Published:Updated:

இனி டீசல் கார்கள் வாங்குவது நஷ்டமா? - கார் மார்க்கெட்டின் கள நிலவரம் என்ன?!

சார்லஸ்.டி
ர.முகமது இல்யாஸ்

''டீசல் கார் வெச்சிருக்கீங்களா... இன்னும் சில வருஷத்துல டீசல் கார் விக்க தடைபோட்டுருவாங்க. அதனால டீசல் கார் வெச்சிருந்தா உடனே வித்துடுங்க!'' போன்ற தகவல்கள் வாட்ஸ்அப்பில் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கின்றன.

டீசல் இன்ஜின்
டீசல் இன்ஜின்

2020 முதல் டீசல் இன்ஜின்கொண்ட கார்களை விற்பனை செய்யப்போவதில்லை என மாருதி அறிவித்ததுதான் இந்த வாட்ஸ்அப் செய்திகளுக்கான ஆரம்பப்புள்ளி.

உண்மையில் டீசல் கார்களை நிறுத்தப்போவதாக மாருதி அறிவிக்க மூன்று முக்கியக் காரணங்கள் இருக்கின்றன.

Vikatan

பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலை வித்தியாசம் இப்போது குறைந்துவிட்டது. பெட்ரோலுக்கும், டீசலுக்குமான இடைவெளி குறைந்தபோதும், பெட்ரோல் காருக்கும், டீசல் காருக்கும் இடையிலான விலை வித்தியாசம் குறையவில்லை. பெட்ரோல் மாடலுக்கும், டீசல் மாடலுக்கும் கிட்டத்தட்ட1.50 லட்சம் வரை விலை வித்தியாசம் இருப்பதால் ஆரம்பத்தில் கொடுக்கும் எக்ஸ்ட்ரா காசுக்கு பெட்ரோல் போட்டுவிடலாம் என்கிற தெளிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள். இதனால் மாருதியில் டீசல் கார்களின் விற்பனை குறைந்துவிட்டது.

இரண்டாவது 1.3 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் என இரண்டு டீசல் இன்ஜின்களைத்தான் தனது கார்களில் விற்பனை செய்துவருகிறது மாருதி. இதில் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் மாருதியின் தயாரிப்பு அல்ல. ஃபியட்டிடம் இருந்து இந்த இன்ஜினை வாங்கிவருகிறது மாருதி. விற்பனை குறைந்துகொண்டே போகும் இச்சூழலில் டீசல் இன்ஜினை ஃபியட்டிடமிருந்து வாங்கவேண்டிய அவசியம் மாருதிக்கு இல்லை.

மூன்றாவது 2020 ஏப்ரலிலிருந்து பாரத் ஸ்டேஜ் 6 எமிஷன் அளவுகள் செயல்பாட்டுக்கு வருகின்றன. இந்த எமிஷன் அளவுகோலுக்கு ஏற்றபடி இன்ஜினில் மாற்றங்கள் செய்யப்படவேண்டும். இந்த மாற்றத்துக்கு அதிகப் பணம் செலவழிக்கவேண்டியிருக்கும். விற்பனை குறைந்துகொண்டே போகும் சூழலில் ஏன் இதற்குச் செலவழிக்கவேண்டும் என்கிற எண்ணத்தால்தான் டீசல் கார்களை நிறுத்தப்போவதாக அறிவித்திருக்கிறது மாருதி.

மாருதி ஸ்விஃப்ட், டிசையர், பிரெஸ்ஸா, பெலினோ, எஸ்-கிராஸ் ஆகிய கார்களில் 1.3 லிட்டர் டீசல் இன்ஜினைத் தற்போது விற்பனை செய்துவருகிறது மாருதி. எர்டிகா மற்றும் சியாஸில் மட்டுமே மாருதியின் சொந்த தயாரிப்பான 1.5லிட்டர் டீசல் இன்ஜின் இருக்கிறது.

''2020 ஏப்ரலுக்குப் பிறகும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுக்கான மார்க்கெட் இருந்தால் அதை பிஎஸ்6 அளவுக்கு ஏற்றபடி மாற்றி விற்பனைக்குக் கொண்டுவர யோசிப்போம்''
ஆர்.சி.பார்கவா, மாருதி சுசூகி இந்தியத் தலைவர்
மாருதி ஸ்விஃப்ட்
மாருதி ஸ்விஃப்ட்

ஆக டீசல் கார்களை நிறுத்தப்போவதாக அறிவித்தாலும் பிரீமியம் செக்மென்ட்டில் டீசல் கார்களுக்கான டிமாண்ட் தொடர்ந்து இருந்தால் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினை விற்பனைக்குக் கொண்டுவரலாம் என்பதுதான் மாருதியின் திட்டம்.

மாருதியை விட்டுவிட்டு கார்களின் விற்பனையை ஒட்டுமொத்தமாகப் பார்த்தாலும் டீசல் கார்களின் விற்பனை தடலாடியாகக் குறைந்திருப்பதுதான் உண்மை.

2010 முதல் 2012 வரை பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விற்பனை சரிக்குச் சமமாக இருந்தது. காரணம் அப்போது பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டுக்குமான விலை வித்தியாசம் 15 ரூபாய் என்கிற அளவில் இருந்தது. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 50 ரூபாய் என்றால் டீசலின் விலை 35 ரூபாய் என்கிற அளவில் இருந்தது. ஆனால், தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 76 ரூபாய் என்றால் டீசலின் விலை 70 ரூபாய். பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலை வித்தியாசம் 5-6 ரூபாய் என்கிற அளவில் சுருங்கிவிட்டது. 2013-ம் ஆண்டு முதலே டீசலின் விலை உயர்ந்துகொண்டே வந்ததால் டீசல் கார்களின் விற்பனையும் குறைந்துகொண்டே வந்தது. இதில் கடந்த ஆண்டு மட்டும் பெட்ரோல் கார்கள் 81 சதவிகிதம் விற்பனையான நிலையில் டீசல் கார்களின் விற்பனை வெறும் 19 சதவிகிதம் மட்டுமே விற்பனையானது.

காம்பேக்ட் கார்கள்
காம்பேக்ட் கார்கள்

சென்னையில் உள்ள மாருதி டீலர்ஷிப் உரிமையாளரிடம் பேசினேன். ''முன்பெல்லாம் ஒரு கார் வாங்கினால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது பயன்படுத்துவார்கள். ஆனால், இப்போது இது 3-5 ஆண்டுகளாக குறைந்துவிட்டது. டீசல் கார்களை வாங்கிப் பல ஆண்டுகள் பயன்படுத்தினால்தான் ஆரம்பத்தில் கொடுக்கும் அதிகத் தொகைக்கு அர்த்தம் இருக்கும். ஆனால் 3-5 ஆண்டுகளிலேயே காரை விற்பனைசெய்துவிட்டு வேறு கார் வாங்கும் திட்டத்துக்கு இப்போது வாடிக்கையாளர்கள் பழகிவிட்டதால் டீசலைத் தவிர்க்கிறார்கள். மேலும் பெட்ரோல்/டீசல் கார்களுக்கான ஸ்பேர் பார்ட்ஸ்களின் விலை ஒன்றுக்கொன்று கிட்டத்தட்ட சமமாக இருந்தாலும் சில மாடல்களில் விலை வித்தியாசம் அதிகமாகவே இருக்கிறது. இதனால் சர்வீஸிலும் செலவு அதிகமாகிறது. அதனால் டீசல் கார்களை வாங்குவது இனிமேலும் லாபம் இல்லை என்பதை வாடிக்கையாளர்கள் உணர்ந்துவிட்டார்கள்'' என்றார்.

குறைந்துகொண்டேபோகும் காம்பேக்ட் டீசல் கார்கள்!

2010-ம் ஆண்டுவாக்கில் டீசல் கார்களுக்கான டிமாண்ட் அதிகமாக இருந்ததால் சின்னச் சின்ன கார்களில்கூட டீசல் இன்ஜினைப் பொருத்திக்கொண்டிருந்தார்கள் கார் தயாரிப்பாளர்கள். செவர்லே பீட் காரில் கூட டீசல் இன்ஜின் வந்தது. ஆனால் இப்போது காம்பேக்ட் கார்களில் டீசல் இன்ஜினை வாடிக்கையாளர்கள் தவிர்த்துவிடுகிறார்கள்.

`பெட்ரோல், டீசல் மீது புதிய வரி; மின்சார வாகனங்களுக்கு சலுகை! மத்திய பட்ஜெட் 2019 முக்கிய அம்சங்கள்

2018 ஏப்ரல் முதல் 2019 மார்ச் வரையிலான விற்பனையில் டீசலுக்கும் பெட்ரோலுக்குமான விற்பனை வித்தியாசம் வெகு அதிகமாக இருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் ஸ்விஃப்ட்டின் பெட்ரோல் மாடல் 1,65,707 கார்கள் விற்பனையாகியிருக்க, டீசல் மாடலின் விற்பனை வெறும் 58,217 கார்களே. டீசல் கார்கள் அதிகம் விற்பனை செய்யும் டாடாவிலும் இதே நிலைதான். டாடா டியாகோவின் பெட்ரோல் மாடல் 79,909 கார்கள் விற்பனையாகியிருக்க, டீசல் மாடலின் விற்பனை வெறும் 12,460 கார்கள்தான். காம்பேக்ட் கார்களில் டொயோட்டா லிவா காரின் விற்பனை மட்டும்தான் பெட்ரோலைவிட டீசலின் விற்பனை அதிகம். ஃபோர்டு நிறுவனம் ஃபிகோ காரின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களை சரிக்குச் சமமாக விற்கிறது. இதற்குக் காரணம் பெட்ரோல் கார்களைவிட டீசல் கார்களின் பவர் அதிகம் என்பதே.

பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள்
பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள்
காம்பேக்ட் செடான்
காம்பேக்ட் செடான்
செடான்
செடான்
காம்பேக்ட் எஸ்யூவி
காம்பேக்ட் எஸ்யூவி
எஸ்யூவி
எஸ்யூவி

''இதற்கிடையே இன்டர்னல் கம்பஷன் இன்ஜின்கள் அடுத்த 20 ஆண்டுகளுக்கு இருக்கும். 2040-ம் ஆண்டுவாக்கில்தான் டீசல் இன்ஜின்கள் காணாமல் போகும்'' என்று சொல்லியிருக்கிறார் உலக அளவில் ஆட்டோபார்ட்ஸ் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் கான்ட்டினென்ட்டல் ஜிடி நிறுவனத்தின் சிஇஓ எல்மர் டிஜென்ஹார்ட். ''எலெக்ட்ரிக் கார்களைத் தயாரிப்பதற்கான செலவுகள் அடுத்த 20 ஆண்டுகளில் குறைந்துகொண்டேவரும். அப்போதுதான் டீசல்/பெட்ரோல் கார்கள் மார்க்கெட்டிலிருந்து வெளியேறும்'' என்றும் சொல்லியிருக்கிறார் டிஜென்ஹார்ட்.

Vikatan

யூஸ்டு கார் மார்க்கெட்டில் என்ன நடக்கிறது?

டீசல் கார்களை வாங்காதீங்க என்கிற பிரசாரங்கள் அதிகமாக நடந்துகொண்டிருந்தாலும் யூஸ்டு கார் மார்க்கெட்டில் டீசல் கார்களின் விற்பனையில் எந்தப் பாதிப்பும் இல்லை என்றே யூஸ்டு கார் விற்பனையாளர்கள் சொல்கிறார்கள். உண்மையில் சொல்லப்போனால் புதிய கார்களின் விற்பனைக்குறைந்துகொண்டே வரும் இச்சூழலில் யூஸ்டு கார்களின் விற்பனை உயர்ந்துவருகிறது. இதில் டீசல் கார்களை வாங்காமல் தவிர்க்கும்போக்கு யூஸ்டு கார் சந்தையில் இல்லை என்கிறார்கள் யூஸ்டு கார் நிறுவன உரிமையாளர்கள்.

இனி டீசல் கார்களை வாங்குவது நஷ்டமா? என்கிற கேள்விக்கு வந்துவிடுவோம். விலை குறைவான பட்ஜெட் கார்களில் டீசல் மாடலை வாங்குவது நஷ்டமே. செடான், எஸ்யூவி கார்களில் டீசல் கார்களே அதிகம் விற்பனையாலும் டீசலின் விலை உயர்ந்துகொண்டே வரும்பட்சத்தில் விற்பனை பாதிக்கும் அபாயம் இருக்கிறது. காரணம் பெட்ரோலுக்கும், டீசலுக்கும் மைலேஜில் பெரிய வித்தியாசங்கள் இல்லை.

அடுத்த ஆண்டு பிஎஸ்6 விதிமுறைகள் அமலுக்கு வரும்போது பெட்ரோல் கார்களின் விலை 1 லட்சம் ரூபாய் வரையும், டீசல் கார்களின் விலை 1.50 லட்சம் ரூபாய் வரையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டீசல் கார்களின் விலை ஒருபக்கம் உயர்வதைப்போல, டீசலின் விலையும் உயர்ந்துகொண்டே போனால் டீசல் கார்களின் விற்பனை நிச்சயம் குறையும்.

ஒரு காரின் விற்பனை குறைந்தால் தானாகவே அதன் ரீ-சேல் மதிப்பும் குறையும். தற்போதைய சூழலில் விற்பனை குறைந்துகொண்டேபோவதால் டீசல் கார்களில் இருந்து விலகியிருப்பதே நல்லது!