Published:Updated:

பஸ், லாரிகளின் விலை 7,000 ரூபாய்தான்!

வெங்கடேஷ்
பிரீமியம் ஸ்டோரி
வெங்கடேஷ்

கன்னட சினிமாக்களுக்கு மினியேச்சர் வாகனங்கள் செய்து கொடுக்கும் வெங்கடேஷ்!

பஸ், லாரிகளின் விலை 7,000 ரூபாய்தான்!

கன்னட சினிமாக்களுக்கு மினியேச்சர் வாகனங்கள் செய்து கொடுக்கும் வெங்கடேஷ்!

Published:Updated:
வெங்கடேஷ்
பிரீமியம் ஸ்டோரி
வெங்கடேஷ்

சாலையில் ஓடும் ஒரிஜினல் வாகனங்களை வடிவமைப்பவர்களுக்குச் சவால் விடும் அளவுக்கு பொம்மை வண்டிகளைச் செய்து அசத்துகிறார் கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ்.

நாகர்கோவில் இந்து கல்லூரியில் எம்எஸ்சி எலெக்ட்ரானிக்ஸ் படித்த வெங்கடேஷ், தமிழ்நாடு அரசுப் பேருந்து, கேரள அரசு பஸ்ஸான கே.எஸ்.ஆர்.டி.சி, லாரி, ஜிப்ஸி என விதவிதமான வாகனங்களைச் சிறிய அளவில் தத்ருபமாக செய்வதில் வல்லவர்.

27-வயதான இளைஞர் வெங்கடேஷ், ஆரம்பத்தில் பொம்மை பஸ்களைச் செய்து குழந்தைகளுக்கு விளையாடுவதற்காக விற்பனை செய்தார். அதன் பிறகு பஸ் கம்பெனிகளுக்கு மாடலாக சில பஸ், லாரிகளைச் செய்து கொடுத்து படிப்படியாக உயர்ந்தவர், இப்போது கன்னட சினிமா ஷூட்டிங்குக்கு கிராஃபிக்ஸ் காட்சிகளுக்காக ஜீப், லாரி எனச் செய்து கொடுத்து அசத்துகிறார். இவரது கைவண்ணத்தில் உருவாகும் சிறிய வாகனங்களை விரும்பிக் கேட்கிறது கன்னட சினிமா உலகம். இப்போது சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்யும் வெங்கடேஷ், ஓய்வு நேரங்களில் வாகனங்களைச் செய்கிறார். விடுமுறைக்காக ஒரு நாள் நட்டாலம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு வந்திருந்த வெங்கடேஷ், பொம்மை வாகனம் செய்து கொண்டிருந்த சமயத்தில் அங்கு ஆஜராகி உரையாடினோம். சிடி மார்க்கரால் ஃபோம் ஷீட்டுகளில் அளவீடு செய்தபடியே நம்மிடம் பேசினார் வெங்கடேஷ்.

பஸ், லாரிகளின் விலை 7,000 ரூபாய்தான்!
பஸ், லாரிகளின் விலை 7,000 ரூபாய்தான்!
பஸ், லாரிகளின் விலை 7,000 ரூபாய்தான்!

"எனக்குச் சின்ன வயசுல இருந்தே பஸ், லாரி எல்லாம் ரொம்பப் பிடிக்கும். ஆரம்பத்தில கரன்ட் போஸ்ட்டுல கட்டி வச்சிருக்கிற விளம்பர அட்டை எல்லாம் சேகரிச்சு சின்னதா பஸ் செய்யுறதுக்காக முயற்சி பண்ணினேன். பஸ், லாரி எல்லாம் நல்லா வந்தது. குழித்துறையில வருஷத்துக்கு ஒருமுறை ஆடி அமாவாசை சமயத்தில் நடக்கிற பொருட்காட்சியில நான் தயாரிச்ச பஸ், லாரிகளைக் கண்காட்சியா வைச்சேன். அதைப் பார்த்தவங்க எல்லாரும் பாராட்டினாங்க.

பிளாஸ்டிக் விளம்பர அட்டையில பண்ணும்போது ஃபினிஷிங் சரியா வராது. ஃபோம் ஷீட்டில் பண்ணினா ஃபினிஷிங் நல்லா வரும்னு சொன்னாங்க. அப்புறம் கொரோனா லாக்டெளன் காலக்கட்டத்தில நிறைய நேரம் கிடைச்சது. அப்போ, ஃபோம் ஷீட் வாங்கி ஒரு பஸ் ரெடி பண்ணினேன். அதை போட்டோ எடுத்து சமூக வலைத் தளங்களில போட்டேன். நல்லா ரீச் ஆச்சுது. அதைப் பார்த்திட்டு வீட்டுப் பக்கத்தில உள்ளவங்க குழந்தைங்களுக்கு விளையாடுறதுக்கு பஸ் செய்து தரலாமான்னு கேட்டாங்க. நானும் ஆர்வமா பஸ் செய்து கொடுத்தேன்.

பொருட்கள் வாங்கின செலவும், கூடவே என்னோட வேலைக்காகவும் சேர்த்து காசு வாங்கினேன். அது மூலமா சின்ன வருமானம் வந்தது. அப்புறம் அதைப் பெரிய அளவில பண்ண முடிவு செய்தேன். நீளம் இரண்டரை அடி, உயரம் ஒரு அடி வர்றது மாதிரி ஒரு பஸ் தயாரிச்சேன். ஒரு பஸ்ஸுக்கு உள்ளேயும், வெளியேயும் என்னெல்லாம் இருக்குமோ அதெல்லாம் ஃபிட் பண்ணினேன். ஸ்டீயரிங், கைப்பிடி, கியர் லீவர், இருக்கை எல்லாமே! எல்இடி லைட்டுக்கு நானே ஒயரிங் செய்து சின்ன பேட்டரி மூலமா கனெக்‌ஷன் கொடுத்தேன். ராத்திரி நேரத்தில லைட்டைப் போட்டு விட்டுட்டு பஸ்ஸை இறக்கத்தில ஓட விட்டா அச்சு அசலா ஒரிஜினல் பஸ் போறது மாதிரியே இருக்கும். பொம்மை பஸ்ஸா இருந்தாலும் விலை கொஞ்சம் அதிகமா இருந்ததால் கொஞ்சம் வசதியான வீட்டில உள்ளவங்கதான் குழந்தைங்களுக்கு விளையாட என்னோட பஸ்ஸை வாங்கிக் கொடுத்தாங்க" என்றவர் அடுத்தக் கட்ட நகர்வு பற்றி விவரித்தார்.

"என்னோட தயாரிப்புக்களான பஸ், லாரிகளை போட்டோ, வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில பதிவு செய்தேன். அதைப் பார்த்துட்டு வெளிமாவட்டங்களில் இருந்து சில பஸ் கம்பெனிகளில ஆபீஸ்ல வைக்கிறதுக்காக அவங்க பஸ் மாடல்ல செய்து கொடுக்க முடியுமானு கேட்டாங்க. நான் செய்து கொடுத்த பழைய மாடல் பஸ்ஸை அலுவலக ஷோகேஸில் நினைவாக வச்சிருப்பதா சொன்னாங்க. ஆனாலும் ஒரு கட்டத்தில் பஸ் கம்பெனிகளில இருந்து வரும் ஆர்டர் குறைஞ்சு போச்சு. நான் செய்து வச்சிருந்த பஸ், லாரி எல்லாத்தையும் விற்பனை செய்துகிட்டு சென்னையில ஒரு தனியார் கம்பெனியில வேலைக்குச் சேர்ந்தேன்.

பஸ், லாரிகளின் விலை 7,000 ரூபாய்தான்!
பஸ், லாரிகளின் விலை 7,000 ரூபாய்தான்!
பஸ், லாரிகளின் விலை 7,000 ரூபாய்தான்!

அங்க சும்ம இருக்க முடியல. அதனால ராத்திரி நேரத்தில… லீவுல பஸ், லாரி, ஜீப்புன்னு செய்யத் தொடங்கினேன். அங்க என்னோட நண்பர் ஒருத்தர் என்னோட பஸ், லாரிகளை வீடியோ எடுத்து யூ டியூப்ல போட்டார். ஒரு தடவை, கன்னட சினிமா இயக்குநர் ஒருத்தர் எனக்கு போன் பண்ணினார். `ரிவெஞ்ச்' அப்பிடீங்கிற டைட்டில்ல எடுக்கிற கன்னட சினிமாவுக்காக ஷூட்டிங் கிராபிக்ஸுக்கு மினியேச்சர் மாடல்ல வண்டி ஒண்ணு ரெடி பண்ணித் தரலாமான்னு கேட்டாங்க. அது எனக்கு இன்ப அதிர்ச்சியா இருந்தது. உடனே ஒத்துக்கிட்டேன்.

அவங்க விரும்புற வாகனத்துக்கான மாடலை அது மாதிரியே செய்து கொடுத்தேன். நான் செய்து கொடுத்த வண்டி அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. இந்த வண்டிகளை அவங்க வெடிக்க வைக்கிறது, விபத்துக்குள்ளாக்க வைக்கிறது, உடைக்கிறது போன்ற காட்சிகளை கிராஃபிக்ஸ் மூலம் எடுத்திருக்காங்க. இதனால அவங்களுக்குப் பொருள் செலவு நிறைய ஆகாம, பாதுகாப்பா ஷூட்டிங் எடுக்க அவங்களுக்கு வசதியா இருக்குன்னு சொன்னாங்க. காட்டுக்குள்ள ஷூட்டிங்; ஃபாரஸ்ட் லாரி செய்து தர முடியுமானு கேட்டாங்க. அதையும் கொடுத்தேன். லாரி, மரம் கொண்டுபோற ஃபாரஸ்ட் வண்டி, ஜிப்ஸினு நிறைய செய்து கொடுத்திருக்கிறேன். இந்த வண்டி எல்லாமே அந்த சினிமாவுல நடிக்கிற நடிகர், நடிகைகளுக்கு ரொம்பப் பிடிச்சிருந்ததாகவும், இதை யாரு பண்ணினா அப்பிடீன்னு வியந்து கேட்டதாகவும் சொன்னாங்க. கன்னட சினிமாவுல இனியும் நிறைய ஆர்டர் தருவதா சொல்லியிருக்கிறாங்க!" என உற்சாகமாகப் பேசியவர் பஸ், லாரிகளைச் செய்வது பற்றிப் பேசினார்.

"ஒரு பஸ் முழுசா செய்து முடிக்க இரண்டு வாரம் ஆகும். ஏன்னா, அதில் எல்லாமே நுணுக்கமான வேலை. அதுவும் எந்த மிஷினும் பயன்படுத்தாம கையாலதான் செய்யுறேன். பஸ், லாரினு எல்லா வாகனம் செய்யுறதுக்கும் ஒரு ஸ்கேல், ஒரு சிடி மார்க்கர், ஒரு கத்தி போன்ற டூல்ஸ் இருந்தா போதும். ஈசியான வாகனங்களுக்கு பிரஷ் மூலமா பெயின்ட் அடிக்கிறேன். சில சமயம் ஸ்ப்ரே பெயின்ட்டிங் கொடுப்பேன். மிஷின் இல்லாம கையால பார்த்துப் பார்த்துச் செய்யுறதுனாலதான் இரண்டு வாரம் டைம் எடுக்கும். ஃபோம் ஷீட், பேரிங், பெயின்ட்டிங், லைட்டுன்னு ஒரு பஸ் செய்யுறதுக்கான சாதனங்கள் வாங்குறதுக்கே மூவாயிரம் ரூபாய்க்கு மேல ஆகுது. அது மட்டுமில்லாம ரெடி பண்ணுற கூலியும் சேர்த்து ஏழாயிரம் ரூபாய் வாங்குறேன்!" என்றவர் இறுதியாக, "எதிர்காலத்தில சினிமா ஷூட்டிங் எடுக்க வசதியா ரிமோட்ல இயங்கும் பஸ் கார் போன்றவற்றைச் செய்து கொடுக்கலாம்னு தீர்மானிச்சிருக்கிறேன். ரிமோட்ல செய்து கொடுத்தா ரேட் இன்னும் அதிகமாகும். சினிமாவில நிறைய ஆர்டர் வந்தால் முழு நேரமா வாகனங்கள் செய்து கொடுக்கலாம்னு முடிவு செய்திருக்கிறேன்!" என்று உற்சாகமாக விடை கொடுத்தார்.