Published:Updated:

பிசினஸ் பெருமகன்களுக்கு பெருமரியாதை!

நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ்’ நிகழ்ச்சி
பிரீமியம் ஸ்டோரி
News
நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ்’ நிகழ்ச்சி

எந்தவொரு தொழில் நிறுவனம், தன் ஊழியர்களை ரிஸ்க் எடுக்க ஊக்குவிக்கிறதோ, அந்நிறுவனம் நிச்சயம் அதிக வளர்ச்சி அடையும்

‘தொழில் உயர... குடி உயரும்’ என்று புதுமொழி சொல்லும் வகையில், நாட்டின் தொழில்துறையை உயர்த்தி, பொருளாதாரத்தையும் உயர்த்திக் கொண்டிருக்கும் சாதனைத் தொழில் முனைவோர்களைப் பாராட்டும் நிகழ்வான ‘நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ்’ வழங்கும் நிகழ்ச்சி, கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது.

விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் வரவேற்புரையாற்றினார். தலைமை விருந்தினராகப் பங்கேற்றார், தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன். “தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த ஒன்றரை ஆண்டுகளில் மூன்று வகையான திட்டங்களில் ரூ.586 கோடி மானியத்துடன் 2,343 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டு 16,746 தொழில்முனைவோர்களைத் தமிழக அரசு உருவாக்கியிருக்கிறது’’ என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.

வைத்தீஸ்வரன், டாக்டர் அரவிந்தன், கார்த்திக் ஜெயராமன், ‘டான்ஸ்டியா' மாரியப்பன், எம்.ஆனந்தன், விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், அசோக் ஜுன்ஜுன்வாலா, ஸ்வரண் சிங்
வைத்தீஸ்வரன், டாக்டர் அரவிந்தன், கார்த்திக் ஜெயராமன், ‘டான்ஸ்டியா' மாரியப்பன், எம்.ஆனந்தன், விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், அசோக் ஜுன்ஜுன்வாலா, ஸ்வரண் சிங்

சிறப்புரையாற்றிய கவின்கேர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் சி.கே.ரங்கநாதன், ‘‘எந்தவொரு தொழில் நிறுவனம், தன் ஊழியர்களை ரிஸ்க் எடுக்க ஊக்குவிக்கிறதோ, அந்நிறுவனம் நிச்சயம் அதிக வளர்ச்சி அடையும்” என்றார் முத்தாய்ப்பாக.

அடுத்து விருது வழங்கும் நிகழ்ச்சி ஆரம்பமானது.

* ‘ஸ்டார்ட் அப் சாம்பியன் அவார்டு’, வேகூல் நிறுவனத்தின் எம்.டி-யான கார்த்திக் ஜெயராமனுக்கு. இவ்விருதை மேட்ரிமோனி.காம் நிறுவனத்தின் சி.இ.ஓ முருகவேல் ஜானகிராமன் மற்றும் இன்டெக்ரா நிறுவனத்தின் சி.இ.ஓ ஸ்ரீராம் சுப்ரமணியம் ஆகியோர் வழங்கினார்கள்.

“தமிழ்நாட்டில்தான் தொழில் தொடங்கு வதற்குப் பாதுகாப்பான பாதை இருக்கிறது” என்று அழுத்தமாகக் குறிப்பிட்டார், கார்த்திக் ஜெயராமன்.

* ‘பிசினஸ் இன்னோவேஷன் அவார்டு’, காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர்- எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் டாக்டர் அரவிந்தனுக்கு. இதை, பாரத் எஃப்.ஐ.ஹெச் நிறுவனத்தின் எம்.டி-யான ஜோஸ் ஃபாகுலர் வழங்கினார்.

*‘சோஷியல் கான்சியஸ்னஸ் ஆன்ட்ரபிரனர் அவார்டு’ டி.வி.எஸ் குழுமத்தின் அங்கமான ஸ்ரீநிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட்டுக்கு வழங்கப்பட்டது. ராயல் கிளாசிக் குரூப் நிறுவன எம்.டி-யான டி.ஆர்.சிவராம் மற்றும் அப்போலோ மருத்துவமனையின் சி.இ.ஓ நவீன் இருவரிடமிருந்து, டிரஸ்ட்டின் சேர்மன் ஸ்வரண் சிங் விருதைப் பெற்றுக்கொண்டார்.

தா.மோ.அன்பரசன்
தா.மோ.அன்பரசன்

* ‘பிசினஸ் மென்டார் அவார்டு’ ஐ.ஐ.டி.எம் பேராசிரியர் அசோக் ஜுன்ஜுன்வாலாவுக்கு, கவின்கேர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் சி.கே.ரங்கநாதன் வழங்கினார்.

* சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல்களைச் செய்துவரும் ‘டான்ஸ்டியா’ அமைப்புக்கு, ‘பிசினஸ் மென்டார் அவார்டு’ (இன்ஸ்டிட்டியூஷன்) வழங்கினார் முன்னாள் அமைச்சரும், மாஃபா மற்றும் சி.ஐ.இ.எல் குழும எம்.டி-யுமான பாண்டியராஜன்.

* பீனிக்ஸ் ஆன்ட்ரபிரனர் விருதை, ‘எகைன் ட்ரிங்ஸ்’ ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் நிறுவனரான வைத்தீஸ்வரனுக்கு வழங்கினார், ‘மில்க்கி மிஸ்ட்’ நிறுவனத்தின் சி.இ.ஓ-வான சதீஷ்குமார்.

* குக்கிராமத்தில் பிறந்து, உழைப்பால் மிகப் பெரும் செல்வந்தராக மாறியிருக்கும் ‘ஆப்டஸ் வேல்யூ ஹவுஸிங் ஃபைனான்ஸ்’ நிறுவனத்தின் சேர்மன் மற்றும் எம்.டி-யான எம்.ஆனந்தனுக்கு ‘செல்ஃப்மேட் ஆன்ட்ரபிரனர் அவார்டு’, ஃபிரான்டியர் லைஃப்லைன் மருத்துவமனையின் தலைவர் மற்றும் சி.இ.ஓ-வான டாக்டர் செரியனுடன், பொன்ப்யூர் கெமிக்கல்ஸ் நிறுவன சேர்மன் மற்றும் எம்.டி-யான எம். பொன்னுசுவாமி இணைந்து வழங்க, விருதுகள் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது!

பிசினஸ் பெருமகன்களுக்கு பெருமரியாதை!