி மஞ்சள் நிற நம்பர் போர்டை வைத்திருக்க வேண்டும். இருசக்கர வாகனங்களுக்கு மஞ்சள் நிற நம்பர் போர்டு வைக்கும் நடைமுறை தமிழகத்திலேயே இல்லை. சென்னை நகர் முழுவதும் வலம் வரும் ராபிடோ வாகனங்கள் `வெள்ளை நிற’ போர்டுடன் பறக்கின்றன. சட்டத்துக்குப் புறம்பாக இயக்கப்படும் இந்த வாகனங்கள் குறித்து போக்குவரத்து போலீஸாருக்கு புகார்கள் குவியவும், இன்று நடைபெற்ற அதிரடி வாகன தணிக்கையில் 37 `ராபிடோ’ வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போக்குவரத்துக் காவல்துறை உயரதிகாரி ஒருவர், "வணிக ரீதியாக இருசக்கர வாகனங்களை இயக்குவதற்கு தமிழகத்தில் அனுமதியில்லை. இதே குற்றச்சாட்டு காரணமாகத்தான் `ராபிடோ’ நிறுவனம் பெங்களூரில் தடை செய்யப்பட்டது. சமீபகாலமாக `ராபிடோ ஆப்’ மூலமாக பயணிப்பவர்களின் எண்ணிக்கை சென்னையில் அதிகரித்துள்ளது. இவ்வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு விபத்துக் காப்பீடு இல்லை. சட்டத்துக்குப் புறம்பாக இயக்கப்பட்ட 37 வாகனங்களை இன்று பறிமுதல் செய்துள்ளோம். இனியும் `ராபிடோ’ வாகனங்கள் இயக்கப்பட்டால், அவையும் பறிமுதல் செய்யப்படும்.

பறிமுதல் செய்யப்பட்ட ராபிடோ வாகனங்கள்
பறிமுதல் செய்யப்பட்ட ராபிடோ வாகனங்கள்
பறிமுதல் செய்யப்பட்ட ராபிடோ வாகனங்கள்
பறிமுதல் செய்யப்பட்ட ராபிடோ வாகனங்கள்

தவிர, ராபிடோ வாகன ஓட்டிகளாக இருப்பவர்கள் யார், அவர்களுக்கு குற்றப்பின்னணி இருக்கிறதா போன்ற விவரங்கள் அந்நிறுவனத்திடமே இல்லை. அந்த வாகனங்களில் போதை மருந்துகள், கஞ்சா கடத்தப்பட்டால்கூட யாருக்கும் தெரியாது. சிலர் நம்பர் பிளேட் கூட இல்லாமல் ராபிடோ வாகனத்தை இயக்குவதாக எங்களுக்குப் புகார் வந்துள்ளது. பொதுமக்கள் இந்த `ராபிடோ ஆப்’ மூலமாக பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்” என்றார்.

போலீஸாரிடம் சிக்கிய வாகனங்கள் அனைத்தும், `ராபிடோ கேப்டனாக செயல்பட்டவர்களுக்குச் சொந்தமானது. இவ்வாகனங்களை மீட்க `ராபிடோ’ நிறுவனம் தரப்பில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. வருமானத்துக்கு ஆசைப்பட்டு `ராபிடோ’வில் கேப்டனாக சிக்கிக் கொண்டவர்கள், வாகனத்தை இழந்து செய்வதறியாது நிற்கின்றனர். `ராபிடோ ஆப்’பை தடை செய்யக்கோரி கடந்த வாரம் சென்னையில் `தமிழ்நாடு கால்டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம்’ போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

நம்பர் பிளேட் இல்லாமல் இயக்கப்பட்ட ராபிடோ வாகனம் 
இடம்: ஆர்.கே.சாலை, சென்னை
நம்பர் பிளேட் இல்லாமல் இயக்கப்பட்ட ராபிடோ வாகனம் இடம்: ஆர்.கே.சாலை, சென்னை

இதுதொடர்பாக விவரமறிய சென்னை ஜெமினி மேம்பாலம் சுந்தரம் அவென்யூவில் இருக்கும் ராபிடோ அலுவலகத்துக்கு சென்றோம். போலீஸாரின் நடவடிக்கையை அறியாமல் சுமார் 50 இளைஞர்கள் தங்களை `ராபிடோ கேப்டனாக’ இணைத்துக் கொள்ள வரிசையில் நின்றிருந்தனர். மேலாண் அதிகாரியாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவருடன், "வணிக ரீதியாக இரு சக்கர வாகனங்களை இயக்குவதற்கு தமிழகத்தில் தடை இருக்கிறதே, இப்படி இளைஞர்களை ஏமாற்றுவது நியாயமா?” என்றோம். "அதெல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். இதற்கு மேல் நாங்கள் எதுவும் பேசத் தயாராகயில்லை” என்று முடித்துக்கொண்டார்.