Published:Updated:

``வளர்ச்சி வானத்தில் இருந்தா வரும்...?'' - மோடிக்கு எதிராக ஒரு கலகக் குரல்!

பஜாஜ் நிறுவனத்தலைவர் ராகுல் பஜாஜ் மத்திய அரசை விமர்சிப்பது இது முதல்முறையல்ல. முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போதும் எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறார்

ராகுல் பஜாஜ்
ராகுல் பஜாஜ்

மீண்டும் ஒருமுறை ஆட்டோமொபைல் துறையில் இருந்து ஒலித்திருக்கிறது மத்திய அரசுக்கு எதிரான கலகக்குரல். இந்தியா வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதாக மத்திய அரசும், பிரதமர் மோடியும் சொல்லிக்கொண்டிருக்க, இதில் உண்மையில்லை... பல துறைகள் கடும் சரிவைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன எனக் குரல்கள் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன. இதற்குப் பெரிதாக மத்திய அரசிடமிருந்து எந்த ரியாக்‌ஷனும் இல்லை. இப்போது, ஆட்டோமொபைல் துறையிலிருந்து பேரொலியை எழுப்பியிருக்கிறார் பஜாஜ் நிறுவனத்தின் தலைவர் ராகுல் பஜாஜ்.

ராஜீவ் பஜாஜ்
ராஜீவ் பஜாஜ்

''கார், பைக், கமர்ஷியல் வாகனங்கள் உள்ளிட்ட ஆட்டோமொபைல் துறை மிக மோசமான சரிவைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. உற்பத்திக்கு ஏற்ப மார்க்கெட்டில் டிமாண்ட் இல்லை. தனியார் துறையில் பெரியளவில் முதலீடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தச் சூழலில் வளர்ச்சி எங்கிருந்து வரும். வானத்தில் இருந்தா வளர்ச்சி வரும்? நாட்டில் வளர்ச்சி இல்லை என்பதை மத்திய அரசு வேண்டுமானால் சொல்லாமல் மறைக்கலாம். ஆனால் ஐ.எம்.எஃப், உலக வங்கி உள்ளிட்டவை கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக வளர்ச்சியில் வீழ்ச்சியிருப்பதை வெளிச்சமிடுகின்றன. மத்திய அரசு வேண்டுமானால் மகிழ்ச்சியான முகத்தைக் காட்டலாம். ஆனால், இதுதான் உண்மை. உண்மையை யாராலும் மறைக்க முடியாது'' என ராகுல் பஜாஜ், பஜாஜ் நிறுவன முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

ராகுல் பஜாஜின் மகனும் தற்போதைய பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான ராஜீவ் பஜாஜும் மத்திய அரசை விமர்சித்திருக்கிறார். ''கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசின் எலெக்ட்ரிக் வாகனக் கொள்கை முடிவுகளில் பல தடுமாற்றங்கள். கடுமையான திட்டங்கள் வரப்போவதாகப் பேசுகிறார்கள். உடனே அவர்களின் சகாக்களில் சிலரே 'அப்படியெல்லாம் இல்லை' என மறுக்கிறார்கள். இவர்களின் தடுமாற்றங்களால் வாகனத் தொழிலில் இருக்கும் அனைவருமே குழம்பிப் போய் இருக்கிறோம்'' எனத் தன் வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பஜாஜ் நிறுவனத்தலைவர் ராகுல் பஜாஜ் மத்திய அரசை விமர்சிப்பது இது முதல்முறையல்ல. முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போதும் எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறார். ''தொழிலை முறைப்படுத்துவதற்கு மத்திய அரசிடம் எந்தக் கொள்கைகளும் இல்லை. முதலீட்டாளர்கள் அனைத்தையும் இழந்துகொண்டிருக்கிறார்கள்'' என்று மன்மோகன் சிங் அரசை விமர்சித்துப் பேசியிருக்கிறார் ராகுல். யுபிஏ-2 அரசுக்கு ராகுல் பஜாஜ் அடித்த எச்சரிக்கை மணிபோலவே, மோடி 2.0-க்கும் இப்போது அடித்திருக்கிறார் என சோஷியல் மீடியாக்களில் விமர்சனங்கள் பறக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய ஆட்டோமொபைல் துறை மிகப்பெரிய சரிவைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாகக் கடந்த சில மாதங்களாக கார், 2 வீலர், கமர்ஷியல் வாகன விற்பனை, முன் எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்திருக்கிறது. 2018 ஜூன் மாதத்துடன் 2019 ஜூன் மாத கார் விற்பனையை ஒப்பிட்டால், கிட்டத்தட்ட 25 சதவிகிதம் விற்பனை வீழ்ந்திருக்கிறது.

கார் விற்பனை
கார் விற்பனை

அதாவது கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியா முழுவதும் 2,73,748 கார்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு ஜூனில் அது 2,25,732 கார்களாகக் குறைந்திருக்கிறது. இதேபோலத்தான் இருசக்கர, கமர்ஷியல் வாகனங்களின் விற்பனையும் வீழ்ச்சியடைந்திருக்கிறது. நாடு முழுவதும் பல ஆட்டோமொபைல் டீலர்ஷிப்புகள் மூடப்பட்டிருக்கின்றன. மாருதி, ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது உள்நாட்டு உற்பத்தியைக் குறைத்திருக்கின்றன.

தொடர்ந்து வீழ்ச்சியில் இருக்கும் நிலையில் இந்தாண்டு பட்ஜெட்டை அதிகம் எதிர்பார்த்திருந்தது ஆட்டோமொபைல் துறை. பயணிகள் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்படும், ஹைபிரிட் வாகனங்களுக்கான வரிகள் குறைக்கப்படும் என எதிர்பார்த்தது ஆட்டோமொபைல் துறை. ஆனால், ஜிஎஸ்டி வரி குறைக்கப்படவில்லை என்பதோடு, பெட்ரோல், டீசல் மீதான வரி பட்ஜெட்டில் கூட்டப்பட்டது விற்பனையை இன்னும் மந்தமாக்கியது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வரிச்சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அதிலும் தெளிவு இல்லை என்கிறார்கள் ஆட்டோமொபைல் துறையினர். இதற்கிடையே 2023 ஏப்ரல் முதல் 150சிசிக்குக் குறைவான பெட்ரோல் வாகனங்கள் விற்பனை செய்யப்படத் தடைவிதிக்கப்படும் என்கிற பேச்சும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவின் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியடைந்துகொண்டிருப்பது பொருளாதாரத்துக்கு நல்லதல்ல. எச்சரிக்கை மணியை ஓங்கி ஒலிக்கவிட்டிருக்கிறார் ராகுல் பஜாஜ். ஆட்டோமொபைல் துறையைக் காப்பாற்றவேண்டிய நேரம் இது. அலட்சியம் காட்டினால் அது பேராபத்தில் முடியலாம்.