Published:Updated:

5,000 பெட்ரோல் நிலையங்கள், 3 வெளிநாட்டு நிறுவனங்கள்... ஆனால், எலெக்ட்ரிக்தான் எதிர்காலம்?!

நாடு முழுக்க பெட்ரோல்,டீசல் மையங்களை அதிகரிப்பது, இந்தியாவில் வெளிநாட்டு பெட்ரோல் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது, பெட்ரோல், டீசல் விநியோகத்தை எளிமைப்படுத்துவது என மற்றொரு பக்கம் வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவது சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

எலெக்ட்ரிக் கார்
எலெக்ட்ரிக் கார்

இனி எலெக்ட்ரிக்தான் எதிர்காலம் என மத்திய அரசு அறிவித்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஃபேம் (Faster Adoption and Manufacturing in India) என்கிற பெயரில் இந்தியாவில் தயாரிக்கப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கும் திட்டமும் வந்துவிட்டது. இன்னொரு பக்கம் இந்தியாவில் புதிய 3 வெளிநாட்டு பெட்ரோல் நிறுவனங்களுக்கு அனுமதி, 5,500 பெட்ரோல் நிலையங்கள், டோர் டெலிவரி, ரிலையன்ஸ் - பிரிட்டிஷ் பெட்ரோலியம் (BP) கூட்டு என ரீடெய்ல் எரிபொருள் துறையில் மத்திய அரசுகொண்டுவர அறிவித்திருக்கும் மாற்றங்கள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள் ஆட்டோமொபைல் துறையினர்.

பெட்ரோல் நிலையங்கள்
பெட்ரோல் நிலையங்கள்

3 புதிய வெளிநாட்டு ஆயில் நிறுவனங்கள்!

மத்திய அரசு விரைவில் சில்லறை எரிபொருள் வர்த்தகத்துறையில் முக்கியமான சில மாற்றங்களைக் கொண்டுவர இருக்கிறது. இந்தியாவில் எரிபொருள் வணிகத்தில் ஈடபடவேண்டுமென்றால் 2,000 கோடி ரூபாயை முதலீடு செய்யவேண்டும் எனப் பலகாலமாக கடைபிடிக்கப்பட்டுவந்த விதி நீக்கப்பட இருக்கிறது. அதேபோல் இந்தியாவில் தற்போது வெளிநாட்டு நிறுவனமான ஷெல் மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் சவுதி அரேபிய எரிபொருள் நிறுவனமான அராம்கோ, பிரெஞ்சு நிறுவனமான டோட்டல், சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் Trafigura ஆகிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க இருக்கிறது. இனி இந்நிறுவனங்கள் இந்தியாவில் புதிய எரிபொருள் நிலையங்களைத் தொடங்கும்.

இதுதவிர சூப்பர் மார்க்கெட்டுகள் மூலம் எரிபொருள் விநியோகமும் தொடங்கப்பட இருக்கிறது. பிரிட்டிஷ் பெட்ரோலியமும்- ரிலையன்ஸ் நிறுவனமும் கூட்டணி சேர்ந்து புதிதாக பெட்ரோல் நிலையங்களைத் தொடங்க இருக்கின்றன. தற்போது இந்தியா முழுக்க 1,400 பெட்ரோல் நிலையங்களை கொண்டு வரும் ரிலையன்ஸ், இந்தக்கூட்டணி மூலம் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க இருக்கிறது. மேலும், இந்தக் கூட்டணி டோர் டெலிவரி முறையில் பெட்ரோல், டீசலை வீடுகளுக்குக் கொண்டுவந்து விற்க இருக்கிறது.

ரீடெய்ல் எரிபொருள் வர்த்தகத்தில் இவ்வளவு மாற்றங்கள் செய்யப்பட இருக்கும் நிலையில், இனி எலெக்ட்ரிக்தான் எதிர்காலம் எனச்சொல்லப்பட்டுவரும் ஆட்டோமொபைல் துறைக்குப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

``இனி எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் எதிர்காலம். எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்பில் கவனம் செலுத்துங்கள் என்கிறது மத்திய அரசு. அதேசமயம் நாடு முழுக்க பெட்ரோல், டீசல் மையங்களை அதிகரிப்பது, இந்தியாவில் வெளிநாட்டு பெட்ரோல் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது, பெட்ரோல், டீசல் விநியோகத்தை எளிமைப்படுத்துவது என மற்றொரு பக்கம் வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவது சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஃபேம் என்ன ஆனது?!

இந்தியாவில் தயாரிக்கப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகைகள் என அறிவித்தது மத்திய அரசு. இதற்கு ஃபேம் (FAME) எனப் பெயரிட்டார்கள். இந்தத் திட்டத்தின்படி இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரித்தால் வரிச்சலுகை கிடைக்கும். ஆனால், இந்தத்திட்டப்படி தற்போதுவரை பயன்பெறுவது வெறும் 5 நிறுவனங்கள் மட்டுமே. ஏத்தர் எனர்ஜி, ஆம்பியர், ஒகினாவா, ஜிதேந்திரா எலெக்ட்ரிக், ஹிரோ எலெக்ட்ரிக் என்னும் ஐந்து நிறுவனங்களே இந்தியாவில் இத்திட்டப்படி சலுகைகள் பெறுகின்றன.

இந்தியாவில் லித்தியம் ஐயான் பேட்டரிகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. வெறும் 3 நிறுவனங்கள் மட்டுமே லித்தியம் ஐயான் பேட்டரிகளைத் தயாரிக்கின்றன. பேட்டரிகளுக்குப் பெரும்பாலும் சீன நிறுவனங்களையே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது'' என்கிறார் ஆட்டோமொபைல் துறையில் மிக முக்கியப் பொறுப்பில் இருக்கும் உயரதிகாரி ஒருவர்.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனை எப்படி குறைந்திருக்கிறதோ, அதேபோல எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையும் சரிவைச் சந்தித்திருக்கிறது என்பதுதான் அதிர்ச்சித் தகவல். கடந்த ஆண்டு ஏப்ரல்- ஜூன் வரையிலான முதல் காலாண்டில் 30,000 எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால், இதே இந்த ஆண்டு முதல் காலாண்டில் ஃபேம் திட்டப்படி தயாரிக்கப்பட்ட வெறும் 1,700 வாகனங்களே விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் 2,170 எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்த முதல் காலாண்டில் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது.

சலுகைகளை அறிவிக்கும் தமிழ்நாடு!

டெஸ்லா
டெஸ்லா

இந்தியாவில் ஆட்டோமொபைல் தொழிலில் முன்னிலையில் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. இப்போது எலெக்ட்ரிக் மார்க்கெட்தான் எதிர்காலம் எனும் நிலையில், தமிழ்நாட்டில் எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்புத் தொழிற்சாலை அமைத்தால் அதற்குப் பல்வேறு சலுகைகளை அறிவிக்க இருக்கிறது தமிழ்நாடு அரசு.

எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனைக்கு வந்துவிட்டன... ஆனால், இப்போது வாங்கலாமா?! #FactCheck

தமிழ்நாட்டில் எலெட்ரிக் தொழிற்சாலைத் தொடங்கினால் ஜிஎஸ்டி ரீஃபண்ட், அதிக கடன், ஊழியர்களுக்கு ஏற்ப ஊக்கத்தொகை ஆகிய சலுகைகளை தமிழக அரசு அறிவிக்க உள்ளதாகத் தெரிகிறது. இச்சலுகைகளைப் பெற குறைந்தபட்சம் 500 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் முதலீடு செய்யவேண்டும் என்கிற விதி உண்டு. ஆனால், இது எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களுக்குக் குறைக்கப்பட இருப்பதாகவும் பேச்சுகள் இருக்கின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சாலை வரி கிடையாது எனவும் தமிழக அரசு அறிவிக்க இருக்கிறது.

2023-ல் எலெக்ட்ரிக் வாகனங்கள்!

2023-ம் ஆண்டுக்குள் 3 சக்கர வாகனங்கள் முழுமையாக எலெக்ட்ரிக் ஆக்கப்படும் என்பதும், 2025-க்குள் 150 சிசிக்குக் குறைவான பைக், ஸ்கூட்டர்கள் எலெக்ட்ரிக்காக மட்டுமே இருக்கவேண்டும் என்பதும் நிதி ஆயோக்கின் பரிந்துரை. ஆனால், `இதைச் செயல்படுத்த தெளிவான திட்டங்கள் எதுவும் நிதி ஆயோக்கிடம் இல்லை’ என்கிறார்கள் ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள். பெட்ரோல் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்க இருப்பதுபோல, எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்யக்கூடிய நிலையங்களும் அதிகரிக்கப்படவேண்டும். அதேசமயம் பெட்ரோல் போட்டுவிட்டு ஒருவாகனம் அந்நிலையத்தைவிட்டு சில விநாடிகளில் வெளியேறிவிடும். ஆனால், எலெக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜ்போட பல மணிநேரங்கள் ஆகும். இந்தச் சவால்களை எல்லாம் எப்படிச் சமாளிக்கப்போகிறார்கள் என்பதில்தான் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான எதிர்காலம் இருக்கிறது!