Published:Updated:

மோட்டோ ஜிபி SF, ஸ்பெஷல் எடிஷன் ஆக்ஸஸ், புதிய ஜிக்ஸர்... கமான் சுஸூகி!

ராகுல் சிவகுரு

ஜிக்ஸர் SF 250 பைக் வந்ததோ, அப்போதே நேக்கட் ஸ்ட்ரீட் டிசைன் கொண்ட ஜிக்ஸர் 250 பைக் குறித்த பேச்சுகள் ஆரம்பித்துவிட்டன.

Gixxer SF 155
Gixxer SF 155 ( Suzuki India )

ஜூலை 2019 மாதம், ஜப்பானிய நிறுவனமான சுஸூகிக்கு பிஸியாக இருந்திருக்கிறது. ஆம், இந்த மாதத்தின் தொடக்கத்தில், இந்தியாவில்தான் விற்பனை செய்யும் பைக்குகளின் சர்வீஸ் மற்றும் வாரன்ட்டி அளவுகளை முற்றிலுமாக மாற்றியமைத்தது. மே 2019 மாதத்தில் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்திய ஜிக்ஸர் SF 155 பைக்கின் தொடர்ச்சியாக, தற்போது புதிய தோற்றம் மற்றும் வசதிகளுடன் ஜிக்ஸர் 155 வெளிவந்திருக்கிறது. மேலும் 125சிசி ஸ்கூட்டர் செக்மென்ட்டில் 'ரூட் தல'-யாக இருக்கும் ஆக்ஸஸ் ஸ்கூட்டரில், புதிதாக ஒரு ஸ்பெஷல் எடிஷனைக் கொண்டு வந்துள்ளது; இதனுடன் பைக் ஆர்வலர்கள் எதிர்பார்த்த மோட்டோ ஜிபி எடிஷன், ஜிக்ஸர் SF 155 பைக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

தவிர பின்னாளில் மேட் ஃபினிஷ் கொண்ட பர்க்மேன் ஸ்ட்ரீட், ஜிக்ஸர் SF 250 பைக்கின் மோட்டோ ஜிபி எடிஷன், நேக்கட் ஸ்ட்ரீட் பைக்கான ஜிக்ஸர் 250-ன் அறிமுகம் எனத் திட்டங்களை வைத்திருக்கிறது சுஸூகி. இவற்றில் என்ன இருக்கிறது?

சர்வீஸ் மற்றும் வாரன்ட்டி அளவுகளில் என்ன மாற்றம்?

Service Schedule
Service Schedule
Autocar India

155சிசிக்குட்பட்ட பைக்குகளின் (ஜிக்ஸர், ஜிக்ஸர் SF, இன்ட்ரூடர்) சர்வீஸுக்கான கிமீ-ல் மாற்றமில்லை; ஆனால், ஒவ்வொரு சர்வீஸுக்கும் இடையேயான காலக்கெடு அதிகரித்திருக்கிறது. அதன்படி முன்பு இந்த பைக்குகளின் மூன்றாவது இலவச சர்வீஸ், பைக் வாங்கிய 210-225 நாள்களுக்குள் செய்துவிட வேண்டும். இப்போது அது 240-255 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவே நான்காவது இலவச சர்வீஸ் என்றால், அது முன்பு பைக் வாங்கிய தினத்திலிருந்து 300-315 நாள்கள் என்றளவில் இருந்த நிலையில், அது தற்போது 365-380 நாள்களாக ஏற்றம் கண்டிருக்கிறது. Paid சர்வீஸில், ஒவ்வொரு சர்வீஸிலும் காலக்கெடு அதிகமாகியிருக்கிறது.

ஆனால் 2 மாதங்களுக்கு முன்பு அறிமுகமான ஜிக்ஸர் SF 250 பைக்கின் சர்வீஸ் மற்றும் வாரன்ட்டி அளவுகளில் எந்த மாறுதலும் இல்லை. எனவே இந்த பைக்கின் முதல் சர்வீஸ் 1,000கிமீ என்றால், அதன்பின்னே ஒவ்வொரு 5,000-கிமீக்கு ஒருமுறை என்ற அளவில் இதன் சர்வீஸ் அமைந்திருக்கிறது. இதுவே சுஸூகியின் கூடுதல் திறன்மிக்க பிரிமியம் பைக்குகளை எடுத்துக் கொண்டால், அதன் வாரன்ட்டி 24,000 கி மீட்டரி லிருந்து 30,000 கிமீட்டராக உயர்ந்திருக்கிறது. மேலும் ஒவ்வொரு சர்வீஸுக்கும் இடையேயான காலக்கெடு அதிகரித்துள்ளதுடன், ஒவ்வொரு 6,000 கிமீக்கும் (முன்பு 4,000கிமீ) ஒருமுறை பைக்கை சர்வீஸ் செய்தாலே போதுமானது. இதனால் சுஸூகி பைக்குகளின் ஒட்டுமொத்த பராமரிப்புச் செலவுகள் குறையலாம்.

Warrenty
Warrenty
Autocar India

புதிதாக வரப்போகும் கலர் ஆப்ஷன், மாடல்கள் என்னென்ன?

Gixxer SF 155
Gixxer SF 155
Suzuki India

எப்போது ஜிக்ஸர் SF 250 பைக் வந்ததோ, அப்போதே நேக்கட் ஸ்ட்ரீட் டிசைன் கொண்ட ஜிக்ஸர் 250 பைக் குறித்த பேச்சுகள் ஆரம்பித்துவிட்டன. இது எதிர்பார்த்தபடியே ஃபுல் ஃபேரிங் மாடலில் உள்ள இன்ஜின், சேஸி, சஸ்பென்ஷன், பிரேக்ஸ், டயர்கள், சிறப்பம்சங்கள் என அதே மெக்கானிக்கல் பேக்கேஜ்தான் இருக்கும். ஆனால், சிங்கிள் டோன் கலர்களுக்குப் பதிலாக, டூயல் டோன் கலர்களை எதிர்பார்க்கலாம். மேலும் LED ஹெட்லைட், பெட்ரோல் டேங்க், Belly Pan ஆகியவைதான் இருக்கும் என்றாலும், அவை நேக்கட் பைக்கிற்கேற்ப மாற்றியமைக்கப்படும். மற்றபடி ஸ்ப்ளிட் டிசைன் கொண்ட சீட் - ஹேண்டில்பார் - கிராப் ரெயில், டிஜிட்டல் மீட்டர், டபுள் Barrel எக்ஸாஸ்ட், தங்க நிற ஃபினிஷ் கொண்ட இன்ஜின் கேஸிங், மெட்டல் வேலைப்பாடுகள் கொண்ட அலாய் வீல்கள், LED டெயில் லைட்ஸ் ஆகியவை தொடரும் என நம்பலாம்.

இன்ஜின் - கியர்பாக்ஸ் கூட்டணியில் மாற்றமில்லாவிட்டாலும், எடை விஷயத்தில் மாறுதல் இருக்கும். ஜிக்ஸர் 250-ல் ஃபுல் ஃபேரிங் கிடையாது என்பதால், 161 கிலோ எடையுள்ள ஜிக்ஸர் SF 250 பைக்கைவிட இதன் எடை 6 கிலோ வரை குறைவாக இருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன! விலையில் இது யமஹா FZ 25, கேடிஎம் டியூக் 200 ஆகிய பைக்குகளுடன் போட்டிபோடும். ஜிக்ஸர் SF 250 பைக்கில் மோட்டோ ஜிபி எடிஷனை விரைவில் எதிர்பார்க்கலாம். இதில் இருக்கப்போகும் ரேஸிங் நீல நிறம், Fluorescent ரிம் ஸ்ட்ரிப், Ecstar கிராஃபிக்ஸ் ஆகியவை, சுஸூகியின் மோட்டோ ஜிபி பைக்கான GSX-RR-யை நினைவுபடுத்தும் விதத்தில் அமைந்திருக்கும். இது வழக்கமான கலர் ஆப்ஷன்களைவிட 1,000 ரூபாய் அதிக விலையில் வெளிவரலாம்.

பர்க்மேன் ஸ்ட்ரீட், ஆக்ஸஸ் 125 SE மற்றும் ஜிக்ஸர் SF 155 மோட்டோ ஜிபி எடிஷனில் என்ன ஸ்பெஷல்?

Access 125 SE
Access 125 SE
Suzuki India

கடந்தாண்டு இதே மாதத்தில் களமிறங்கிய பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரில், புதிதாக மேட் ஃபினிஷுடன் கூடிய கறுப்பு கலர் சேர்க்கப்பட்டிருக்கிறது விலையைப் போலவே (72,912 ரூபாய், சென்னை எக்ஸ்-ஷோரூம்), இந்த மேக்ஸி ஸ்கூட்டரின் டிசைன் - சிறப்பம்சங்கள் - பர்ஃபாமன்ஸ் ஆகியவற்றிலும் எந்த மாற்றமும் இன்றி களமிறங்கியிருக்கிறது. அதேபோலவே, சென்னை எக்ஸ்-ஷோரூம் விலையான 63,110 - 65,491 ரூபாய்க்கு, ஆக்ஸஸ் 125 SE ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது சுஸூகி.

Access 125 SE
Access 125 SE
Suzuki India

டிஸ்க் பிரேக் உடன் மட்டுமே கிடைக்கும் இது, வழக்கமான மாடலின் டிஸ்க் பிரேக் வேரியன்ட்டைவிட 1599 - 1697 ரூபாய் அதிக விலையில் வந்துள்ளது. ஸ்பெஷல் எடிஷன் என்பதைப் பறைசாற்றும் விதமாக, Metallic Matte Bordeaux எனும் கலர் - பீஜ் நிற சீட் - SE பேட்ஜிங் - கறுப்பு நிற அலாய் வீல்கள் - க்ரோம் ரியர் வியூ மிரர்கள் - DC சாக்கெட் - பிரவுன் நிற Inner Shield ஆகியவை இதற்கெனப் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ளன. மற்றபடி இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை.

தனது மோட்டோ ஜிபி பைக்கான GSX-RR பைக்கை நினைவுபடுத்தும் வகையில், ஜிக்ஸர் SF பைக்கின் மோட்டோ ஜிபி எடிஷனை விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது சுஸூகி. இது வழக்கமான கலர்களைவிட (1,10,510 ரூபாய், சென்னை எக்ஸ் ஷோரூம்) தோராயமாக 800 ரூபாய் அதிகமான விலைக்குக் கிடைக்கும் எனலாம். முந்தைய மாடலைப் போலவே, ரேஸிங் நீல நிறம் - Fluorescent ரிம் ஸ்ட்ரிப் - Ecstar கிராஃபிக்ஸ் ஆகியவை இங்கும் தொடர்கின்றன. மற்றபடி இதன் டிசைன், வசதிகள், பர்ஃபாமன்ஸ் ஆகியவை அதேதான்!

Gixxer 155
Gixxer 155
Suzuki India

புதிய ஜிக்ஸர் 155... இதில் என்ன சர்ப்ரைஸ் இருக்கிறது?

Gixxer 155
Gixxer 155
Suzuki India
Gixxer 155
Gixxer 155
Suzuki India

கடந்த மே மாதத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், களமிறங்கிய ஜிக்ஸர் SF 155-ன் நேக்கட் வெர்ஷனான ஜிக்ஸர் 155 பைக்கை, 1,00,852 எனும் சென்னை எக்ஸ் ஷோரும் விலையில் வெளியிட்டுள்ளது சுஸூகி. இது முந்தைய மாடலைவிடச் சுமார் 12,000 ரூபாய் அதிக விலைக்கு வந்திருப்பது கவனிக்கத்தக்கது. இதில் இருக்கும் LED ஹெட்லைட் புதிது. ஸ்ப்ளிட் சீட் வந்திருந்தாலும், சிங்கிள் பீஸ் ஹேண்டில்பாரே தொடர்கிறது. மற்றபடி ஜிக்ஸர் SF 155 பைக்கில் இருக்கும் அதே டிஜிட்டல் மீட்டர், டபுள் Barrel க்ரோம் எக்ஸாஸ்ட், LED டெயில் லைட், பெட்ரோல் டேங்க், அலாய் வீல்களே இங்கும் தொடர்கின்றன. மேலும் இதில் பொருத்தப்பட்டுள்ள இன்ஜின் - கியர்பாக்ஸ், பிரேக்ஸ் - சஸ்பென்ஷன் ஆகிய மெக்கானிக்கல் பாகங்களும், ஜிக்ஸர் SF 155 பைக்கில் இருப்பவையே!

இங்கே ஃபுல் ஃபேரிங் இல்லாத காரணத்தால், நேக்கட் ஸ்ட்ரீட் பைக்கான ஜிக்ஸர் 155-ன் எடை 6 கிலோ குறைந்திருக்கிறது (140 கிலோ). ஆனால் முந்தைய மாடலைவிட இதன் எடை 4 கிலோ அதிகம் என்பதுடன், 0.7bhp பவரும் குறைவு. ஆனால் கார்புரேட்டருக்குப் பதில் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் பொருத்தப்பட்டுள்ளதால், பவர் குறைபாடு தெரியாமல் போகலாம். இது பஜாஜ் பல்ஸர் NS 160 TD, ஹோண்டா CB ஹார்னெட் 160R DLX, டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V Fi, யமஹா FZS-Fi V3.0 ஆகிய பைக்குகளுடன் போட்டிபோடுகிறது, சுஸூகியின் புதிய ஜிக்ஸர் 155.