Published:Updated:

டெஸ்ட்டிங்கில் கியா கார்னிவல் எம்பிவி… டொயோட்டா & பென்ஸுக்குப் போட்டி!

செடொனா (Sedona) மற்றும் கிராண்ட் கார்னிவல் எனும் பெயர்களில், சில சர்வதேச சந்தைகளில் இந்த கார் விற்பனையாகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

போட்டிமிகுந்த இந்திய கார் சந்தையில், கியா மோட்டார்ஸ் நிறுவனம் தடம் பதிக்கவிருப்பது தெரிந்ததே. கடந்தாண்டு நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் SP2i எஸ்யூவி கான்செப்ட் காட்சிபடுத்தப்பட்டபோது, முதல் மாடலை அறிமுகப்படுத்திய ஒன்றரை வருடத்தில், நம் நாட்டில் 5 கார்களை விற்பனைக்குக் கொண்டுவர முடிவெடுத்திருப்பதாக இந்த தென்கொரிய நிறுவனம் அறிவித்திருந்தது. அதற்கேற்ப வருகின்ற ஆகஸ்ட் 22–ம் தேதி செல்டோஸ் மிட்சைஸ் எஸ்யூவி வெளிவரவுள்ளது.

Carnival MPV
Carnival MPV
Kia Motors

அடுத்தபடியாக கார்னிவல் பிரிமியம் எம்பிவி – ஹூண்டாய் வென்யூவை அடிப்படையாகக் கொண்ட காம்பேக்ட் எஸ்யூவி – ரியோ பிரிமியம் ஹேட்ச்பேக் – ரியோவை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் க்ராஸ் ஹேட்ச்பேக் என இந்தியாவில் வரிசையாக கியாவின் கார்கள் படையெடுக்க உள்ளன. அடுத்த ஆண்டின் துவக்கத்தில் கார்னிவல் வரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அது தற்போது இறுதிக்கட்ட டெஸ்ட்டிங்கில் இருக்கிறது. சென்னையில் உள்ள ஸ்கைவாக் மால் அருகே இதைப் படம்பிடித்திருக்கிறார், சென்னையைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகர் ராகுல். இந்த XL சைஸ் பிரிமியம் எம்பிவியில், அப்படி என்ன ஸ்பெஷல்?

கார்னிவலின் வரலாறு தெரியுமா?

செடொனா (Sedona) மற்றும் கிராண்ட் கார்னிவல் எனும் பெயர்களில், சில சர்வதேச சந்தைகளில் இந்த கார் விற்பனையாகிறது. கடந்தாண்டு நடைபெற்ற நியூயார்க் இன்டர்நேஷனல் மோட்டார் ஷோவில், தற்போது உலகளவில் விற்பனை செய்யப்படும் மாடல் காட்சிபடுத்தப்பட்டது. அமெரிக்காவை மனதில் வைத்து தயாரிக்கப்பட்டதாலோ என்னவோ, 5,115மிமீ உயரம் – 1,985மிமீ அகலம் – 1,740மிமீ உயரம்- 3,060மிமீ வீல்பேஸ் – 5 கதவுகள் என இனோவா க்ரிஸ்டாவைவிடப் பெரிய சைஸில் (380மிமீ அதிக நீளம், 155மிமீ அதிக அகலம்) திடகாத்திரமாக இருக்கிறது கார்னிவல்.

Carnival MPV
Carnival MPV
Kia Motors

ஆனால், அது இந்தியாவுக்கு வரும்போது, நம் ஊருக்கு ஏற்றபடி அதன் டிசைனில் சில மாற்றங்கள் செய்யப்படும் எனத் தெரிகிறது. இது 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படலாம். லேடர் ஃபிரேம்- ரியர் வீல் டிரைவ் அமைப்பைக் கொண்டிருக்கும் இனோவா க்ரிஸ்டாவுடன் ஒப்பிட்டால், ஃப்ரன்ட் வீல் டிரைவ் மற்றும் மோனோகாக் சேஸியைக் கொண்டிருப்பது பெரிய ப்ளஸ். இதனால் காரின் எடை குறைவாக இருக்கும் என்பதுடன், கேபின் இடவசதியும் அதிகமாகவே இருக்கும். இதனாலேயே கார்னிவல், இனோவாவை விட 40மிமீ குறைவான உயரத்தைக் கொண்டிருக்கிறது. ஆனால், காரின் அதிக நீளம், அந்தக் குறைபாட்டைச் சரிசெய்துவிடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கார்னிவலின் கேபின் இடவசதி எப்படி?

7 முதல் 11 சீட் ஆப்ஷனில், உலக ஆட்டோமொபைல் சந்தையில் கார்னிவல் கிடைக்கிறது. இதில் 11 சீட்கள் கொண்ட மாடலின் நான்காவது வரிசை இருக்கையில், 685மிமீ லெக்ரூம்- 902மிமீ ஹெட்ரூம் - 1,266மிமீ Hip Room இருக்கும் எனத் தகவல் வந்துள்ளது. இனோவாவுக்கு அடுத்தபடியாக இங்கே பிரபலமாக இருக்கும் மற்றுமொரு எம்பிவியான எர்டிகாவின் மூன்றாவது வரிசை இருக்கையை உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால், 580/800மிமீ லெக்ரூம்- 800மிமீ ஹெட்ரூம் - 1,260மிமீ Hip Room இருக்கிறது. நம் நாட்டில் இரண்டாவது வரிசை இருக்கை சொகுசு மிகவும் முக்கியம் என்பதால், அநேகமாக இங்கே 7 சீட் மாடல் வருவதற்கான சாத்தியம் அதிகம்!

Carnival Spy
Carnival Spy
Reader

மேலும், இதில் இரண்டாவது வரிசையை அப்படியே மடக்கினால், மூன்றாவது வரிசைக்குச் செல்வதும் சுலபமாக இருக்கும். கடைசி வரிசையை எலெக்ட்ரிக்கலாகவும் அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம். மேலும், இதன் ஸ்லைடிங் பாணி கதவுகளை எலெக்ட்ரிக்கலாக இயக்கலாம் என்பதும் வரவேற்கத்தக்கது. ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, அது 3 வரிசை இருக்கைகளைக் கொண்டிருந்தது. எனவே, மூன்று வரிசை இருக்கைகளும் பயன்பாட்டில் இருக்கும்போதும்கூட, சுமார் 1,000 லிட்டர் வரையிலான பூட் ஸ்பேஸ் இருக்கலாம்! எர்டிகாவில் இருப்பதோ வெறும் 209 லிட்டர்தான்!

கார்னிவலில் என்னென்ன சிறப்பம்சங்கள்!

கேபின் சொகுசை அதிகரிக்கும் விதத்தில், நடுவரிசை இருக்கையில் நீட்டிக்கக்கூடிய Leg Rest & Chair Arm இருக்கும். மேலும், என்டர்டெயின்மென்ட் அம்சங்களுக்காக, ஒவ்வொரு முன்பக்க இருக்கையின் பின்னாலும் ஒரு 10.1 இன்ச் ஸ்க்ரீன் இருக்கும். இதனுடன் UVO – In Car கனெக்ட்டிவிட்டி Suite, பெரிய டச் ஸ்க்ரீன் சிஸ்டம், இரண்டு சன்ரூஃப், 3 ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, சீட் மெமரி மற்றும் எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் உடனான டிரைவர் இருக்கை எனச் சிறப்பம்சங்களின் பட்டியல் நீள்கிறது. பாதுகாப்பைப் பொறுத்தவரை 4 காற்றுப்பைகள், ABS, EBD, ESC, TPMS, பிரேக் அசிஸ்ட், டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், மூன்று வரிசை இருக்கைகளுக்கும் USB சார்ஜிங் பாயின்ட்கள் ஆகியவை உள்ளன.

கார்னிவலின் பர்ஃபாமன்ஸ் என்ன?

Carnival MPV
Carnival MPV
Kia Motors

இந்திய சாலைகளில் களமிறங்கும்போது, 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினுடன் கார்னிவல் இருப்பதற்கான வாய்ப்பிருக்கிறது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள இது, 202bhp@3,800rpm பவர் மற்றும் 44.1kgm@1,750rpm டார்க்கை வெளிப்படுத்துகிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும் ஆப்ஷனலாக வழங்கப்படலாம். சர்வதேச மாடலில் பொருத்தப்பட்டிருக்கும் 3.3 லிட்டர் V6 பெட்ரோல் இன்ஜின், 270bhp பவர் மற்றும் 31.8kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. எஸ்யூவி/எம்பிவிகளில் இழுவைத் திறனுக்கும் மைலேஜுக்கும் பெயர்பெற்ற டீசல் இன்ஜினே இங்கு செல்லுபடியாகும் என்பதால், இது நம் நாட்டுக்கு வராது எனலாம்.

கார்னிவலுக்குப் போட்டியாளர்கள் யார்?

காரின் சைஸ் மற்றும் வசதிகளை வைத்துப் பார்க்கும்போது, கார்னிவல் இனோவா க்ரிஸ்டாவைவிட அதிக விலையில் அறிமுகமாகும் என்றே தோன்றுகிறது. இன்ஜின் CBU முறையில் வந்தாலும், மற்றவற்றை CKD முறையில் பாகங்களாக இறக்குமதி செய்து, அனந்தபூரில் உள்ள தனது தொழிற்சாலையில் கியா மோட்டார்ஸ் நிறுவனம், இந்த காரை அசெம்பிள் செய்யத் தீர்மானித்துள்ளது. எனவே, ஓரளவுக்குக் கட்டுப்படியாகக்கூடிய விலையில் (உத்தேசமாக 30 லட்ச ரூபாய், எக்ஸ்-ஷோரூம் விலை) கார்னிவல் வரலாம்.

Carnival MPV
Carnival MPV
Kia Motors

பிரிமியம் எம்பிவிகளான டொயோட்டாவின் இனோவா க்ரிஸ்டா மற்றும் மெர்சிடீஸ் பென்ஸ் V-க்ளாஸ் ஆகிய கார்களிடையே பெரிய வெற்றிடம் இருப்பதால், அதை நிரப்பக்கூடிய தயாரிப்பாக இந்த எம்பிவி இருக்கும் என நம்பலாம். 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இது மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றதாகவும், அதன்படி ஒரு மாதத்துக்கு சுமார் 1,000 கார்கள் விற்பனை ஆகும் திறன் இருப்பதாகவும் தகவல் வந்திருக்கிறது. எனவே, இனோவாவுக்கு மாற்றாகவும், Private Buyers & Fleet Owners –க்கும் பிடித்தமான தயாரிப்பாக இது மாறும் என எதிர்பார்க்கலாம்.

Carnival MPV
Carnival MPV
Reader
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு