வழக்கமாக சினிமா பிரபலங்கள், தொழில் புள்ளிகள், அரசியல்வாதிகள் வீட்டில்தான் வருமான வரித்துறை சோதனை போட்டு பரபரப்பைக் கிளப்புவார்கள். நேற்று ஆட்டோமொபைல் துறையில் இந்த வருமான வரித்துறைதான் ஹாட் டாபிக்.
ரெய்டில் சிக்கியிருப்பது ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம். ஒழுங்காக வரி கட்டாமல் வரி ஏய்ப்பு செய்ததாக ஹீரோ நிறுவனத்தின் மீது புகார் வந்ததயைடுத்து இந்த வருமான வரிச் சோதனை நடந்ததாகச் சொல்கிறார்கள். சிலர் இதை வழக்கமான சோதனை என்றும் சொல்கிறார்கள். இதில் ஹீரோ மோட்டோ கார்ப் தலைவர் மற்றும் CEO பவன் முஞ்ஜாலின் வீடு முதற்கொண்டு, டெல்லி மற்றும் குர்காவுனில் இருக்கும் ஹீரோவின் அலுவலகங்கள் முதற்கொண்டு, மொத்தம் 25 இடங்களில் சோதனை நடத்தியிருக்கிறார்கள் வருமான வரித் துறையினர்.
நேற்று ஆரம்பித்த இந்த ரெய்டு, இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.
இன்வெஷ்டிகேஷன் குழு, சில முக்கியமான டாக்குமென்ட்களைக் கைப்பற்றியிருக்கிறதாம். கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாக பிசினஸ் வரவு செலவுக் கணக்குகள் மற்றும் அக்கவுன்ட்ஸைக் கடுமையாகச் சோதனை போட்டிருக்கிறார்கள். டிஜிட்டல் மற்றும் எலெக்ட்ரானிக் பரிவர்த்தனைகளும் கைப்பற்றப்பட்டிருக்கிறதாம். சில பிசினஸ் ட்ரான்ஸாக்ஷன்கள் ஒழுங்காக இல்லை என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இப்போது வரை வருமான வரித்துறை, என்னென்ன கைப்பற்றியிருக்கிறது என்பதைச் சொல்லவில்லை.

2001–ல் இருந்து ஹீரோ மோட்டோ கார்ப்தான், ஆட்டோமொபைல் டூ–வீலர் மார்க்கெட்டின் ஜயன்ட்டாக இருந்து வருகிறது. இதுவரை சுமார் 100 மில்லியன்… அதாவது 10 கோடி ஹீரோ வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. உலகம் முழுதும் ஆசியா, ஆப்பிரிக்கா, தெற்கு மற்றும் மத்திய அமெரிக்கா என மொத்தம் 40 நாடுகளுக்கும் மேல் தங்கள் வாகனங்களை விற்று வருகிறது ஹீரோ. மேலும் குளோபலாக ஏற்றுமதியும் செய்து வருகிறது ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம். இந்தியாவில் டொமெஸ்ட்டிக் டூ–வீலர் மார்க்கெட்டில் 50% ேஷர், ஹீரோ நிறுவனத்தினுடையது.
இது பற்றி ஹீரோ நிறுவனம் சொல்கையில், ‘‘ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் நடக்கும் இது வழக்கமான சோதனைதான். சட்டத்தை மீறும் நிறுவனம் இல்லை ஹீரோ. அரசாங்கத்தை மதித்து நடக்கும் நிறுவனம் எங்களுடையது! எங்களுடைய முழு ஒத்துழைப்பும் அதிகாரிகளுக்குக் கிடைக்கும்!’’ என்று சொல்லியிருக்கிறது.
