நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

நாட்டியம் முதல் கோயில் வரை... நகைத் தொழிலில் ஜொலிக்கும் நாகர்கோவில்!

நகைத் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
News
நகைத் தொழில்

ஜி.ஐ பிசினஸ்

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அங்கமாக இருந்தபோது வடசேரி பகுதியைச் சேர்ந்த நகைத் தொழிலாளர்கள் மன்னர்களுக்கு நெருக்கமாக இருந்தனர். பக்தி மிகுந்த திருவிதாங்கூர் அரச குடும்பத்தினர் கோயில் நகைகள் செய்வதற்கும், அரச குடும்பத்தினருக்கு நகைகள் செய்வதற்கும் வடசேரியைச் சேர்ந்த நகைத் தொழிலாளர் களையே பயன்படுத்தியுள்ளனர்.

திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் இருந்து இன்றுவரை கோயில் நகைகள் செய்ய நாகர்கோவிலின் வடசேரி பகுதி புகழ்மிக்கதாக விளங்குகிறது. கோவில் நகைகள் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் முழுவதும் கைகளாலேயே செய்யப்படுகிறது. அதனால் இது கைவினைப் பொருள்களின் பட்டியலில் வருகிறது. நாகர்கோவில் வடசேரியில் பாரம்பர்யமா கோவில் நகைகள் செய்வதால், 2016-ம் வருஷம் நாகர்கோவில் கோயில் நகைகளுக்குப் புவிசார் குறியீடு தரப்பட்டது. வடசேரியில் நான்கு தெருக்களில் ஒவ்வொரு வீட்டிலும் குடிசைத் தொழில் போன்று கோயில் நகைகள் செய்யும் பணிநடைபெற்று வருகிறது. வீட்டையே பட்டறையாக்கி, பல தலைமுறைகளாக பாரம்பர்யமாக கோயில் நகை செய்துவரும் முத்து சிவத்தின் பட்டறைக்குச் சென்றோம்.

நாட்டியம் முதல் கோயில் வரை... நகைத் தொழிலில் ஜொலிக்கும் நாகர்கோவில்!

“நாங்க பரம்பரையாகக் கோயில் நகை தயாரிக்கும் தொழிலைத்தான் செய்துகிட்டு வருகிறோம். ஆரம்ப காலத்தில சொக்கத் தங்கத்தில ஜாதிக்கல் வச்சு கோயில் நகைகள் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. முதல்ல கோயிலுக்கும், அரசர்களுக்கும் மட்டும்தான் இந்த நகைகளை பண்ணிகிட்டு இருந்தாங்க. அந்தக் காலத்தில ஜாதி கற்களை வச்சு சுத்தமான தங்கத்தை அஞ்சு அடுக்கு, ஆறு அடுக்கு வைப்பாங்க. அதன்பிறகு டிசைன் பண்ணுவாங்க. தங்க இழைகளை அடுக்கடுக்கா வச்சு உருவாக்குவதை இட்டிச் செதுக்குறதுன்னு சொல்வோம்.

தங்கம் விலை ஏறியதால காலமாற்றத்துக்கு தகுந்தாற்போல தங்கத்தின் பயன்பாட்டைக் குறைச்சுகிட்டு, வெள்ளியின் பயன்பாட்டைக் கூட்டிகிட்டு ரேட்டுக்கு தகுந்தாப்ல செய்து கிட்டிருக்கோம். இப்ப 75 சதமானம் வெள்ளியும், 25 சதமானம் தங்கத்திலயுமா கோயில் நகை செய்துகிட்டு இருக்கிறோம். குச்சல் சிவப்பு, ஜாதிக்கல், வைடூரியம், வெள்ளை நிற புஷ்ப ராகம் போன்ற கற்களை முன்னாடி பயன்படுத்தினோம். அதெல்லாம் விலை அதிகம்ங்கிறதால, விலை குறைஞ்ச கார்நெட் சிவப்புக் கல் பயன்படுத்துறோம். மற்ற கலர் கல்லெல்லாம் கிளாஸ்ல ஆனதுதான் பயன்படுத்துறோம். ஆனா, நகை செய்ய சுத்தமான 24 காரட் தங்கமும், சுத்தமான புல் டச் வெள்ளியும்தான் பயன்படுத்துறோம்” என முன்னுரை தந்தார்.

“நான் 25 வயசில இந்த வேலைக்கு வந்தேன்; இப்ப எனக்கு 65 வயசு ஆவுது. பரம்பரைத் தொழில்ங்கிறதுனால பார்த்து பார்த்து பழகிகிட்டேன். முன்னால இருநூறு குடும்பங்கள் கோயில் நகை செய்யும் தொழிலைச் செய்துகிட்டு இருந்தாங்க. கொரோனா காரணமா ஆர்டர் இல்லாததுனால, அவங்க வேறவேற வேலைக்குப் போயிட்டாங்க. இப்ப நூறு குடும்பம்தான் இந்தத் தொழிலைச் செஞ்சுகிட்டு இருக்கு.

கோயில் நகைகள் ஆகம விதிப்படி செய்ய வேண்டும். இப்ப தெய்வத்துக்கு நகை செய்றது குறைஞ்சுப்போச்சு. கோயில் ஆர்டர் எல்லாம் வர்றது இல்ல. தெய்வக் கலையான பரதநாட்டியத்துக்குத்தான் நகை செய்துகொடுக்கிறோம். பரதம் ஆடுறவங்க கோயில் நகைகளை அணியுறாங்க. சொல்லப்போனா, பரதநாட்டியம்தான் எங்கள வாழ வச்சுகிட்டு இருக்கு. கேரள மாநிலத்திலேயும், அமெரிக்கா, கனடா, ஸ்விட்சர்லாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்தும் தமிழர்கள் நிறைய ஆர்டர் தர்றாங்க.

முன்பு வடசேரியில உற்பத்திப் பண்ணக்கூடியதில பாதி நகைகள் சென்னை போன்ற இடங்களில் ஷோரூம்களில் விற்பனைக்கு போயிரும். வாட்ஸ் அப், ஃபேஸ்புக் வந்ததால, இப்ப நேரடியா எங்ககிட்ட பலர் நகை வாங்குறாங்க. அதனால வாங்குற வங்களுக்கும் லாபம், எங்க ளுக்கும் லாபம்” என்றவர், செய்முறை பற்றியும், நகைகளின் வகைகளைப் பற்றியும் விரிவாகப் பேசினார்.

நாட்டியம் முதல் கோயில் வரை... நகைத் தொழிலில் ஜொலிக்கும் நாகர்கோவில்!

“பரதநாட்டியத்துக்கு சூரியன் சந்திரன், நெற்றிச்சுட்டி எல்லாம் சேர்ந்து வரும் தலைசெட், மூக்குத்தி, கம்மல், ஜிமிக்கி, மாட்டல், நெக்லஸ், லாங் மாலை, ஒட்டியாணம், கையில மாட்டுற வங்கி, ஜடை அலங்காரம் என நிறைய நகைகள் செய்றோம். என்ன டிசைன் வேணுமோ, அந்த டிசைனை முதல்ல வெள்ளியில செய்து எடுப்போம். அதுல அரக்கு வச்சு தங்கத்தை ஹீட் பண்ணி பொதிச்சிருவோம். அதுக்குமேல கற்களைப் பதிப் போம். அதன்பிறகு, அரக்கு களை எடுத்துக்கிட்டு கற்களுக்கு இடையில பல்லெடுத்து, தங்கத்தை வெட்டி அதில நிரப்பு வோம். அதுக்குப் பிறகு ஹீட் பண்ணி நல்லா செட்பண்ண வைப்போம். கடைசியா பாலிஸ் பண்ணுற டூல் வச்சு தங்கத்தை அமுக்கினா, நல்ல பலமா புடிச்சுகிடும்.

கம்மல் போல சின்ன நகை களை ஒரே நாளில செய்திரலாம். நெக்லஸ் போன்ற நகைகளை செய்ய ஒரு வாரம் ஆவும். வெள்ளியை பேஸ் பண்ண ரெண்டு, மூணு நாள் ஆவும். வேக்ஸ் வச்சு டிசைன் பண்ண ஒருநாள் ஆவும். நகை முழுசா முடிந்து வெளியே வரணும்னா ஒரு வாரம் ஆவும். அதிலயும் தலைசாமன் செய்ய 15 நாள் வரை ஆயிரும்” என்றவர் வருவாய் பற்றிப் பேசினார்.

“கொரோனாவுக்கு முன்பு ஒரு ஆள் ஒரு மாதம் அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை நகை செய்து பிசினஸ் செய்தாங்க. சம்பளம், போக்குவரத்துச் செலவு எல்லாம் போக, சுமார் 50,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். நகை செய்யும் தொழிலாளர் களுக்கு ஒருநாள் 1,000 ரூபாய் வரை சம்பளம் இருக்கிறது. கொரோனா சமயத்தில சுத்தமா இல்லாம இருந்த தொழில் இப்பத்தான் மெல்ல பழைய நிலைக்குத் திரும்புது. முன்னாடி மொபைல் போன் இல்லாததுனால சென்னையில நகையை கடைக் காரங்ககிட்டதான் விப்போம். விலை கொறைச்சு கேட்டா, வேற வழியில்லாம கொடுத்திருவோம். இப்ப மொபைல் மூலம் தொடர்புகள் நிறைய கிடைக் கிறதுனால நாங்க நேரடியாவே வாடிக்கையாளர்கள்கிட்ட விற்பனை செய்றோம். இடைத் தரகர்கள் இல்லாததுனால பார்ட்டிக்கும் லாபமா இருக்கும், எங்களுக்கும் லாபம்.

இப்ப அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில ஆர்டர் வருது. கோவிட்ல இருந்து கேரளா சீரானாதான் எங்க தொழிலும் சீராகும். வாட்ஸ்அப்பில மாடல் போட்டோ அனுப்பி கேட்போம். அவங்க சொல்ற மாடல்ல நகையைச் செய்து கூரியர்ல அனுப்பி வைப்போம். அவங்க ஆன்லைன் மூலம் பணம் அனுப்பி வைப்பாங்க. ஒவ்வொரு வாடிக்கையாளர் மூலமாகவும் வேறு வாடிக்கையாளர்கள் கிடைக்கிறாங்க. நகை செய்றதுக்கு முன்னாடி அவங்ககிட்ட சின்ன அட்வான்ஸ் அனுப்பச் சொல்லுவோம். நாங்க நகையை அனுப்பின பிறகு, அவங்க முழுத்தொகையையும் அனுப்புவாங்க. இந்தக் கொடுக்கல், வாங்கலில் இதுவரையும் பிரச்னை இல்லாம போகுது. ஆஸ்திரேலியா, கனடா, ஸ்விட்சர்லாந்து, துபாய் நாடுகளில இருந்து ஆர்டர் வந்துகிட்டுதான் இருக்கு.

பரதநாட்டிய கலைஞர்கள் அணியும் ராக்கொடி, மாங்காய் மாலை, மரகண்டி மாலை, உச்சி வில்லை, தலை அலங்காரம், குஞ்சலம், மூக்குத்தி, கை வங்கி, ஒட்டியாணம், தோடு, ஜிமிக்கி, தலைசாமான், பாளைக்கா நெக்லஸ், மாட்டல் என 25 வகையான நகைகள் உண்டு.

கோயில் நகைகளுக்கு செய்கூலி, சேதாரம் எனத் தனி ரேட் கிடையாது. ஒரு பீசுக்கு இவ்வளவு ரூபாய் என விலை இருக்கிறது. லாங் மாலையில முத்து மாலையும் இருக்கு, மாங்கா மாலையும் இருக்கு. ஹெட் செட் எனப்படும் தலைசாமான் 12,000 ரூபாயில ஆரம்பிச்சு 22,000 ரூபாய் வரைக்கும் இருக்கு. முத்துமாலை 10,000 ரூபாயில இருந்தே இருக்கு. மாங்கா ஆரம் 25,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரைக்கும் இருக்கு. கம்மல் 2,000 முதல் 5,000 வரை இருக்கு. மாலை 20,000 ரூபாயில இருந்தே இருக்கு. ஒட்டியாணம் 25,000 ரூபாயில இருந்தே இருக்கு. மாட்டல் 3,500 ரூபாயில இருந்தே இருக்கு. தலையின் பின்பக்கம் வைக்கும் ராக்கொடி 8,000 ரூபாயில இருந்தே இருக்கு. எல்லா நகை களும் டிசைன் மற்றும் அளவைப் பொறுத்து விலை மாறுபடும்” எனப் பேசி முடித்தார்.

நகைகள் பராமரிப்பு எப்படி..?

மேக்கப் பண்ணும்போதும் மேக்கப் பொருள்களில் உள்ள கெமிக்கல் காரணமாக நகை கறுப்பாகும். அதுபோல தங்க நகைகள் வைக்கக்கூடிய வெல்வெட் பாக்ஸில் வைத்தாலும் இந்த நகைகள் கறுப்பாகும். இரும்பு பீரோவும் நகைகளை வைக்க ஏற்ற இடம் அல்ல. மரபீரோவில் வைத்தால் மட்டுமே இந்த நகைகள் எதுவும் செய்யாது. நகைகள் ஐந்து, பத்து ஆண்டுகளில் நகை கறுத்துப் பொலிவிழந்தால் அவற்றின் மீது தங்கத்தை கரைத்து ஊற்றி ரீபாலீஸ் செய்கிறார்கள். அதற்கு நகைகளின் அளவைப் பொறுத்து, 2,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை வாங்குகிறார்கள்.