Published:Updated:

எத்தனாலில் ஓடும் டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 Fi 4V E100

நாடெங்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் சூழலில், சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்துவதில் தங்கள் பங்குக்கு, இந்த டூ-வீலரைக் களமிறக்கியுள்ளது டிவிஎஸ்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 Fi 4V E100... பெரிய பெயராக இருந்தாலும், இதுதான் எத்தனாலில் இயங்கக்கூடிய முதல் பைக்காக, இந்தியாவில் 1.2 லட்சத்துக்கு (எக்ஸ்-ஷோரூம் விலை) அறிமுகமாகி இருக்கிறது. இது இப்போது விற்பனையில் இருக்கும் அப்பாச்சியைவிட 9,000 ருபாய் அதிகம். நாடெங்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் சூழலில், சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்துவதில் தனது பங்காக, இந்த டூ-வீலரைக் களமிறக்கியுள்ளது டிவிஎஸ். முதற்கட்டமாக மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே அப்பாச்சி RTR 200 Fi 4V E100 விற்பனைக்கு வந்திருக்கிறது. இதைப் பற்றி பார்ப்பதற்கு முன்பு, 'எத்தனால் என்றால் என்ன?' எனும் கேள்விக்கான விடை அவசியமாகிறது.

TVS Apache RTR 200 Fi 4V E100
TVS Apache RTR 200 Fi 4V E100
TVS Motors

எத்தனால்.... E100.... அப்படினா என்ன பாஸ்?

Renewable Biofuel வகையறாக்களில் ஒன்றான எத்தனால், கரும்பு - சோளம் - கோதுமை போன்ற பயிர்கள் நொதிப்பதன் (Molasses) வாயிலாகக் கிடைக்கும். இந்தியாவில் இவை அதிகளவில் காணக்கிடைக்கிறது என்பது பெரிய ப்ளஸ். எனவே, வருடத்துக்கு 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கச்சா எண்ணெய் (சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக) மற்றும் பெட்ரோலியம் சார்ந்த தயாரிப்புகள் நம் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் நிலையில், மக்கும் தன்மைகொண்ட எத்தனாலை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது என்பது சிக்கனமாகவே இருக்கும். பெட்ரோலுடன் ஒப்பிடும்போது குறைவான நச்சுத்தன்மை கொண்ட எத்தனால், 35% ஆக்ஸிஜனைக் கொண்டுள்ளது; எனவே எரியூட்டப்படும்போது, பெட்ரோலைவிடக் குறைவான காற்று மாசையே (Carbon Monoxide, Particulate Matter, Sulphur Dioxide, Nitrogen) இது வெளிப்படுத்தும்.

இந்த அப்பாச்சியின் பெயரில் இடம்பெற்றிருக்கும் E100 என்பது, 100% எத்தனாலில் இயங்குவது எனப் பொருள். ஒருவேளை தேவையான எத்தனால் கிடைக்காத பட்சத்தில் E80, அதாவது (80% எத்தனால் மற்றும் 20% பெட்ரோல்) கலவையிலும் இந்த பைக் இயங்கும் என டிவிஎஸ் தெரிவித்துள்ளது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் அப்பாச்சிகள் போல, இதைப் பெட்ரோல் போட்டு ஓட்டமுடியாது மக்களே!

TVS Apache RTR 200 Fi 4V E100
TVS Apache RTR 200 Fi 4V E100
TVS Motors

வழக்கமான பைக்குக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

இரண்டுமே ஒரே டிசைன், சிறப்பம்சங்கள், மெக்கானிக்கல் பாகங்கள் ஆகியவற்றையே கொண்டுள்ளன. பிரேக்ஸ், சஸ்பென்ஷன், டயர்கள், லைட்டிங், டிஜிட்டல் மீட்டர், ஸ்ப்ளிட் சீட் - ஹேண்டில்பார் - கிராப் டெயில் என எல்லாமே அதேதான்! 12 லிட்டர் டேங்க்கின் கீழ்ப்பகுதியில் உள்ள பச்சை நிற பட்டையைத் தாண்டி, தோற்றத்தில் எந்த மாறுதலும் இல்லை. ஆனால், எத்தனாலில் இயங்கும்படி, 197.75சிசி - ஆயில் கூல்டு இன்ஜினில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ட்வின் போர்ட்கள், ட்வின் ஸ்ப்ரே பாணியில் உள்ள ஃப்யூல் இன்ஜெக்‌ஷன், அதிகரிக்கப்பட்ட கம்ப்ரஷன் ரேஷியோ ஆகியவை இதற்கான உதாரணம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனால் பெட்ரோல் அப்பாச்சி போலவே எத்தனால் அப்பாச்சியின் பர்ஃபாமன்ஸ் இருக்கும் எனத் தெரிகிறது. இயல்பிலேயே எத்தனால் துருப்பிடிக்கும் தன்மையைக் கொண்டது என்பதால், சில பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பாகங்களை அதற்கேற்ப மாற்றியிருக்கிறது டிவிஎஸ்.

TVS Apache RTR 200 Fi 4V E100
TVS Apache RTR 200 Fi 4V E100
TVS Motors

எத்தனாலுக்கு இந்தியாவில் இருக்கும் சிக்கல்கள் என்னென்ன?

வணிக ரீதியாக அதிகளவில் எத்தனாலை விநியோகம் செய்வது என்பது, இந்தியாவில் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. பெட்ரோல், டீசல், LPG, CNG போல எத்தனாலை வழங்கக்கூடிய பங்க்குகளை மத்திய அரசாங்கம் நிறுவும் முடிவில் இருக்கிறது. அவை எங்கே, எப்போது, எத்தனை? என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சரான நிதின் கட்கரி, எத்தனாலின் எதிர்காலத்தில் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். ஆனால், இவை எல்லாமே ஆரம்ப நிலையில் இருக்கின்றன என்பதுடன், எலெக்ட்ரிக் வாகனங்களைப் போலவே இதற்கும் முறையாக எந்தத் திட்டமும் வரையறுக்கப்படவில்லை. தவிர எத்தனாலைத் தரக்கூடிய பயிர்களின் வளர்ச்சிக்கு, அதிகளவில் தண்ணீர் தேவைப்படும். இந்தியாவில் தற்போது நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொள்ளும்போது, பின்னாளில் எத்தனாலில் தேவை அதிகரிக்கும்போது, அதன் உற்பத்திக்குத் தேவையான நீர் நிலைகள் உறுதிசெய்யப்பட வேண்டும்.

பெட்ரோலுடன் ஒப்பிடும்போது, எத்தனாலின் Calorific Value 34% குறைவாகவே உள்ளது. எனவே, பெட்ரோல் அப்பாச்சியுடன் ஒப்பிட்டால், அதற்கு இணையான பர்ஃபாமன்ஸைப் பெறுவதற்கு நிகர அளவில் அதிக எத்தனால் தேவைப்படும். ஆனால், பெட்ரோலைவிட எத்தனாலின் விலை குறைவு என்பதால், இந்த அப்பாச்சியின் ரன்னிங் காஸ்ட் குறைவாகவே இருக்கும் என்கிறது டிவிஎஸ். இந்த பைக்கின் அறிமுக விழாவில் பேசிய நிதின் கட்கரி, ஒரு லிட்டர் எத்தனாலின் விலையை 52 - 55 ரூபாய் வாக்கில் நிர்ணயம் செய்ய உள்ளதாகத் தெரிவித்தார்.

TVS Apache RTR 200 Fi 4V E100
TVS Apache RTR 200 Fi 4V E100
TVS Motors

இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 76 ரூபாய். எப்படிப் பார்த்தாலும், லிட்டருக்கு 21 - 24 ரூபாய் வரை மிச்சப்படுத்தலாம்! கடந்த 2003 - 2006 முதலாக, 21 மாநிலங்கள் மற்றும் 4 Union Territory-களில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலில், 5% வரை எத்தனால் கலக்கப்படுகிறது. இதனால் காற்று மாசு - கச்சா எண்ணெய் இறக்குமதி ஆகியவற்றை ஒருசேரக் குறைக்க முடியும் என்பதுடன், பெட்ரோலிய பொருள்களின் விலையும் கட்டுக்குள் வரலாம். தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டிருக்கும் கச்சா எண்ணெய் விலை மற்றும் காற்று மாசைக் கணக்கில் கொண்டு, இந்த அளவை 7.2% வரை அதிகரிக்கவும், 2022-ம் ஆண்டில் அதை 10% வரை கொண்டு செல்லும் முடிவில் மத்திய அரசு உள்ளது. எனவே, அப்பாச்சி RTR 200 Fi 4V E100, பஜாஜ் - ஹீரோ - மஹிந்திரா - ராயல் என்ஃபீல்டு போன்ற இந்திய நிறுவனங்களிடமிருந்து இதே போன்ற பைக்குகளுக்கு வழிவகுக்குமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு